வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 25 மே, 2011

இராணுவ முகாம்களை நிறுவுவதை கைவிடவேண்டும்: த.தே.கூ

நா டு முழுவதிலும் இராணுவ முகாம்களை நிறுவுவதற்கான பாதுகாப்பு அமைச்சின் தீர்மானமானது தற்போதிருக்கும் குடும்ப ஆட்சியை எதிர்காலத்தில் இராணுவ ஆட்சியாக மாற்றியமைப்பதற்கான முதற்கட்டமாக அமைந்துள்ளது எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கம் இத்திட்டத்தை உடனடியாக கைவிடவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

புலிகளின் அமைப்பு ஒழித்துக் கட்டப்பட்டு விட்டதாக சர்வதேசத்துக்கு தம்பட்டம் அடிக்கின்ற நிலையில் உள்ளூரிலோ அல்லது அந்நிய சக்திகளிடத்திருந்தோ இலங்கை மண்ணுக்கு பாதகம் இல்லை என்பது தெளிவுபட்டிருக்கின்ற போதிலும் இவ்வாறான இராணுவ முகாம்கள் நிறுவப்படுவதற்கான அவசியம் அவசரம் என்ன என்றும் கூட்டமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது.
அவசரகாலச் சட்டம் நீக்கப்படவேண்டுமென பல்வேறு தரப்புக்களிடமிருந்தும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்ற நிலையில் நாடு முழுவதிலும் இராணுவ முகாம்களை அமைப்பதற்கான அரசின் திட்டம் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே கூட்டமைப்பின் பேச்சாளரும் எம்.பியுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்: இன்றைய சூழலில் அவசரகாலச்சட்டம் என்பது அவசியமற்றது. எனவே அது இரத்துச் செய்யப்படவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையோ இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியிருக்கின்றது. இதனையே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பாகிய நாமும் தொடர்ச்சியாக கூறிவருகின்றோம். அதேபோல் அவசரகாலச்சட்டத்துக்கு பாராளுமன்றத்துக்கு எமது எதிர்ப்பையும் வெளிக்காட்டி வருகின்றோம்.
எமது வரிசையில் அண்மைக்காலமாக ஐக்கிய தேசியக்கட்சியும் ஜே.வி.பியும் இணைந்து கொண்டிருக்கின்றன. அவசரகாலச் சட்டத்துக்கான தேவை அற்றுப்போய்விட்டதை அக்கட்சிகள் வலியுறுத்தி வருகின்ற அதேவேளை பாராளுமன்றத்தில் அதற்கான பிரேரணைக்கு எதிராகவும் செயற்பட்டு வருகின்றன.
கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக இந்தியாவும் இவ்விடயம் தொடர்பில் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்கின்றது. எனினும் எந்தத்தரப்பினதும் அறிவுறுத்தல்களை அல்லது வலியுறுத்தல்களையும் ஏற்றுக் கொள்கின்ற நிலையில் அரசாங்கம் இல்லை என்பது தெளிவாகின்றது.
புலிகள் அழிக்கப்பட்டுவிட்டதாக அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருக்கின்ற அதேவேளை தமது இராணுவத்தால் புலிகள் அழிக்கப்பட்டுவிட்டதாக உலக நாடுகளுக்கு அரசாங்கம் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் இங்கு அவசரகாலச்சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டு வருவது எந்த விதத்திலும் ஏற்கத்தகாத விடயமாகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’