பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் மூலம் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தொடர்பிலான விஷேட கலந்துரையாடலொன்று இன்றைய தினம்(6) மொரட்டுவ கைத்தொழில் அபிவிருத்தி சபையின் கேட்போர் கூடத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் இடம்பெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இக்கலந்துரையாடலின் போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடந்தகால செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் தனக்கு கிடைத்து வருவதாகவும் எனவே இந்த அமைச்சை தான் பொறுப்பேற்பதற்கு முன்னர் நடைமுறையில் இருந்து வந்த வேலைத்திட்டங்களையே மேலும் பின்பற்றாமல் கைத்தொழிலாளர்களுக்கு பெரிதும் நன்மை பயக்கக்கூடிய புதிய வேலைத்திட்டங்களை நாம் இனங்கண்டு அவற்றை செயற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
நாட்டின் பல்வேறு இடங்களுக்குச் சென்று கைத்தொழில் முயற்சியாளர்களைச் சந்திக்கும் போது அவர்களது முக்கியத் தேவையான மூலப்பொருட்களின் தட்டுப்பாடு குறித்து பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதாகத் தெரிவித்த அமைச்சர் அவர்கள் கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் மூலம் கைத்தொழிலாளர்களுக்குத் தேவையான மூலப் பொருட்களை போதியளவு உடனுக்குடன் வழங்கக்கூடிய செயற்திட்டங்களை முன்னெடுக்கும்படி உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கினார்.
மூலப்பொருட்களைக் கொள்வனவு செய்வது தொடர்பில் அமைச்சரவை மட்டத்தில் தான் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அரச திணைக்களங்கள் அனைத்திலிருந்தும் பித்தளை இரும்பு செம்பு அலுமினியம் போன்ற மூலப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
புதிய வருடத்திற்கான வாழ்த்துக்களை மேற்படி சபையின் அனைத்து அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் தெரிவித்துக் கொண்ட அமைச்சர் அவர்கள் சபையின் மூலம் கைத்தொழிலாளர்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய சேவைகள் தொடர்பில் கைத்தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தும் நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ளுமாறு சபையின் பொதுமுகாமையாளருக்கு பணிப்புரை வழங்கினார்.
இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் வீரகுமார திஸாநாயக்க அமைச்சரின் செயலளார் சிவஞானசோதி ஆலோசகர் வி.ஜெகராசசிங்கம் மேலதிகச் செயலாளர் மங்கலிக்கா அதிகாரி பிரதம கணக்காளர் மெதவத்த அமைச்சர் அவர்களது பிரத்தியேகச் செயலாளர் கே. தயானந்தா இணைப்புச் செயலாளர் ராஜ்குமார் மக்கள் தொடர்பு அதிகாரி ரி.எம். பாரூக் அசீஸ் ஆகியோர் உட்பட அமைச்சு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’