இ ந்திய நாடாளுமன்றத்தின் ராஜ்ய சபாவில் இன்றைய அமர்வின்போது இலங்கைத் தமிழர் பிரச்சினையையா அல்லதுஊழல் விவகாரத்தையா விவாதத்திற்கு எடுத்துக்கொள்வது என்பது தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டது. இறுதியில் ஊழல் விவகாரத்தையே விவாதத்திற்கு எடுத்துக்கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.
இந்திய நாடாளுமன்றத்தின் இரு விடயங்களும் விவாதத்திற்கான பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது. பாரதிய ஜனதா கட்சி (பி.ஜே.பி.) எம்.பிகள், ஊழல் விவகாரத்தை முதலில் விவாதிக்க வேண்டும் எனக் கூறினர். இடதுசாரிகள், திமுக, அதிமுக உட்பட வேறு பலர் இலங்கைத் தமிழர் பிரச்சினையை முதலில் விவாதிக்க வேண்டும் எனக் கூறினர்.
இந்நிலையில் சபை 15 நிமிட நேரம் ஒத்திவைக்கப்பட்டதன் பின்னர், ஊழல் விவகாரத்தை முதலில் விவாதிப்பதென தீர்மானிக்கப்பட்டது. இத்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.பிகள் வெளிநடப்புச் செய்தனர்.
கேள்வி நேரத்தின்பின்னர் இலங்கைத் தமிழர் நிலைமை குறித்து விவாதிப்பதற்கு சபையின் பிரதித் தலைவர் கே.ரஹ்மான் அழைப்பு விடுத்தார். எனினும் இதற்கு ஆட்சேபம் தெரிவித்த பி.ஜே.பி.,ஊழல் விடயத்தையே முதலில் விவாதிக்க வேண்டும் என்றது.
இலங்கைத் தமிழர் விவகாரத்தை நாளை வியாழக்கிழமை விவாதிக்கலாம் என பிஜேபி எம்.பி. எஸ்.எஸ். அஹ்லுவாலியா கூறினார்.
'நாமும் இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்த விவாதத்தில் ஆர்வமாக உள்ளோம். நான் இது தொடர்பாக அறிவித்தலொன்றையும் விடுத்தேன். இவ்விவகாரம் காரணமாக இச்சபை (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைக்கப்பட்டது' என்றார் அவர்.
அப்போது தமிழக எம்.பிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்த விவாதம் ஏற்கெனவே தாமதமாகியுள்ளது எனவும் எனவே அதை முதலில் விவாதிக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறினர்.
அஇஅதிமுக, திமுக, மற்றும் இடதுசாரி கட்சிகள் இலங்கைத் தமிழர் விவகாரத்தை முதலில் விவாதிக்க ஆதரவு தெரிவித்தனர்.
அப்போது இந்திய நாடாளுமன்ற விவகார துணை அமைச்சர் ராஜீவ் சுக்லா, அரசாங்கம் இரு விவாதங்களுக்கும் தயார் எனவும் எதிர்க்கட்சிகளுக்குத் தேவையானதை முதலில் விவாதிக்கலாம் எனவும் கூறினார்.
அதையடுத்து 15 நிமிடங்களுக்கு சபை ஒத்திவைக்கப்பட்டது. சபை மீண்டும் கூடியவுடன் ஊழல் விவகாரத்தை முதலில் விவாதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபையின் பிரதித் தலைவர் அறிவித்தார். எதிர்க்கட்சித் தலைவருடனான கலந்துரையாடலையடுத்து இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர்கூறினார்.
இந்நிலையில் திமுக எம்.பிகள் வெளிநடப்புச் செய்ய, எதிர்க்கட்சித் தலைவர் அருன் ஜெட்லி ஊழல் தொடர்பான விவாதத்தை ஆரம்பித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’