அமெரிக்க இராஜதந்திரத் தகவல் பரிமாற்றங்களை அம்பலப்படுத்திவரும் விக்கிலீக்ஸ் இணையத்தளம் பற்றிய பேச்சு உலக நாடுகளை இன்னும் ஆட்டம் காண வைத்துக்கொண்டிருக்கிறது.
அமெரிக்கா எனும் தனியொரு வல்லரசு நாடு ஆசிய பிராந்தியத்தில் எந்தளவுக்கு தனது ஆதிக்கத்தைச் செலுத்த எத்தனிக்கிறது என்பதை விக்கிலீக்ஸ் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. அதேநேரம் ஏனைய நாடுகள் தங்கள் உள்விவகாரங்கள் கசிந்ததை மறைப்பதற்கு மாற்றுவழிகளைத் தேடிக்கொண்டிருக்கின்றன.
எனினும் தமது நாடு குறித்து வெளியாகியுள்ள தகவல் பற்றி அந்தந்த நாடுகள் கட்டாயமாக பதிலளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் விக்கிலீக்ஸ் இலங்கை குறித்து வெளியிட்டு வரும் தகவல்கள் சர்வதேசத்தின் பார்வையை இலங்கை பக்கம் திருப்பியுள்ளது எனலாம்.
இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணைகள் அவசியம் என ஏற்கனவே விக்கிலீக்ஸ் மூலம் தகவல் கசிந்திருந்தது.
அதனைத் தொடர்ந்து அமெரிக்க எதிர்ப்பினையும் மீறி வடகொரியாவிடமிருந்து பெருந்தொகையான ஆயுதங்களை இலங்கை அரசாங்கம் கொள்வனவு செய்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இவற்றைவிட கடந்த வியாழக்கிழமை விக்கிலீக்ஸில் வெளியாகிய தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன.
இலங்கையில் யுத்த காலத்தின்போதும் அதற்குப் பின்னரும் துணை இராணுவக் குழுக்களின் செயற்பாடுகளும் அரசியல் பிரமுகர்கள் சிலரின் மரணத்தின் திரைமறைவுகளும் வெளிக்கொண்டுவரப்பட்டன.
ஆளும் அரசாங்கத்தில் அமைச்சர் பதவி மற்றும் பிரதியமைச்சர் பதவிகளை வகிக்கும் முக்கியமாக தமிழ் அரசியல் தலைவர்களின் கீழ் இயங்கியதாகக் கூறப்படும் அமைப்புகளின் செயற்பாடுகளை விக்கிலீக்ஸ் வெளியிட்டது.
அதில் முக்கியமானவை வருமாறு,
01. விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு துணை இராணுவக் குழுக்கள் அரசுடன் இணைந்து செயற்பட்டமை- அதற்காக ஆட்கடத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டமை
02. யாழ். குடாநாட்டில் எந்த அச்சமுமின்றி துணை இராணுவக் குழுக்கள் மனித உரிமை மீறல் செயற்பாடுகளில் ஈடுபட்டமை
03. விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டோரை கடத்தியமை – சில சந்தர்ப்பங்களில் கொலை செய்தமை
04. துணை இராணுவக் குழுக்களுக்கு அரசாங்கம் நிதி வழங்கியமை
05. தமிழ் வர்த்தகர்களிடம் பணம் வசூலிக்க பாதுகாப்பு அமைச்சு ஆதரவு வழங்கியமை
06. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ் ஆகியோரின் கொலைகளின் பின்னணியில் துணை இராணுவக் குழுக்கள்
07. இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த முகாம்களுக்குக் கொண்டுவரப்பட்ட பொருட்களை முதலில் துணை இராணுவக் குழுக்கள் பெற்றுக்கொள்ளவும் விற்பனை செய்யவும் அனுமதிக்கப்பட்டமை
08. துணை இராணுவக் குழுக்கள் முகாம்களில் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டமை
- இவையே இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தினால் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்ட விடயங்களில் முக்கியமானவை.
அமெரிக்க தூதுவரால் அனுப்பப்பட்ட இத்தகவல்கள் எந்த ஆதாரத்துடன் பெறப்பட்டவை என்பது அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்படவில்லை.
எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குறிப்பிட்ட அமைப்புகள் இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை.
இரு நாடுகளுக்கிடையிலான கருத்துப் பரிமாற்றங்கள் இராஜதந்திர ரீதியில் அணுகப்படும் என இலங்கையின் ஊடக மற்றும் தகவல் தொடர்பாடல் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அண்மையில் தெரிவித்திருந்தார்.
இரகசிய தகவல்கள் இவ்வாறு சட்டவிரோதமான முறையில் வெளிப்படுத்தப்பட்டமை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இத் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அமெரிக்கத் தூதர் பற்றீசியா புட்டெனிஸிடம் தனது கண்டனத்தை வெளியிட்டார்.
இலங்கையில் போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுவரும் நிலையில் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவல்கள் அரச தரப்பினரை மேலும் சங்கடத்துக்குள்ளாக்கியுள்ளது.
எனினும் அந்த அறிக்கையில் துணை இராணுவக் குழுக்கள் என வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு அமைப்புகளிடமிருந்தும் இதுவரை எந்தவொரு மறுப்பும் வெளிவரவில்லை.
ஆக, இவர்களின் மௌனம் சம்மதத்திற்கு அறிகுறியா? எனச் சிந்திக்கத் தோன்றுகிறது.
யுத்த காலத்திலும் அது நிறைவடைந்த பின்னரும் கொழும்பிலும் வடக்கு – கிழக்கு பகுதிகளிலும் ஏராளமானோர் கடத்தப்பட்டு கப்பம் கோரப்பட்டனர். மேலும் பலர் மர்மமான முறையில் கொல்லப்பட்டனர்.
போர் என்ற வடு ஒருபுறம் வாட்டிவதைக்க மறுபுறம் இவ்வாறான இன்னல்களால் தமிழ்பேசும் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவல்கள் மக்கள் மத்தியில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக தமிழ் அமைப்புக்களால் தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூரம் குறித்தான விடயங்கள் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரையும் பல மடங்கு சிந்திக்க வைத்திருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.
இராஜதந்திர தகவல் பரிமாற்றங்கள் வெளிப்படையான மதிப்பீடுகளேயன்றி அவை நாட்டின் கொள்கைகளைப் பிரதிபலிக்கவில்லை என அமெரிக்கா கூறியிருந்தது.
எனினும் முன்வைக்கப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து சம்பந்தப்பட்ட தமிழ் அமைப்புக்கள் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடப்பாடு உண்டு என்பதை சம்பந்தப்பட்ட அமைப்புகள் உணர வேண்டும். உணர்வார்களா?
இராமானுஜம் நிர்ஷன்
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’