இலங்கை கடற்படையினரால் தாங்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதாக தமிழக மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். தமது உடமைகளும் பறிக்கப்பட்டுள்ளதாகவும் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கூறுகிறார்கள்.
தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 600 படகுகளில் திங்கட்கிழமை(27.12.10) மாலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றதாகவும், இரவு நேரத்தில் கச்சத்தீவுக்கு அருகில் இலங்கை கடற்படையினரால் தங்களது ஐம்பது படகுகள் சுற்றி வளைக்கப்பட்டு தாக்கப்பட்டதாகவும் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் சங்கத்தின் தலைவரான என் தேவதாஸ் தமிழோசையிடம் தெரிவித்தார்.
ஆனால் இலங்கை கடற்படையின் பேச்சாளர் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். தமது படையினர் இந்திய மீனவர்களை தாக்குவதில்லை என்றும் அவர் கூறுகிறார்.
எனினும் தமது மீனவர்கள் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், அதன் காரணமாக அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியதாயிற்று என்றும் தேவதாஸ் தெரிவிக்கிறார்.
'புகார்களால் பலனில்லை'
தம்மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கூறினாலும், அவர்கள் இது குறித்து தமிழகத்தின் காவல்துறையினரிடமோ அல்லது மீன்வளத்துறையினரிடமோ எழுத்து மூலமாக புகார்கள் எதையும் பதியவில்லை என்பதையும் ஒப்புக் கொள்கின்றனர்.
எழுத்து மூலமான புகார்கள் கிடைக்கப் பெறாத நிலையில், இப்படியான சம்பவங்கள் குறித்து அரசாங்க மட்டத்தில் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதில் சிக்கல்கள் உள்ளதாக தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.
பல காலமாக புகார்கள் கொடுத்தும், ஏதும் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படாத காரணத்தினாலேயே தமது மீனவர்கள் புகார் கொடுக்க முன்வருவதில்லை என்றும் தேவதாஸ் சுட்டிக்காட்டுகிறார்.
தமது மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் நுழைந்திருந்தால், அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமே தவிர தாக்குதல் நடவடிக்கையையும், அவமானப்படுத்தலையும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தேவதாஸ் வலியுறுத்துகிறார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’