வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

கித்துள் பனைமரங்கள் மூலம் தேசிய வருமானத்தை பெருக்க பாரிய திட்டம்

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வழிநடத்தலின் கீழ் இந்நாட்டில் கித்துள் மற்றும் பனை மரங்களின் மூலம் தேசிய வருமானத்தை பெருக்குவதற்கான பாரிய அபிவிருத்தி திட்டமொன்றை அரசாங்கம் இப்பொழுது துரிதகதியில் மேற்கொண்டு வருகின்றது.

கித்துள் மற்றும் பனை மரங்களில் ஏறுவதற்கு அனுமதிப் பத்திரம் தேவைப்பட்டது. இப்போது அந்த நடைமுறையை அரசாங்கம் நீக்கியுள்ளது. இனிமேல் அனுமதிப் பத்திரம் பெற வேண்டிய அவசியமில்லை. கித்துள் மற்றும் பனை மரங்களிலிருந்து கள் இறக்கி அதன் மூலம் பாணியை தயாரித்து நாட்டிலுள்ள பாமர மக்களின் வருமானத்தை அதிகரிப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அலரிமாளிகையில் நடந்த நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இலங்கையில் 29 இலட்சத்து ஏழாயிரம் கித்துள் மரங்கள் இருக்கின்ற போதிலும் அவற்றில் 15 சதவீதமான அதாவது 90 ஆயிரம் கித்துள் மரங்களில் இருந்தே கள் மற்றும் கித்துள் பாணி வர்த்தக ரீதியில் பெறப்படுகின்றது என்று தெரிவித்தார்.

தற்போது இலங்கை சீனியை இறக்குமதி செய்ய 40 மில்லியன் ரூபாவரை செலவு செய்கின்றது. கித்துள் பாணியை கூடுதலாக உற்பத்தி செய்தால் சீனி இறக்குமதிக்கான செலவை 50 சதவீதம் குறைத்துவிடலாம் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

ஒரு கித்துள் மரத்தில் இருந்து ஒருவருக்கு மாதம் ஒன்றுக்கு 10 000 முதல் 20 ஆயிரம் ரூபா வரை வருமானம் பெறமுடியும். கித்துள் மரமொன்றில் இருந்து நாளொன்றுக்கு 8 லீற்றர் பதனீரை பெற்று அதியியர் தர கித்துள் பாணியையும் கித்துள் கருப்பட்டியையும் தயாரித்து சந்தைப்படுத்தி நாட்டின் தேசிய வருமானத்தை பெருக்க முடியும் என்று சுட்டிக்காட்டியிருக்கும் ஜனாதிபதி அவர்கள் இவற்றை ஜப்பான் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வி. சிவஞானசோதி கித்துள் அபிவிருத்தி திட்டம் பற்றி மேலும் விளக்கமளிக்கையில் இரத்தினபுரி மாவட்டத்தின் இம்புல்பே பிரதேச செயலக பிரிவின் கீழ் உள்ள பகுதியில் கித்துள் மரங்கள் பெருமளவில் காணப்படுவதாக கூறினார்.

கித்துள் மரங்கள் மற்றும் பனை மரங்கள் மக்களுக்கு நல்ல வருமானத்தை பெற்றுக் கொடுக்க கூடியதாக இருக்கின்ற போதிலும் இன்றைய இளைஞர்கள் மரம் ஏறும் தொழிலை ஒரு தாழ்ந்த தொழிலாக கருதி அதில் ஈடுபடுவதற்கு தயக்கம் காட்டி காரியாலயத்தில் அமர்ந்து செய்யும் தொழில்கள் மீதே ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்று தெரிவித்த சிவஞானசோதி தொழிலின் மகத்துவத்தை உணர்த்த கூடிய வகையில் எமது இளைஞர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி செய்யும் தொழிலே தெய்வம் என்ற உணர்வை அவர்கள் மத்தியில் வலுவடையச் செய்வதற்கு தங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வழிநடத்தலின் கீழ் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

கித்துள் மரம் தென்னை பனை மரங்களை போன்று மக்களின் வாழ்க்கையில் பல வகையில் உதவக் கூடிய பயனுள்ள மரமாகும். கித்துள் மர இலையை வீடுகளை வேய்வதற்கும் அதன் பலகையை கூரைகளை நிர்மாணிக்கவும் மக்கள் பயன்படுத்தலாம். கித்துள் மரத்தில் இருந்து கித்துள் பாணி கள் போன்றவற்றை பெறுவதுடன் சிறந்த போஷாக்கு உணவான கித்துள் மாவும் தயாரிக்கப்படுகின்றது.

கித்துள் பாணி மற்றும் கருப்பட்டி நீரிழிவு நோயாளிகளுக்கு எவ்விதத்திலும் தீங்கிழைக்காத தன்மையை கொண்டிருக்கி ன்றது. ஒரு கித்துள் மரம் வளர்ந்து பயனளிக்க 10 ஆண்டு காலம் எடுக்கின்றது. 2013 ஆண்டில் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் கித்துள் மரங்களின் மூலம் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் பேருக்கு மாதமொன்றுக்கு சராசரியாக 15 முதல் 25 ஆயிரம் ரூபாவை வருமானமாக பெறும் நிலை இப்பொழுது உருவாகிக் கொண்டிருக்கின்றது.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’