இந்தியாவின் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி தாக்கல் செய்துள்ள மனு, விசாரணைக்குத் தகுதியுடையதுதான் என்று நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
தொலைத் தொடர்புத்துறையில், இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக, ராசா மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று சிபிஐ எனப்படும் மத்தியப் புலனாய்வுத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் சுப்ரமணியன் சுவாமி, கடந்த டிசம்பர் 15-ம் தேதி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவைப் பரிசீலித்த நீதிபதி பிரதீப் சத்தா, அந்த மனு விசாரணைக்கு ஏற்கத்தகுதியுடையதுதான் என்று தான் கருதுவதாகத் தெரிவித்தார். புகார் மனுவையும், அதற்கு ஆதரவாகத் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களையும் ஆய்வு செய்து பார்த்தபிறகு தான் அந்த முடிவுக்கு வந்ததாகவும், விசாரணை தொடரும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
அந்த வழக்கில், அரசு வழக்கறிஞர் நிலையில் இருந்து நீதிமன்றத்துக்கு உதவத் தயாராக இருப்பதாகவும் சுப்ரமணியன் சுவாமி மனுவில் கூறியுள்ளார். அதை சுட்டிக்காட்டிய நீதிபதி, முதலில் மனுதாரர் என்ற முறையில் சுவாமி நீதிமன்றத்தின் முன் ஆஜராகி தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் என்றும், அதன் பிறகுதான் நீதிமன்றத்துக்கு உதவும் அவரது கோரிக்கை குறித்து முடிவெடுக்க முடியும் என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளை விசாரணைக்கு அழைப்பது தொடர்பாக, பின்வரும் நாட்களில் தனியாக மனுத்தாக்கல் செய்யலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதை நீதிமன்றம் ஏற்கும்பட்சத்தில், முன்னாள் அமைச்சர் ராசா விசாரணைக்கு அழைக்கப்படலாம்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’