எ திர்க்கட்சித் தலைவரொருவரின் குரலை செவிமடுப்பதும் அவரது கருத்துக்களுக்கு மதிப்பளிப்பதும் ஜனநாயக நீரோட்டத்தில் உள்ள அனைவரும் பின்பற்ற வேண்டிய விடயமாகும். எமது நாட்டிலும் இதுவே நடைபெற வேண்டும்" என அரசாங்கத்தின் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று பிற்பகல், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.
இதன்போது, 'எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக அரசாங்கம் செயற்படுகிறதா? அதனாலேயே, ஐ.தே.க. சீர்த்திருத்தவாதிகளினால் நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தவிடாது செய்வதற்காக சிறிகொத்தாவுக்கு செல்லும் வீதி மூடப்பட்டதா?" என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அந்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் கூறியதாவது,
'கட்சிக்குள் நிலவும் பிரச்சினைக்குள் அரசாங்கம் என்ற ரீதியில் நாம் தலையிட முடியாது. இது கட்சியின் உள்ளகப் பிரச்சினை. இருப்பினும் நாடொன்றின் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரின் குரலுக்கு மதிப்பளிக்க வேண்டிய கடப்பாடு ஜனநாயக நீரோட்டத்திலுள்ள அனைவருக்கும் உள்ளது.
அத்துடன், சிறிகொத்தாவிலுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு முன்பாக அக்கட்சியின் சீர்த்திருத்தவாதிகள் சத்தியாக்கிரகம் செய்யவிருந்த நிலையில் அவ்வீதி மூடப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றோம்.
சிறிகொத்தாவுக்கு அருகிலுள்ள வீதி மீண்டும் கார்பட் போடப்பட்டமையினாலேயே அவ்வீதி மூடப்பட்டதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இருப்பினும் குறித்த வீதிக்கு அவசரமாக கார்பட் போட வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்றும் அதற்கு உரிய விளக்கமளிக்குமாறும் அதற்கான விசாரணைகளை முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரியுள்ளார். இதன் பிரகாரம் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன' என்று அமைச்சர் கெஹெலிய மேலும் குறிப்பிட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’