வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 16 மார்ச், 2011

ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய ராசாவின் நண்பர் சாதிக் பாட்சா தற்கொலை-சிபிஐ விசாரணை

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய முன்னாள் அமைச்சர் ஏ.ராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக் பாட்சா இன்று திடீரென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சாதிக் பாட்சாவின் தற்கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராசாவின் சொந்த ஊரான பெரம்பலூரைச் சேர்ந்தவர் சாதிக் பாட்சா. ராசாவும் இவரும் நெருங்கிய நண்பர்கள். சென்னையில் கிரீன் ஹவுஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்து வந்தார். ராசா அமைச்சரான பின்னர்தான் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது என்பதால் இவரும் ஸ்பெக்ட்ரம் விசாரணை வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராசா சிக்கி பதவியிழந்ததைத் தொடர்ந்து அவருக்கு நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள் வீடுகள், அலுவலகங்களில் சிபிஐ அதிரடி ரெய்டு நடத்தியது. ரெய்டுக்குள்ளானவர்களில் சாதிக் பாட்சாவும் ஒருவர்.
இன்று உச்சநீதிமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் தொடர்பான வழக்கில் விசாரணை நிலவர அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்தது. மேலும், மார்ச் 31ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் கூறியிருந்தது.
இந்த நிலையில் சென்னையில் உள்ள தனது வீட்டில் பாட்சா இன்று தற்கொலை செய்து கொண்டார். தேனாம்பேட்டையில் பாட்சாவின் வீடு உள்ளது.
இன்று பிற்பகல் அவரது அறை நீண்ட நேரமாக மூடியிருந்ததைப் பார்த்த அவரது உறவினர்கள், அறைக் கதவை உடைத்து உள்ளே போய்ப் பார்த்தபோது சாதிக் பாட்சா தூக்கில் தொங்கியபடி இருந்ததைப் பார்த்து அதிர்ந்தனர். உடனடியாக அவரது உடலை அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
காலை 9 மணிக்குள் அவர் தூக்குப் போட்டிருக்கலாம் என்றும் டாக்டர்கள் கூறியுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
பாட்சாவின் மரணம், ஸ்பெக்ட்ரம் வழக்கில் பல திருப்பங்களை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
இந்த தற்கொலை குறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏன் தற்கொலை?-சிபிஐ விசாரணை!:

சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்டது குறித்து தீவிர விசாரணை நடத்துமாறு சிபிஐ உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக டெல்லி சிபிஐ தலைமையகத்திலிருந்து சென்னையில் உள்ள சிபிஐ அதிகாரிகளுக்கு உத்தரவு வந்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சாதிக் பாட்சா ஒரு முக்கிய நபர் என்பதால் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால்தான் சிபிஐ சாதிக் பாட்சா மரணம் குறித்த விசாரணையில் இறங்கியுள்ளது.
மேலும், ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை உச்சநீதிமன்றம் நேரடியாக கண்காணித்து வருவதால் சிபிஐக்கும் இது பெரும் சிக்கலை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் பாட்சாவின் மறைவால் ஸ்பெக்ட்ரம் விசாரணை எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்று சிபிஐ அறிவித்துள்ளது.

பிரேதப் பரிசோதனை:

சாதிக் பாட்சாவின் உடல் தற்போது அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து சென்னை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு பிரேதப் பரிசோதனை நடத்தப்படும். அதன் பின்னரே அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்றுகாவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தூக்குப் போட்டு தான் மரணம்-அப்பல்லோ:

இதற்கிடையே, சாதிக் பாட்சா மரணம் குறித்து சென்னை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் விளக்கியுள்ளது. சாதிக் பாட்சா தூக்குப் போட்டதால்தான் உயிரிழந்துள்ளார். இது தற்கொலைதான் என்று விசாரணை மேற்கொண்ட போலீஸாரிடம் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

பாட்ஷா அப்ரூவராக மாற இருந்தாரா?:

இதற்கிடையே இன்று டெல்லி செல்வதற்காக சாதிக் பாட்ஷா டிக்கெட் வாங்கி வைத்திருந்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் அப்ரூவராக திட்டமிட்டிருந்தார் என்றும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.
சாதிக் பாட்ஷா தூக்கில் தொங்கிய சமயத்தில், அவரது வீட்டில் மனைவியோ அல்லது குழந்தைகளோ இல்லை என்றும் தகவல் தெரிய வந்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’