வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 15 ஜூலை, 2011

தீவகத்திற்கு கூட்டமைப்பு வேட்பாளர்கள் செல்லமுடியாது தொடர்ந்தும் அச்சுறுத்தல்: மாவை

யாழ். தீவகப் பகுதிக்கு உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரப் பணிக்கு தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்லமுடியாது இருப்பதுடன் தீவகத்திலுள்ள தமது வேட்பாளர்களும் யாழ். நகருக்கு வரமுடியாது இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான கலந்துரையாடல் யாழ். அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருமான திருமதி இமெல்டா சுகுமார் தலைமையில் பிரதி தேர்தல் ஆணையாளர் எம்.எம். மொஹமட், யாழ். உதவித் தேர்தல் ஆணையாளர் ஆ.வி. கருணாநிதி முன்னிலையில் நடைபெற்றது. இந்த சந்திப்பின்போதே இவ்விடயம் எடுத்துக் கூறப்பட்டது.
இது தொடர்பாக மாவை எம்.பி. மேலும் தெரிவிக்கையில், நீதியானதும் நியாயமானதும் சுதந்திரமானதுமான தேர்தலே நடைபெறவேண்டும். ஆனால் வடபகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக தொடர்ந்தும் அச்சுறுத்தல் மற்றும் வன்முறை சம்பவங்களே இடம்பெற்று வருகின்றன. பொலிஸாருக்கும் தேர்தல் வன்முறை முறைப்பாட்டு மையத்திற்கும் முறைப்பாடுகள் அனுப்பப்படுகின்றன. ஆனால் என்ன நடக்கின்றது என்பது பற்றித் தெரியவில்லை.
தேர்தலில் வல்வெட்டித்துறை, தீவகப் பகுதிகள் மிகவும் வன்முறை நிறைந்ததாகவே உள்ளன. தீவகத்தில் நாம் செல்ல முடியாத அளவில் இருக்கிறோம். எமது வேட்பாளர்கள் பிரசாரம் செய்வதற்கும் தடையேற்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்கள் வீடுகளுக்கு செல்லவும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த சூழலை நாம் எவ்வாறு கூறுவது?. எமது பிரசார செயற்பாடுகளுக்கு பொலிஸார் பாதுகாப்பு ஏற்பாடு செய்து தரவேண்டும் எனத் தெரிவித்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த வல்வெட்டித்துறை வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவாஜிலிங்கம், இந்தத் தேர்தல் நீதியாக நடத்தப்படும் என்றே நாம் தேர்தலில் போட்டியிடுகின்றோம். ஆனால் இங்கு வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
கடந்த தேர்தல் காலத்தில் நல்லூரில் அமைச்சரின் பதாதை அமைக்கப்பட்டது. இதுவரை கழற்றப்படவில்லை. இதை அகற்றுமாறு கோரியிருந்தும் பொலிஸார் அதனை அகற்றவில்லை.
எனது வீட்டிற்கு 9 ஆம் திகதி அதிகாலை 3 மணிக்கு கற்களாலும் கழிவுகளாலும் எறிந்துள்ளார்கள். இது தொடர்பில் பொலிஸாருக்கு உடனடியாக அறிவித்தேன். அப்பகுதி பொலிஸ் அத்தியட்சர் அரை மணித்தியாலத்தில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறும் தெரிவித்தார். ஆனால் எனது வீட்டிலிருந்து 200 மீற்றர் தூரத்தில் இராணுவ முகாம், பொலிஸ் நிலையம் ஆகியன இருக்கின்றன. அவ்வாறானால் அந்த நேரத்தில் வாகனத்தில் வந்தவர்களை பொலிஸாரோ இராணுவத்தினரோ மறித்து விசாரணை செய்யாதது ஏன்? . இது ஒருபக்க செயற்பாடு தான்.
யாழ். குடாவிலுள்ள பிரதேச, நகர சபைகளுக்கு அமைச்சர்கள் எம்.பி. க்கள் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளனர். நெடுந்தீவில் கிழக்கு மாகாண ஆளுநர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது எவ்வாறு நியமனம் செய்யமுடியும். இவரை நியமிப்பது என்றால் பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டும். கிழக்கு மாகாண ஆளுநர் முன்னாள் கடற்படை அதிகாரி இந்த நிலையில் நெடுந்தீவிற்கு நியமித்து தமிழரசுக் கட்சியை அங்கு செல்லவிடாது தடுப்பதே இதன் நோக்கமாகும்.
பாடசாலைகள், பிரதேச செயலகங்களில் தேர்தல் பிரசாரம் நடைபெறுகின்ற போதும் இதை தடுப்பதற்கு எவரும் முன்வரவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’