வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ள 60 உள்ளூராட்சி சபைகளில் மூன்று உள்ளூராட்சி சபைகளுக்கான வாக்கெடுப்பை இடைநிறுத்தி வைக்குமாறு மேன்முறை யீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் 60 உள்ளூராட்சி சபைகளுக்குமான வாக்கெடுப்பை இடை நிறுத்தியுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும் என்று கபே அமைப்பு தெரிவித்துள்ளது.
வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட அக்மீமன மொனராகலை மற்றும் அக்குரஸ்ஸை ஆகிய பிரதேச சபைகளுக்கான வாக்கெடுப்புக்களையே இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இவ்வாறு இருக்க தீர்ப்பளிக்கப்படாத ஏனைய 57 உள்ளூராட்சி சபைகளுக்குமான வாக்கெடுப்பை தேர்தல்கள் திணைக்களம் இடை நிறுத்தியுள்ளது.
இந்த தன்னிச்சையான முடிவு ஏற்றுக் கொள்ள முடியாதது எனவும் கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.
வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ள 60 உள்ளூராட்சி சபைகளுக்கான வாக்கெடுப்புக்கள் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார். இது தொடர்பில் மேலும் அவர் கருத்து கூறுகையில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 60 உள்ளூராட்சி சபைகளில் 57 சபைகளுக்கான தீர்ப்பு இதுவரையில் வழங்கப்படவில்லை.
இதுவரை நிராகரிக்கப்பட்ட சகல உள்ளூராட்சி சபைகளுக்குமான வாக்கெடுப்பை இடை நிறுத்த தேர்தல் திணைக்களம் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது. குறித்த மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகளுடன் இது தொடர்பாக ஆலோசனைகள் நடத்தப்படவில்லை. அத்தோடு இவ்வாறான செயற்பாடுகளில் தேர்தல்கள் திணைக்களம் ஈடுபடவும் கூடாது. இந்த தலைமையானது அரசியல் நோக்கம் கொண்ட ஒரு பக்க செயற்பாடாகவே கருதமுடிகிறது எனவும் அவர் தெரிவித்தார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’