யுத்தத்தின் கொடுமையினால் விதவைகளாக்கப்பட்டவர்களின் வேதனைகள் சொல்லில் அடங்காதவை. வடக்கு கிழக்கில் விதவைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு விசேட திட்டங்கள் நடை முறைப்படுத்தப்பட வேண்டும். தற்போது பெய்து வரும் அடைமழையினால் வடக்கில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இடம் பெயர்ந்த மக்கள் வெள்ளம் காரணமாக பெரும் அவலங்களை சந்தித்து வருகின்றனர். அங்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் காணப்படுகின்றது. எனவே சுகாதார அமைச்சு இதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் சபையில் தெரிவித்தார்
.வரவுசெலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:
யுத்தத்தின் கொடுமையினால் விதவைகள் ஆக்கப்பட்டவர்களின் வேதனைகள் சொல்லில் அடங்காதவை. வடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் விதவைகளாக 85 ஆயிரம் பேர் வரையில் மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் தமது வாழ்க்கை சூனியமான நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த விதவைகளுக்கான வாழ்வாதாரத் திட்டங்கள் எதுவும் வரவு செலவுத் திட்டத்தில் இல்லை. இது பெரும் கவலையளிக்கும் விடயமாகும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட விதவைகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு மகளிர் விவகார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விதவைகள் தமது வாழ்க்கையை கொண்டு நடத்தும் வகையில் சுயதொழில் ஊக்குவிப்புத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியம். இறுதி யுத்தத்தின் போது விதவைகளாக்கப்பட்டவர்களின் விபரங்களை சேகரித்து அவர்களுக்கு நட்டஈட்டினை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும். காலத்தின் கோலத்தினால் விதவையாக்கப்பட்ட இவர்களுக்கு விஷேட சலுகைகளை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டியது அவசியம்.
நான் அண்மையில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள வட்டக்கச்சி, கண்டாவளை, முரசுமோட்டை, காஞ்சிபுரம், கவரிக்குடா உட்பட பல கிராமங்களுக்கும் விஜயம் செய்தேன். ஒவ்வொரு கிராமத்திலும் 40க்கும் குறையாத விதவைப் பெண்கள் வாழ்க்கையை வெறுத்த நிலையில் ஏதோ வாழ வேண்டும் என்பதற்காக உயிர் வாழ்வதைக் கண்டேன். இதே போல்தான் குடாநாடு உட்பட வடக்கு, கிழக்கில் நிலைமையுள்ளது.
முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் மட்டும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அடைமழையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த மக்கள் பெரும் சுகாதார சீர்கேடுகளை எதிர்நோக்குகின்றனர். தொற்று நோய்களும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இடம்பெயர்ந்து மீள்குடியேறி மீண்டும் இடம்பெயர்வு அவலத்தை சந்தித்துள்ள மக்களை தொற்று நோய்களிலிருந்து காப்பாற்ற வேண்டும். இதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். உதவ வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’