இயக்குநர் பாரதிராஜா தனது 70-வது பிறந்த நாளை குற்றாலத்தில் கொண்டாடினார்.
குற்றாலம் ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா இலஞ்சியுள்ள தனியார் ஹோட்டலில் நேற்று மாலை நடந்தது. இவ் விழாவில் இயக்குநர் பாரதிராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது,
வாழ்க்கையில் மனிதன் கண்டிப்பாக சேவை செய்ய வேண்டும். வாழும் காலத்தில் தானம் கொடுத்து பழகிவிட்டால் அதை விட சுகமானது வேறொன்றும் இல்லை. அற்புதமான சுகம் தர்ம செயல்கள் செய்யும்போது கிடைக்கும். ஒரு ஊடகத்திற்கு இருக்கும் பொறுப்பை போல் பொது சேவையாற்றும் தொண்டு நிறுவனங்கள், அமைப்புகளுக்கும் கடமை உள்ளது.
அரசியலுக்கு அப்பாற்பட்டு பொது பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும். காவிரி, முல்லை பெரியாறு நீர்த்தேக்க பிரச்சனை, இனப்படுகொலை, இனஅழிப்பு, லட்சக்கணக்கான மக்கள் உயிரிழப்பு நிகழ்வுக்கெல்லாம் பொது நல அமைப்புகள் குரல் கொடுக்க வேண்டும்.
நாற்கலி கனவுகளில் இருந்து விலகி இருக்கும் சமூக சேவை இயக்குநர்கள் குரல் கொடுக்க தொடங்கினால் நாடெங்கும் அக்குரல் எதிரொலிக்கும். மொழி, இனம் என அனைத்தையும் இழந்துவிட்டு நிற்கிறோம். தாயை இழப்பதும், மொழியை இழப்பதும் ஒன்று தான். நாட்டில் போலியோவை ஒழி்த்த உங்கள் இயக்கம் லஞ்சம், ஊழலையும் ஒழிக்க பாடுபட வேண்டும்.
நாம் சம்பாதித்த பணத்தை மற்றவர்களுக்கு ஏன் லஞ்சமாகத் தர வேண்டும். லஞ்சம் வாங்கி பிழைப்பு நடத்துவதை விட கேவலமானது எதுமில்லை. மடங்களிலும், சாமியார் வீடுகளிலும், கோடி கோடியாய் பணம் கிடைக்கிறது. ஆனால் எந்த துறையாவது விசாரணை நடத்துகிறார்களா, எங்களை போல் உழைப்பவர்களிடம் தான் வருமான வரி சோதனை செய்கிறார்கள்.
ஜாதி, மதம் அரசியலுக்கு அப்பாற்பட்டு பொது சேவை அமைப்புகள் பொது மக்களின் பிரச்சனைகளுக்காகவும், களத்தில் இறங்கி குரல் கொடுக்க வேண்டும். மனிதன் இதயத்தை சுத்தமாக்கினால் அவனை அனைத்தும் தேடி வரும். ஒவ்வொருவரும் தன்னை பெற்ற தாயை மதிக்க கற்றுக் கொண்டால் சமுதாயத்தில் மரியாதை தானாகவே உயர்ந்து தலை நிமிர முடியும் என்றார்.
பின்னர் இரவு 9.30 மணி அளவில் ரோட்டரி பிரமுகர்களுடன் கேக் வெட்டி தனது 70-வது பிறந்த நாளை கொண்டாடினார். பட்டுகோட்டை சட்டமன்ற உறுப்பினர் ரெங்கராஜ் பேசும்போது, ஒரு அரசால் மக்களுக்காக அனைத்து திட்டங்களையும் முழுமையாக செயல்படுத்த முடியாது. ஆனால் இதுபோன்ற சங்கங்கள் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது என்றார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’