வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 4 மார்ச், 2011

இடம்பெயர்ந்த மக்கள் குடியேற்றப்பட்ட பின்னரே வடக்கு மாகாண சபை தேர்தல்

டக்கில் முழுமையாக நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு அங்கு இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் மீள்குடியேற்றப்பட்ட பின்னரே வடக்கு மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும். அதற்கு இன்னும் சில மாதங்கள் எடுக்கலாம். எனினும் வடக்கு, கிழக்கு மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்தியது எமது அரசாங்கமேயாகும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.

64 உள்ளூராட்சிமன்றங்களுக்கான தேர்தல்கள் பிற்போடப்பட்டுள்ளமைக்கு அரசாங்கத்தை குற்றம் சுமத்துவதில் அர்த்தமில்லை. அது நீதிமன்ற மற்றும் தேர்தல் திணைக்கள செயற்பாடாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை கூறினார்.

அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது

அரசாங்கம் ஆரம்பத்தில் 301 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தலை நடத்த தீர்மானித்தது. அதற்கான வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் பல இடங்களில் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதனை எதிர்த்து ஆளும் கட்சி எதிர்க்கட்சி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தன. இதனையடுத்து முதற்கட்டமாக மூன்று சபைகளுக்கான தேர்தலை பிற்போடுமாறு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. அதன் பின்னர் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள 64 சபைகளுக்குமான தேர்தலை தேர்தல்கள் ஆணையாளர் பிற்போடுவதற்கு நடவடிக்கை எடுத்தார். தேர்தல் ஆணையாளர் விளக்கினார்.
இந்நிலையில் தேர்தல்கள் ஆணøயாளர் அண்மையில் அரசியல் கட்சிகளின் செயலாளர்களை சந்தித்து பேச்சு நடத்தினார். நானும் அதில் கலந்துகொண்டிருந்தேன். அப்போது 64 சபைகளுக்கான தேர்தல் ஏன் பிற்போடப்பட்டது என்பதற்கான காரணத்தை தேர்தல் ஆணையாளர் கட்சிகளின் செயலாளர்களுக்கு விளக்கிக்கூறினார். அப்போது அரசியல் கட்சிகள் எந்த எதிர்ப்பையும் வெளியிடவில்லை. தேர்தல்கள் சட்டங்கள் மீறப்படுவதாகவும் அரச வளங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றுமே அவர்கள் குறிப்பிட்டனர்.

எம்மை குற்றம் சாட்டுவதில் அர்த்தமில்லை

ஆனால் வெளியில் வந்து தேர்தல்கள் பிற்போடப்பட்டுள்ளமை தொடர்பில் தேர்தல் மேடைகளில் எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தை விமர்சிக்கின்றனர். அதனால்தான் நான் இந்த இடத்தில் உண்மையை விளக்கினேன். இந்த விடயத்தில் அரசாங்கத்தை குற்றம் சாட்டுவதில் எந்தவிதமõன அர்த்தமும் இல்லை. தேர்தலை பிற்போட அரசாங்கம் முயற்சிக்கவில்லை. நீதிமன்றமும் தேர்தல் திணைக்களமும் இதனை செய்துள்ளன. எனவே இந்த விடயத்தில் விளக்கமளிப்பது அவசியம் என்பதால் விளக்கினேன்.

திடீர் கவலை

வெளிநாட்டுக்கு சென்றுவிட்டு வந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுகின்றார். தற்போது பண்டாரநாயக்கவின் சிலை தொடர்பில் அவருக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதனை நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம். முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவின் பிரஜா உரிமையை ரத்துச் செய்தபோது இந்த ரணில் விக்ரமசிங்க என்ன செய்துகொண்டிருந்தார்? வரலாற்றில் சுதந்திரக் கட்சியை கட்டுடைப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி என்ன வேலைகளை செய்தது என்று மக்களுக்கு தெரியும். தற்போது சஜித் பிரேமதாசவுடன் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் இணைந்துகொண்டுள்ளதால் சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களை இணைத்துக்கொள்வதில் ரணில் விக்ரமசிங்க முயற்சிக்கின்றாரா?

