அபிவிருத்தியை திட்டமிடுகின்ற போது இன்றைக்கு மட்டும் என்றில்லாது, 20 வருட எதிர்காலத்தை கவனத்தில் கொண்டும் அதற்கு ஏற்ற வகையிலும் அபிவிருத்தியை திட்டமிட வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பெற்றோலிய மற்றும் பெற்றோலிய வள அமைச்சின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
நாட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்பதுடன், அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கும் அதனை தொடர்ச்சியாகப் பேணிப் பாதுகாப்பதற்குமான முக்கியத்துவம் தொடர்பில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.
நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டிருக்கின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நாளைக்கு ஒத்திவைக்காமல் இன்றே ஆரம்பிக்க வேண்டும். அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக கடன் பெற்றுக்கொள்ளும் போது நாட்டின் எதிர்காலம் தொடர்பில் கவனம் செலுத்தி, அதற்கு ஏற்றவகையில் தேவையான கடனைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
நாட்டைச் சுற்றியிருக்கின்ற கடலில் எண்ணெய் அகழ்வதற்கும், அதற்குத் தேவையான வகையில் தற்போது முன்னெடுக்கப்படுகின்ற ஆராய்ச்சி தொடர்பிலும் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பின் அளவை அதிகரித்துக் கொள்வதற்கு சுத்திகரிப்புக்கான இயந்திரப் பொறிமுறைகளை நவீனமயப்படுத்துவதன் மூலமாக சுத்திகரிப்பின் அளவை அதிகரித்துக்கொள்ள முடியும். அதனூடாகக் கிடைக்கின்ற நன்மைகளை மக்கள் அனுபவிக்கும் வகையிலான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விநியோகத்தை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, சர்வதேச சந்தையில் எரிபொருட்களின் விலை வெகுவாக அதிகரித்துவருவது குறித்தும் கவனத்தைச் செலுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
இலங்கைக்குள் எரிபொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்துக்கொள்வதற்காக தற்போது இருக்கின்ற வசதிகளை மேலும் மேம்படுத்திக் கொள்வதற்கும் புதிய வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்வதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’