வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 2 மார்ச், 2011

பயிற்சி முடித்த விடுதலைப் புலிகள் விடுவிப்பு

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பின்னர் இராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வுப் பயிற்சியை முடித்துக் கொண்ட மூன்று பெண்கள் உட்பட 106 பேர் சிவராத்திரியை முன்னிட்டு விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

இவர்கள் வவுனியாவில் வைத்து புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க அவர்களினால் அவர்களது உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளார்கள்.
அத்துடன் புனர்வாழ்வின் பின்னர், ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டு புனர்வாழ்வு ஆணையளாரின் விசேட ஏற்பாட்டில் முன்பள்ளி ஆசிரியைகளுக்கான பயிற்சி நெறியை முடித்துக் கொண்ட 26 யுவதிகளுக்குச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டிருக்கின்றன.
இந்தப் பயிற்சி நெறிக்கு லீட்ஸ் எனப்படும் தொண்டு நிறுவனம் அனுசரணை வழங்கியிருந்தது. துறைசார்ந்த ஆசிரியர்கள், விரிவுரையாளர்களைக் கொண்டு இந்தப் பயிற்சியை வடமாகாண கல்வி அமைச்சு வழங்கியிருந்ததாக அமைச்சின் பிள்ளைப்பருவ அபிவிருத்திப் பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரி செல்வி ஜெயா தம்பையா கூறினார்.
இந்த யுவதிகள் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து விடுதலையாவதற்கு முன்னதாகவே லீட்ஸ் நிறுவனம் கல்வித்தகைமைகளுக்கமைய பயிற்சிக்குரியவர்களைத் தெரிவு செய்திருந்தது. இந்தப் பயிற்சியின் மூலம் தங்களுக்குத் தகுந்த தொழில் வாய்ப்பு கிடைக்கும் என்று அந்தப் பெண்கள் நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றார்கள்.
தேசிய மட்டத்தில் சமூகங்களிடையே சமாதானத்தையும், ஒருங்கிணைப்பையும் ஏற்படுத்துவதற்கும், சிறுவர் பாதுகாப்பு, அவசர நிவாரணம் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் புனர்வாழ்வுச் செயற்பாடுகள் என்பவற்றில் ஈடுபட்டு வந்த தமது நிறுவனம் இந்த யுவதிகள் சமூகத்தில் நம்பிக்கையோடு இணைவதற்கு வசதியாக முன்பள்ளி ஆசிரியைகளுக்கான இந்தப் பயிற்சியை ஏற்பாடு செய்திருந்ததாக லீட்ஸ் நிறுவனம் கூறுகின்றது.
இதற்கிடையில் இன்னும் 4500 பேர் புனர்வாழ்வு நிலையங்களில் பயிற்சி பெற்று வருவதாகவும். அவர்களும் படிப்படியாக விடுதலை செய்யப்பட்டுவிடுவார்கள் என்றும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க பிபிசியிடம் கூறினார். அதேவேளை, விடுதலை செய்யப்படுபவர்கள் புதிய வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கென பல்வேறு உதவித் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’