இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டில் மர்மமான முறையில் தொடரும் வன்முறைகள் மற்றும் ஆட்கடத்தல் சம்பவங்களினால் அங்குள்ள பொதுமக்கள் மத்தியில் அச்சமும் பதற்ற நிலைமையும் தொடர்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த இரண்டு தினங்களுக்குள், இளைஞன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார். மற்றுமொரு இளைஞனும் பெண் ஒருவரும் வெவ்வேறு சம்பவங்களில் கடத்திச் செல்லப்பட்டிருக்கின்றார்கள்.
வடமராட்சி கிழக்கில் குடத்தனை என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் வீடொன்றினுள் புகுந்த ஆயுதபாணிகள் 28 வயதுடைய தவராசா கேதீஸ்வரன் என்பவரைச் சுட்டுக் கொன்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய இவர் உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. பகுதி நேர அஞ்சல் ஊழியராகப் பணியாற்றி வந்த இவர் மணல் வியாபாரத்திலும் ஈடுபட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, வடமராட்சி அல்வாய் என்ற இடத்தில் வீட்டோடு கடைவைத்து வியாபாரம் செய்து வந்த 48 வயதுடைய விதவைப் பெண்மணியான புஸ்பாதேவி யோகநாதன் என்பவர் இதே நாளன்று மாலை 6 மணியளவில் ஆயுதபாணிகளினால் கடத்திச்செல்லப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
ஆறு பிள்ளைகளின் தாயராகிய இவர் கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த வேளை, இவரைத் தேடிவந்ததாகத் தெரிவிக்கப்படும் 6 பேர் கொண்ட ஆயுதந்தாங்கிய குழுவினரே வான் ஒன்றில் இவரைக் கடத்திச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
ஆயுதங்களுடன் வீட்டில் புகுந்தவர்களைக் கண்டதும், கடத்தப்பட்ட பெண்ணின் பிள்ளைகள் அச்சத்தினால் சத்தமிட்டு அழுது கெஞ்சிய போதிலும் அவர்களை அச்சுறுத்திவிட்டு ஆயுத முனையில் அந்தப் பெண்ணை ஆயுதபாணிகள் கடத்திச்சென்றுள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்தச் சம்பவம் தொடர்பாக உறவினர்கள் பொலிசாரிடம் முறையிட்டிருக்கின்றார்கள்.
வியாழனன்று காலை உரும்பிராய் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த போது சண்முகநாதன் விக்னேஸ்வரன் என்ற 31 வயதுடைய இளம் குடும்பஸ்தர் வான் ஒன்றில் வந்தவர்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அவரது மனைவி பொலிசாரிடம் முறையிட்டுள்ளார்.
தனியார் கல்வி நிறுவனத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த இவர், கல்வி நிறுவனம் ஒன்றிற்குச் சென்று கொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2007 ஆம் ஆண்டு தனக்கு உயிரச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து பொலிசாரிடம் சரணடைந்திருந்த இவர் தெல்லிப்பழையில் செயற்பட்டுவந்த புனர்வாழ்வு நிலையத்தில் சேர்க்கப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்கு நால்வர் அடங்கிய விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக
பொலிசார் தெரிவித்திருக்கின்றார்கள்.
யாழ் குடாநாட்டில் தொடரும் வன்முறைகள், கடத்தல்கள், கொள்ளைகள், கொலைகள் என்பவற்றை நிறுத்தி சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநிறுத்த வேண்டும் என பல தரப்பினரும் அரசிடம் கோரிக்கை விடுத்தள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’