வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 21 ஜனவரி, 2011

சட்டசபைத் தேர்தலில் போட்டியிட மாட்டேன்-சீமான் திடீர் அறிவிப்பு

முதல்வர் கருணாநிதியை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுவேன் என்று முதலில் அறிவித்திருந்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தற்போது தேர்தலில் போட்டியிட மாட்டேன், எனது கட்சியும் போட்டியிடாது, காங்கிரஸுக்கு எதிராக பிரசாரம் செய்வோம் என்று கூறியுள்ளார்
.திருப்பூர் வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,

எங்களது கட்சியை மேலும் பலப்படுத்த வேண்டியுள்ளதால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடாது. இருப்பினும், காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் அக்கட்சிக்கு எதிராக நாம் தமிழர் கட்சி பிரசாரத்தில் ஈடுபடும்.
இலங்கையில் தமிழ் இனம் அழிவுக்கு முக்கியக் காரணமாக செயல்பட்டதுடன் அதே நடவடிக்கைகளில் தொடர்ந்து காங்கிரஸ் ஈடுபடுகிறது. தவிர, இதுவரை 537 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், நாட்டில் எல்லாத் துறைகளிலும் ஊழல், கொள்ளைகளே அதிகரித்துள்ளன. மக்களுக்கு அத்தியாவசிய தேவையான மின்சாரம் இல்லை. அது தொடர்பான தொலைநோக்குத் திட்டமும் காங்கிரசிடம் இல்லை. அதனாலேயே நாம் தமிழர் கட்சி இம்முடிவு எடுத்துள்ளது.
காங்கிரசுக்கு எதிர்ப்பு என்பதால் அதன் எதிர்கட்சிகளுக்கு ஆதரவு என்பதில்லை. இருப்பினும், காங்கிரஸை எதிர்த்து மேற்கொள்ளும் பிரசாரத்தால் மாற்றுக் கட்சிகளுக்கு பலம் ஏற்படுமானால் அது தற்செயலானது என்றார் சீமான்.
சமீபத்தில் வைகோவை சந்தித்துப் பேசினார் சீமான். அதன் பின்னர் அவர் கூறுகையில், முதல்வர் கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிடுவேன். வைகோவையும் தேர்தலில் நிற்க கோரியுள்ளேன். அதிமுகவை ஆதரித்து வரும் தேர்தலில் பிரசாரம் செய்வேன் என்று கூறியிருந்தார்.
ஆனால் சில நாட்களுக்கு முன்பு அவர் பேட்டி அளிக்கையில்,ஜெயலலிதாவை ஆதரிப்பதாக தான்கூறவில்லை என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று தான் தேர்தலில் போட்டியிடவில்லை, எனது கட்சியும் போட்டியிடாது, காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் எதிர்த்துப் பிரசாரம் செய்வோம் என்று கூறியுள்ளார். இதன் மூலம் அவரது நிலைப்பாடு குழப்பமாகி வருகிறது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’