அரசியலில் இப்போது ஈடுபட சரியான நேரம் இல்லை என்று கூறியுள்ளார் நடிகர் விஜய். இதன் மூலம் இப்போதைக்கு அரசியலில் நுழையப் போவதில்லை என்பதை அவர் சூசகமாக உணர்த்தியுள்ளார். அதேசமயம், அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வது குறித்தும் தான் இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை துறைமுகத்தில் நடந்த வேலாயுதம் படப்பிடிப்பில் விஜய் கலந்து கொண்டார். இடைவேளையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
காவலன் படத்தில் சில மோசமான பிரச்சினைகளை சந்திக்க வேண்டியதிருந்தது. அந்த பிரச்சினைகளுக்கு காரணம் யார், அது எங்கிருந்து வருகிறது, யார் தூண்டிவிடுகிறார்கள்? என்று எனக்கு தெரியவில்லை. புது அனுபவமாக இருந்தது.
பிரச்சினைக்கு காரணம் தெரியவில்லை. இன்றுவரை அது புரியவில்லை. இதற்கு முன்பும் சில படங்களில் பிரச்சினைகள் வந்தது உண்டு. பொருளாதார ரீதியாக பல படங்களுக்கு உதவி செய்து இருக்கிறேன். பணம் பெரிய பிரச்சினையே அல்ல.
பிரச்சினைகள் காரணமாக, காவலன் படத்தை ஜனவரி 14ந் தேதி கொண்டுவர முடியவில்லை. என்றாலும், அந்த பிரச்சினைகளை எல்லாம் தாண்டி காவலன்' படத்துக்கு மக்கள் வரவேற்பு கொடுத்து இருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் 350 தியேட்டர்களில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. கஷ்டமான சூழ்நிலையில், என் கூட இருந்து உதவி செய்தவர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி.
ஜெயலலிதா அம்மாவை சந்திப்பதற்கு எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. சந்தித்தோம். அது எல்லோருக்கும் கிடைக்காது. இதற்கு முன்பு ராகுல்காந்தியை நான் சந்தித்ததும் இதுபோல்தான் அமைந்தது.
அரசியலில் ஈடுபடுவதற்கு இது சரியான நேரம் அல்ல. ஒரு நடிகராக நான் மக்களுக்கு அறிமுகமானேன். இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வது குறித்து இன்னும் நான் முடிவு செய்யவில்லை.
காவலன் பிரச்சினைகளுக்கும், அரசியலுக்கும் முடிச்சு போட வேண்டாம் என்று விரும்புகிறேன்.
தற்போது வேலாயுதம் படத்தில் நடித்து வருகிறேன். இந்த சமயத்தில் இன்னொரு படத்தில் நடிக்க முடியாது. எனவேதான் 3 இடியட்ஸ் படத்தில் நடிக்க முடியவில்லை. இதுதான் உண்மை. வெளியில் வேறு மாதிரி சொல்கிறார்கள். அதில் உண்மை இல்லை. எனக்கு யாருடனும் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றார் விஜய்.
வேலாயுதம் படம் எப்படி வந்து கொண்டிருக்கிறது என்ற கேள்விக்கு, தயாரிப்பாளர் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன், டைரக்டர் ஜெயம் ராஜா ஆகியோரின் ஒத்துழைப்புடன் படம் 50 சதவீதம் வளர்ந்து இருக்கிறது. இனிமேல் வருடத்துக்கு ஒரு சண்டை படத்திலும், கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ள படத்திலும் நடிக்க திட்டமிட்டு இருக்கிறேன் என்றார் விஜய்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’