ஆஸ்திரேலியாவின் வடகிழக்கில் வெள்ளத்தால் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வருகின்ற மக்களுக்கு வெள்ள நிவாரண நன்கொடை ஒன்றை இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளது.
இலங்கையின் மிகப் பிரபலமான ஏற்றுமதிப் பொருளான தேயிலையை ஆஸ்திரேலியாவுக்கு இலங்கை வழங்கியுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு தங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதற்காக இலங்கையில் விளைந்த தேயிலையை அந்நாட்டுக்கு நிவாரண நன்கொடையாக வழங்குவதாக இலங்கையின் வெளியுறவுச் செயலர் ரொமேஷ் ஜெயசிங்கே கூறியுள்ளார்.
2004 சுனாமியின்போதும், தற்போது இலங்கையில் கண்ணிவெடிகள் அகற்றப்படுகின்ற பணிகளிலும் ஆஸ்திரேலியா இலங்கைக்கு உதவியுள்ளதை அவர் நினைவுகூர்ந்தார்.
கொழும்பின் அரசாங்கமும் டில்மா என்ற இலங்கையின் முன்னணி தேயிலை உற்பத்தி நிறுவனமும் கூட்டாக இந்த நிவாரண நன்கொடையை ஆஸ்திரேலியாவுக்கு வழங்குகின்றனர்.
இரண்டரை லட்சம் கோப்பைகளுக்கு தேனீர் போடுவதற்குத் தேவையான தேயிலையை இலங்கை வழங்கியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள தில்மா நிறுவன தேயிலை சேமிப்புக் கிடங்குகளில் இருந்து குவின்ஸ்லாந்து மாகாணத்துக்கு இத்தேயிலை நேரடியாக அனுப்பிவைக்கப்படும் எனத் தெரிகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொதிகளில் இந்தத் தேயிலையையும் சேர்த்து வழங்கபபடும் என கொழும்பில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகத்தின் தற்காலிக உயர் ஸ்தானிகரான சோஃபியா மெக்கிண்டயர் கூறினார்.
இலங்கையின் இந்த நற்செய்கையை மிகவும் மெச்சுவதாக அவர் தெரிவித்தார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’