வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 28 பிப்ரவரி, 2011

'சர்வதேச சமூகம் தாமதிக்கிறது'-அம்னஸ்டி சாடல்

லங்கையில் இடம்பெற்றதாக பரவலாக குற்றஞ்சாட்டப்பட்ட போர்க்காலக் குற்றங்கள் மற்றும் அண்மைக்காலங்களில் இடம்பெற்றுள்ள பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படாதிருப்பதாக அம்னஸ்டி இன்டர்நேஷனல் என்ற சர்வதேச மன்னிப்புச் சபை ஐக்கிய நாடுகள் அமைப்பை சாடியுள்ளது.

இலங்கையில் இடம்பெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான நடவடிக்கைகள் சட்டத்தின் பிடியிலிருந்து நழுவிச் செல்லும் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க ஐநா இன்னும் தீவிரமாக செயலாற்ற வேண்டுமெனவும் சர்வதேச மன்னிப்புச்சபை கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தக் குற்றச்செயல்களுக்கு பொறுப்பேற்க வைப்பதை வலியுறுத்த சர்வதேச சமூகம் தொடர்ந்தும் தவறிவருகின்றமை, இலங்கையில் ஆட்சியாளர்கள் சர்வதேச நியமங்களையும் ஐநாவின் கட்டமைப்பையும் ஊதாசீனம் செய்வதையே ஊக்குவிக்கும் என மன்னிப்புச் சபை விடுத்துள்ள அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச சமூகம் காலம் தாழ்த்தத் தாழ்த்த இலங்கையின் சமூக கட்டமைப்பின் அடித்தளத்திற்கு ஏற்படுகின்ற பாதிப்பு நீடிக்கவே செய்யும் என்பது அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கருத்து.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், கவுன்சிலின் 2010ம் ஆண்டு அமர்வுக்கு முன்னரான சம்பவங்களுக்குப் புறம்பாக, இலங்கையில் புதிதாக பல மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்ந்தும் இடம்பெற்றுவருவதாகவும் மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
வடக்கே அண்மைக்காலங்களில் புதிதாக இடம்பெற்றுள்ள கடத்தல்கள் மற்றும் கொலைகள் தொடர்பில், சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்த இலங்கை விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென அழுத்தம் கொடுக்குமாறும் மனித உரிமைகள் கவுன்சிலை மன்னிப்புச் சபை கோரியுள்ளது.
இறுதிக்கட்டப் போரின் போதான சர்வதேச மனிதாபிமானச் சட்டமீறல்கள் பற்றிய விசாரணைகளிலும் இலங்கை அக்கறை செலுத்தவில்லையெனவும் சபை விசனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் தொடர்பில் ஐநா சுயாதீனமான சர்வதேச விசாரணையொன்றை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் வரை உலகம் காத்திருக்கின்றது என அம்னஸ்டி இன்டர்நேஷனல் தனதறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’