தோல்விக்கு காரணம்

வடக்கில் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி ஐக்கிய தேசிய கட்சி என்பன போட்டியிடுகின்றன. மக்கள் விடுதலை முன்னணி யாழ்ப்பாணத்துக்கு சென்று பேசுகின்றது. அண்மையில் சோமவங்ச சமஷ்டி குறித்தும் பேசியுள்ளார். அவர்கள் இவ்வாறு தமது அரசியல் கொள்கைகளை மாற்றிக்கொள்வதன் மூலம் உறுதியான கொள்கை இல்லை என்பதனை வெளிக்காட்டுகின்றனர். இவைதான் இந்தக் கட்சிகளின் தோல்விக்கு காரணமாகும்.

மனிதாபிமான நடவடிக்கையின் இறுதிக் கட்டத்தின்போது மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்தனர். அரசாங்கம் அவர்களை நன்றாக கவனித்தது. ஆனால் நாங்கள் அவர்களை மீள்குடியேற்றமாட்டோம் என்று எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்து வெளிநாடுகளுக்கு தேவையானதை செய்தனர். எனினும் அரசாங்கம் மக்களை மீள்குடியேற்றியது. 10 ஆயிரம் மக்களே தற்போது முகாம்களில் உள்ளனர். நிலக்கண்ணிவெடி அகற்றப்பட்டுள்ள அனைத்து இடங்களிலும் மக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர்.

ஜனநாயகத்தை நாங்களே உறுதிபடுத்தினோம்

இன்று வடக்கில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு வவுனியா மன்னார் ஆகிய இடங்களில் தேர்தல் நடக்கின்றது. இதற்கு என்ன காரணம்? எமது அரசாஙகம் அந்த பகுதியில் ஜனநாயகத்தை உறுபடுத்தியமையே இவற்றுக்கு காரணமாகும். அதனால்தான் மக்கள் விடுதலை முன்னணி ஐக்கிய தேசிய கட்சி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் இன்று அங்கு அரசியல் செய்கின்றன. நல்லூர் கோவிலுக்கு எதிர்க்கட்சிகளின் பிரதிநிதகிள் சென்று வருவதை காண்கின்றோம். 2006 ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தலின்போது நான் இப்பகுதியில் விமானம் மற்றும் யுத்த தாங்கியில் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தேன்.

தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை எமது அரசாங்கமே உறுதிபடுத்தியது. 2006 ஆம் ஆண்டு கிழக்கு மீட்கப்பட்டதும் அங்கு உள்ளூராட்சி தேர்தலும் மாகாண சபை தேர்தலும் நடத்தப்பட்டன.

சில மாதங்கள் எடுக்கலாம்

இதேவேளை வடக்கு மாகாண சபை தேர்தலை நடத்த இன்னும் சில மாதங்கள் எடுக்கலாம். வடக்கில் முழுமையாக நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு அங்கு இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் மீள்குடியேற்றப்பட்ட பின்னரே வடக்கு மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும். அதற்கு இன்னும் சில மாதங்கள் எடுக்கலாம்.

இம்முறை கூட முல்லைத்தீவு மாவட்டத்தில் சில பிரதேசங்களில் தேர்தல் நடத்தப்படவில்லை. காரணம் நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பாமையும் மக்கள் மீள்குடியேற்றப்படாமையும் ஆகும். ஆனால் மாகாண சபை தேர்தலை நடத்தும்போது நிலக்கண்ணிவெடிகள் அனைத்தும் அகற்றப்பட்டிருக்கவேண்டும் என்பதுடன் மக்கள் அனைவரும் மீள்குடியேற்றப்பட்டிருக்கவேண்டும்.

எரிபொருள் விலை

எரிபொருளின் விலையை அரசாங்கம் அதிகரிக்காமல் இருக்கின்றமை எதிர்க்கட்சிக்கு கவலையளிக்கின்றதோ தெரியவில்லை. காரணம் அரசாங்கம் பெற்றோலுக்கான வற் வரியை நீக்கியுள்ளது. இதனால் அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படுகின்றது. ஆனால் விலை அதிகரிப்பு இடம்பெறக்கூடாது என்பதற்காக இதனை செய்கின்றோம். ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக்காலத்தில் தான் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை மூன்று பிரிவுகளாக பிரித்தனர். ஒரு பகுதியை இந்தியாவுக்கு வழங்கினர். திருகோணமலையில் 100 எண்ணெய் தாங்கிகளை இந்தியாவுக்கு விற்றனர். ஆனால் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதை நாங்கள் தவிர்த்தே வந்துள்ளோம்.
இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் ரொபட் பிளேக் தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் எனக்கு முழுமையாக தெரியவில்லை. எனினும் வெளிவிவகார அமைச்சு இது தொடர்பில் நிலைப்பாட்டை அறிவிக்கும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’