வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 26 ஜனவரி, 2011

நான் கவிஞன் அல்ல கிரிக்கட் மட்டை பிடிக்க பிறந்தவன்: சச்சின்

எனது தந்தை, எனது மூத்த சகோதரர் நிதின் டெண்டுல்கர் ஆகியோர் கவிஞர்கள் என்றாலும், நான் கிரிக்கெட் மட்டையை பிடிப்பதற்காகவே பிறந்தவன், கவிஞன் அல்ல என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்
.சச்சின் டெண்டுல்கரின் தந்தை ரமேஷ் டெண்டுல்கர் எழுதிய கவிதைத் தொகுப்பு சிடி மும்பையில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. அப்போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போதே சச்சினின் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

'சச்சின் கிரிக்கெட்டில் சாதித்துவிட்டார். அவர் கவிதை எழுத முன்வர வேண்டும்" என எனது மூத்த சகோதரர் நிதின் டெண்டுல்கர் தெரிவித்திருந்தார். ஆனால் நான் இதுவரை கவிதை எழுதியதில்லை. கடவுள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமையை கொடுத்துள்ளார். அதை சரியாகப் பயன்படுத்தினால் வெற்றிபெறலாம். நான் கவிதை எழுதுவதைப் பற்றி ஒருபோதும் நினைத்ததில்லை என்றார்.

சுயசரிதை எழுதும் எண்ணம் உள்ளதா? என்று கேட்டபோது, 'சுயசரிதை எழுதுவது குறித்து எந்த எண்ணமும் இல்லை. அதைப் பற்றி சிந்திப்பதற்கு நேரமும் இல்லை. ஒருவேளை சில நாள்கள் கழித்து அந்த எண்ணம் வரலாம்" என்றார்.

இந்த ஆண்டிற்கான பாரத ரத்னா விருது உங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறதே என்று கேட்டபோது, 'நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதைப் பெற வேண்டும் என்பது ஒவ்வொருவருக்கும் கனவாகும். ஒவ்வொரு இந்தியனுக்கும் அந்த விருதைப் பெற வேண்டும் என்ற ஆசை இருக்கும். இருப்பினும் சில காரணங்களுக்காக அதுபற்றி பேச விரும்பவில்லை" என்றார்.

டெஸ்ட் போட்டியில் தான் அடித்த 50-வது சதத்தை நினைவுகூர்ந்த சச்சின் டெண்டுல்கர், 50-வது சதமடித்தபோது எனது தந்தை என்னோடு இருப்பது போன்ற எண்ணமே எனக்கு ஏற்பட்டது. ஏனென்றால் நான் 50-வது சதமடித்தது டிசம்பர் 19-ம் திகதி. எனது தந்தையின் பிறந்தநாள் டிசம்பர் 18-ம் திகதி.

அவருக்காக 50-வது சதமடிக்க வேண்டும் என்று விரும்பினேன். அதை அடித்து சாதித்துவிட்டேன்.

நான் சதமடிக்கும் போதெல்லாம், எனக்கு அதற்கான வாய்ப்பை வழங்கிய கடவுளுக்கு நன்றி சொல்வேன். எனது தந்தையிடம் பல விஷயங்களை கற்றுக்கொண்டுள்ளேன். நாங்கள் எப்போதும் இயல்பான மனிதர்களாக இருக்க எங்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளார்.

ஒருவன் இயல்பான மனிதனாக இருந்தாலே அவன் எப்போதும் தன்னை சுற்றியுள்ளவர்களால் விரும்பப்படுவான். கிரிக்கெட்டில் சரியாக விளையாடுகிறோமா, இல்லையா என்பது வேறு. எப்போதும் இயல்பாக இருப்பது என்பது வேறு. இயல்பான சிறந்த மனிதனாக இருந்தால் மட்டுமே கிரிக்கெட்டில் சாதித்தாலும், சாதிக்காவிட்டாலும் மக்கள் நம்மோடு இருப்பார்கள் என்று என் தந்தை எனக்கு உணர்த்தியுள்ளார்.

அதையே எனது குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுக்க விரும்புகிறேன். நான் கீர்த்தி கல்லூரியில் சேர்ந்ததற்கு ராம்காந்த் அச்ரேகர் பயிற்சியாளராக இருந்ததும் ஒரு காரணம். பல நாள்கள் என் தந்தையுடன் நீண்ட தூரம் பயணம் செய்து பயிற்சிக்கு சென்றுள்ளேன். சில நேரங்களில் பயிற்சிக்கு செல்லாமலும் இருந்திருக்கிறேன். அப்போதெல்லாம், எதுவும் தாற்காலிகமே; எதற்கும் முடிவு உண்டு; ஆனால் நம்முடைய இயல்பான எண்ணங்களுக்கு மட்டுமே முடிவு இல்லை என்பதை என் வாழ்க்கையில் உணர்ந்தேன். எனவே எப்போதும் நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும். நான் அப்படி இருப்பதற்காகவே தொடர்ந்து முயற்சிக்கிறேன் என்றார் டெண்டுல்கர்.

1999-ம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியின் போது தனது தந்தை இறந்தபோது நாடு திரும்பினார். பின்னர் உடனடியாக தனது தாயாரின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் இங்கிலாந்து சென்று விளையாடினார். அப்போது கென்யாவுக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கிய சச்சின் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 140 ஓட்டங்கள் எடுத்தார். அதை நினைவு கூர்ந்த டெண்டுல்கர் அதுகுறித்து மேலும் கூறியது:

அது என் வாழ்க்கையின் மிகக் கடினமான தருணம். தந்தை இறந்துவிட்டார் என்பதற்காக நீ விளையாடாமல் இங்கு இருந்துவிட்டால் அதுமோசமான செயலாகிவிடும். அதனால் நீ போய் நாட்டுக்காக விளையாடு என்று எனது தாய் கூறினார் என்றார்.

மகன் அர்ஜூன் குறித்து பேசிய சச்சின், அது அவனுடைய வாழ்க்கை. அவன் என்னவாக வரவேண்டும் என்பதை அவனே முடிவு செய்ய வேண்டும். அதை விட்டு நான் எதையாவது அவனிடம் நுழைக்க முயன்றால் அவனால் அதை அடையமுடியாமல் போய்விடும் என்றார்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’