வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 20 ஜனவரி, 2011

மகரஜோதி மனித செயலா? நீதிபதிகள் கேள்வி


தெ
ன்னிந்திய மாநிலமான கேரளாவிலுள்ள சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் காணத்துடிக்கும் மகரஜோதி இயற்கையாக ஏற்படுவதா அல்லது மனிதர்களால் உருவாக்கப்படுவதா என்பதைத் தெளிவுபடுத்துமாறு ஐயப்பன் கோவிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவஸ்தான வாரியத்தை கேரள உயர்நீதிமன்றம் பணித்துள்ளது.

சபரிமலையில் கடந்த 14-ம் தேதி 102 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் இவ்வாறு கோரியுள்ளனர்.
தேவஸ்தானம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.ஜி. பரனேஸ்வர் நாயர் இதுகுறித்து பதிலளிக்கும்போது, மகரஜோதி என்பது, குறிப்பிட்ட அந்த நேரத்தில் வானில் தோன்றும் நட்சத்திரத்தையும் உள்ளடக்கியது என்றும், அது தெய்வ சக்தியால் உருவாகிறது என்று நம்பப்படுவதாகவும் தெரிவித்தார். அதேசமயம், அது தெய்வ அருளால் ஏற்படுவது என்று தேவஸ்தானம் எந்த விளம்பரமும் செய்யவில்லை என்றும் அவர் வாதாடினார்.
எது உண்மை என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும் என்றும், அதனால் அதைத் தெளிவுபடுத்த வேண்டியது அவசியம் என்றும் நீதிபதிகள் அப்போது உத்தரவிட்டார்கள்.
சபரிமலை தேவஸ்தானம் சார்பில் பேசவல்ல ராகுல் ஈஸ்வர் கருத்துத் தெரிவிக்கும்போது, பொன்னம்பல மேட்டில் உருவாகும் ஜோதி, மனிதர்களால் ஏற்றப்படுவது என்றும், அதே நேரத்தில், சூரியன், தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு மாறும்போது உருவாகும் ஒளிபடைத்த நட்சத்திரம்தான் மகரஜோதி என்றும் கூறியுள்ளார்.
கடந்த வாரம் நடந்த நெரிசலால் ஏற்பட்ட உயிரிழப்புக்களை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கையுடன் செயல்படத் தவறிவிட்டதாக கேரள அரசு மீது உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
விபத்து நடந்த புல்மேடு பகுதியில் பாதுகாப்பு வழங்க இயலாது என்ற நிலையில், அங்கு யாரையும் அனுமதித்திருக்கக் கூடாது. பக்தர்களை அனுமதிக்கும்பட்சத்தில், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
ஐயப்பன் கோயில் அமைந்துள்ள சபரிமலையில் ஆண்டுதோறும் மகரவிளக்கு நிகழ்வின்போது, லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். அந்த மலைப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளைக் கொண்டது. மகரஜோதியைக் காண, சபரி மலை கோயில் பகுதிகள் மட்டுமன்றி, அதைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகள் மற்றும் வனப்பகுதிகளிலும் லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவது வழக்கம். மலை உச்சியில் தோன்றும் ஜோதி, ஐயப்பன் ஜோதி வடிவில் தரிசனம் தருவதாக பக்தர்களிடம் நம்பிக்கை உள்ளது.
அவ்வாறு, இந்த ஆண்டு இடுக்கி மாவட்டம் புல்மேடு வனப்பகுதியில் சுமார் இரண்டு லட்சம் பக்தர்கள் கூடி மகரஜோதியைக் கண்டார்கள். அது நிறைவடைந்ததும் கீழே இறங்கும்போது ஏற்பட்ட நெரிசலில் 102 பேர் உயிரிழந்துவிட்டார்கள்.
அந்த சம்பவம் தொடர்பாக, அறிக்கை அளிக்குமாறு கேரள மாநில காவல்துறைக்கும் வனத்துறைக்கும், சபரிமலை கோயிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவஸ்தான வாரியத்துக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அந்த மூன்று அமைப்புக்கள் சார்பிலும் வியாழனன்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
மாநில காவல்துறைத் தலைவர் சேகப் புன்னூஸ் தாக்கல் செய்த மனுவில், புல்மேடு பகுதியில் பாதுகாப்புப் பணிக்காக 279 போலீசாரும், இரண்டு துணைக் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகக் கூறியுள்ளார். மேலும், வனத்துறை சார்பில், அந்தப் பகுதிக்குச் செல்ல 1400 மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
திருவாங்கூர் தேவஸ்தான வாரியத் தலைவர் வாசு தாக்கல் செய்துள்ள மனுவில், புல்மேடு பகுதியில் செல்லும் ஐயப்ப பக்தர்களை முறைப்படுத்த போதிய அளவு போலீஸ் மற்றும் வனத்துறையினர் பணியமர்த்தப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த மனுக்களைப் பரிசீலித்த உயர்நீதிமன்றம், பல்வேறு துறைகளுக்கு இடையே தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் இல்லாததே இவ்வளவு பெரிய விபத்துக்குக் காரணமாகிவிட்டது என்று கருத்துத் தெரிவித்தது.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’