வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

படை முகாம்களை அமைக்கும் முயற்சியில் அரசாங்கத்துக்கு பூதங்களின் உதவி தேவையில்லை: கெஹெலிய

'நாடு முழுவதிலும் இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம்கள் அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காகவே கிறீஸ் பூதங்களை அரசாங்கம் பயன்படுத்தி வருகின்றது என்ற செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை.
மேற்படி பூதங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியமும் அரசாங்கத்துக்கு இல்லை' என்று அரசாங்கத்தின் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு, இன்று வியாழக்கிழமை பிற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் ஒருவர், 'நாட்டின் பாதுகாப்பைப் பேண வேண்டிய பொலிஸார் பலவீனப்பட்டுள்ளனர் என்பதை நாட்டு மக்களுக்கு புரிய வைத்து, அதன் பின்னணியில் நாடு முழுவதிலும் பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவ முகாம்களை அமைக்கும் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும், இதற்காகவே கிறீஸ் பூதங்கள் என்ற சிலரை கட்டவிழ்த்து விட்டு அரசாங்கம் வேடிக்கைப் பார்ப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளனவே, இதன் உண்மைத் தன்மை என்ன?' என்ற கேள்வியை எழுப்பினார். இந்தக் கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், 'நாடு முழுவதிலும் பாதுகாப்பு படை முகாம்கள் அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை உண்மையானதே. இருப்பினும் இவற்றை அமைக்க கிறீஸ் பூதங்களை ஏவி விட வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இல்லை. கிறீஸ் பூதங்கள், மர்ம மனிதர்கள் என்ற போர்வையில் சிற்சில தீய சக்திகள் செயற்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவ்வாறான தீய சக்திகளின் தேவை என்ன? அவர்கள் யார்? என்பது தொடர்பில் பொலிஸார் உட்பட அனைத்து தரப்பினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கிறீஸ் பூதங்களை அடக்கும் பின்னணியில் சட்டத்தைக் கையில் எடுக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை. அதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்கப் போவதும் இல்லை. அவ்வாறு சட்டத்தைக் கையில் எடுத்து செயற்பட முயற்சிப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’