சிங்கள கடற்படையினரிடம் சிக்கி தமிழக மீனவர்கள் படும் பாடுகளை திரைப்படமாக உருவாக்குகிறார் மணிரத்னம்.
இந்தப் படத்துக்கான கதை வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதுகிறார்.
தமிழக மீனவர்களுக்கும் சிங்கள கடற்படையினருக்கும் பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. நடுக்கடலில் தமிழ் மீனவர்களை மடக்கி நிர்வாணப்படுத்தி துன்புறுத்தும் சிங்கள வெறியர்கள், பல நேரங்களில் சுட்டுக் கொன்றுவிடுவதும், கைது செய்து இலங்கைச் சிறைகளில் அடைப்பதும் தொடர்கிறது.
இதனை இந்திய அரசு இதுவரை தட்டிக் கேட்கவில்லை. தமிழக அரசின் எதிர்ப்புக் குரலை பொருட்படுத்துவதும் இல்லை மத்திய அரசு.
இந்த தொடர் அவலத்தை ஜெயமோகன் கதை வசனத்தில் ஒரு திரைப்படமாக உருவாக்குகிறார் மணிரத்னம்.
இந்தப் படத்தில் ஹீரோ ஹீரோயின் என அனைவரும் புதியவர்களே. ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க, ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏற்கெனவே பம்பாய் படத்தில் மணிரத்னமும் ராஜீவ் மேனனும் இணைந்து பணியாற்றியுள்ளனர். இந்தப் படத்தை முழுக்க முழுக்க கன்னியாகுமரி மற்றும் ராமேஸ்வர கடற்கரைகளில், கடல்பகுதிகளில் எடுக்கிறாராம் மணிரத்னம்.
கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் விடுதலைப் புலிகளின் போராட்டம் குறித்து அரைகுறையாக கருத்து ('இது ஆயுத வியாபாரிகளின் போராட்டம்') சொல்லி தமிழ் உணர்வாளர்களின் கண்டனத்துக்கு ஆளானவர் மணிரத்னம். இந்த முறை மீண்டும் ஒரு உணர்ச்சிப்பூர்வமான விஷயத்தைக் கையிலெடுக்கிறார்.
அதை எப்படி எடுக்கப் போகிறார் என்பதை தமிழ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறார்கள்!
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’