த மிழினத்தை பூண்டோடு அழிப்பதற்கான நடவடிக்கை இராணுவத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பதனால் அவசரகாலச் சட்டம் உடனடியாக நீக்கப்பட்டு தமிழர் தாயகத்திலுள்ள இராணுவத்தினரை வாபஸ் பெற வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. யான மாவை சேனாதிராஜா வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்; இலங்கையில் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அரசாங்கம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி அறிவித்த போதிலும் தமிழினத்தை பூண்டோடு அழிக்கும் நடவடிக்கைகளையே முன்னெடுக்கிறது. விடுதலைப் புலிகளின் பெயரைக் கூறிக் கொண்டு தந்தை செல்வாவின் கோட்பாடுகளையும் தமிழின அடையாளங்களையும் அழித்து தமிழினத்தை பூண்டோடு அழிக்கும் செயற்பாட்டை இராணுவத்தின் ஊடாக அரசு முன்னெடுத்து வருகின்றது. தமிழர் தாயகத்தை சிங்கள மயமாக்கவும் பௌத்த மயமாக்கவும் அரசாங்கம் முயற்சிக்கின்றது. சிங்களக் குடியேற்றங்கள் தமிழர் பகுதிகளிலும் இடம்பெறுகின்றன. தமிழர் ஆட்சிப் பகுதியில் சிங்கள மீனவர்களின் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. விவசாய நிலங்கள் பறிக்கப்படுகின்றன. சகல இடங்களிலும் இராணுவ முகாம்கள் அமைக்கப்படுகின்றன. உயர் நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி வலிகாமம் வடக்கில் கூட அரைவாசிப்பகுதி இன்னும் இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கின்றது. இராணுவத்தை கொண்டே பல்வேறு வன்முறைகள் தற்போது இடம்பெறுகின்றன. இராணுவம் ஜனாதிபதியின் கீழ் இருப்பதனால் இந்த விடயத்தில் நாம் அரசாங்கத்தின் மீதே குற்றஞ்சாட்ட வேண்டியுள்ளது. சனல் 4 வை குற்றம்சாட்டுகின்றனர். யுத்தம் நடைபெற்றபோது வன்னி மாவட்டத்தில் 4 இலட்சத்து 20ஆயிரம் பொதுமக்கள் இருப்பதாக அரச அதிபரும் உலக உணவுத்திட்டமும் அறிக்கையிட்டபோது அங்கு எழுபதினாயிரம் பொதுமக்கள் இருப்பதாகவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார். பொதுமக்களின் அழிவை பொருட்படுத்தவில்லை என்ற அரசின் திட்டத்தை முன்கூட்டியே இது தெரிவிக்கப்பட்டதொன்றாகும். யுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் வவுனியா அகதி முகாம்களுக்கு 3 இலட்சத்து 17 ஆயிரம் பேர் அகதிகளாக வந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளதென அரசு கூறியது. முதலில் 70 ஆயிரம் என கூறிய அரசு பின்னர் 3 இலட்சத்து 17ஆயிரம் என்றது. அரசாங்கத்தின் கூற்றின் பிரகாரம் 4 இலட்சத்து 20 ஆயிரம் பேரின் 3 இலட்சத்து 17ஆயிரம் பேர் அகதி முகாம்களுக்கு வந்திருந்தால் மிகுதி 1 இலட்சத்து 3ஆயிரம் பேர் எங்கே என்பதுதான் எமது கேள்வியாகும். அக்கேள்வியை கேட்பதற்கு எமக்கு உரிமையில்லையா? தமிழ் மக்கள் மீது ஜனநாயக ரீதியில் மேற்கொள்ளப்பட்டதுபோன்ற ஒரு படையெடுப்பே அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சிமன்ற தேர்தலாகும். தமிழ் மக்கள் மிக உறுதியாக தமது உரிமைக்குரலை அந்தத் தேர்தலில் வெளிப்படுத்தினர். எமது தாயகத்தில் எம்மை சுதந்திரமாக வாழவிடுங்கள் எமது அரசியல் உரிமைகளை தாருங்கள் என்ற செய்தியை இந்த அரசுக்கு மட்டுமன்றி முழு உலகிற்கும் வெளிப்படுத்தினர் என்பதனால் அரசு இக் கோரிக்கை ஏற்கவேண்டுமென்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’