வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 14 பிப்ரவரி, 2011

அபிவிருத்தியில் மக்களும் பங்கெடுக்க வேண்டும். - செங்குந்தா புதிய மீன் சந்தை திறப்பு விழாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

யாழ். செங்குந்தா சந்தையில் யாழ். மாநகர சபை உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீட்டுடன் யாழ். மாநகர சபையினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மீன் சந்தையினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றையதினம் (13) உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்று மாலை இடம்பெற்ற மேற்படி நிகழ்விற்கு வருகைதந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை யாழ். மாநகர சபை முதல்வர் பிரதி முதல்வர் உள்ளிட்ட நிர்வாகத்தினரும் பொதுமக்களும் மங்கல இசையுடன் வரவேற்று அழைத்துச் சென்றனர். செங்குந்தா வைரவர் கோவிலில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து அதிதிகளினால் மங்கல விளக்கேற்றப்பட்டதை அடுத்து பத்து இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள மேற்படி புதிய மீன் சந்தையினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாடா வெட்டித் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து அங்கு பொதுக்கூட்டமொன்று இடம்பெற்றது. யாழ். மாநகர சபை செயலாளர் இரட்ணசிங்கத்தின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் தலைமையுரையினை யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜாவும் சிறப்புரையினை யாழ். மாநகர ஆணையாளர் மு.செ.சரவணபவவும் நிகழ்த்தினார்கள். இதனையடுத்து பிரதம உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அபிவிருத்தியில் பொதுமக்களும் பங்கெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சரவர்கள் எதிர்காலத்தில் உரியமுறையில் நிதியினைத் திரட்டுவதன் மூலம் இச்சந்தையானது நடைபாதையுடன் கூடிய மேல்மாடியாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன் இதற்கு பொதுமக்களின் பங்களிப்பும் இன்றியமையாதது எனத்தெரிவித்தார். எனவே பொதுமக்கள் பார்வையாளர்களாக மட்டுமன்றி பங்காளர்களாகவும் இருக்கவேண்டும் என்பதை தெரிவித்துக்கொண்ட அமைச்சர் தேவானந்தா அவர்கள் கடந்தகால தவறான வழிநடத்துதல்கள் காரணமாக நாம் புதிதாக எதனையும் பெறவில்லை என்பதுடன் இருப்பதையும் இழந்துவிட்டோம். எனவே கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்துவோம் எனக்கேட்டுக்கொண்டார்.

யாழ்.மாநகர பிரதம பொறியியலாளர் ஹென்டர்சனின் நன்றியுரையுடன் இன்றைய நிகழ்வு நிறைவு பெற்றது. புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மீன் சந்தை திறப்பு விழாவில் யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா பிரதிமுதல்வர் துரைராஜா இளங்கோ றீகன் மாநகர சபை ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யாழ்.மாநகர ஆணையாளர் மு.செ.சரவணபவ செயலாளர் இரட்ணசிங்கம் பிரதம பொறியியலாளர் ஹென்டர்சன் வீதிஅபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர் மரியதாஸ் மாநகர சபை அதிகாரிகள் வர்த்தகர்கள் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களும் பெருமளவில் பங்குகொண்டனர்.















0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’