வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 16 டிசம்பர், 2010

தேசிய கீதத்தை தமிழில் பாட முடியுமா? அமைச்சர் கெஹெலிய மழுப்பல் பதில்

னிவரும் காலங்களில் இலங்கையின் தேசிய கீதத்தை தமிழில் இசைக்க முடியுமா? முடியாதா? என்ற நேரடி பதிலை எதிர்பார்த்து அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் ஊடகவியலாளர்கள் பலரும் கேள்வி எழுப்பிய போதிலும் அதற்கான பதிலை வழங்குவதில் அமைச்சர் மழுப்பல் நிலையையே கையாண்டார்.

தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மாத்திரமே இசைக்க முடியும் என்று அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டதாக வெளியான செய்தியை அடுத்து கடந்த ஒரு வாரமாக மேற்படி தீர்மானத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துக்கள் வெளியாகின.

இந்நிலையில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் விஷேட செய்தியாளர் மாநாடு இன்று முற்பகல் 11 மணிக்கு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டின் போதே ஊடகவியலாளர்கள் மேற்படி கேள்வியினை எழுப்பினர்.

இருப்பினும் குறித்த கேள்விக்கான பதிலை வழங்குவதில் அமைச்சர் பெரிதும் சிரமப்பட்டதுடன் அதற்கான பதிலை ஊடகவியலாளர்களை குழப்பும் வகையிலும் மக்களுக்கு தெளிவின்மையை ஏற்படுத்தும் வகையிலுமே வழங்கினார்.

இதனால் தர்மசங்கடத்தக்கு உள்ளான ஊடகவியலாளர்கள் அனைவரும் அமைச்சரின் நேரடி பதிலை வேண்டி பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும் அதற்கான நேரடி பதில் அமைச்சரால் வழங்கப்படவில்லை.

பல கோணங்களில் வெளியிடப்பட்ட அமைச்சரின் கருத்துக்கள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை குழப்பவதாகவே அமைவதாக ஊடகவியலாளர்கள் அவரிடம் இதன்போது தெளிவுபடுத்தியமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியாளர் மாநாட்டின் போது ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளும் அவற்றுக்கு அமைச்சரால் வழங்கப்பட்ட பதில்களும் பின்வருமாறு :

கேள்வி:இனிவரும் காலங்களில் தேசிய கீதத்தை தமிழில் இசைக்கமுடியுமா?

பதில்: அரசியலமைப்பில் உள்ளபடி அது பின்பற்றப்படும். அதை விடுத்து தேசிய கீதத்தை பாடிக்கொண்டு நடனமாட முடியாது.

கேள்வி: சிங்களத்தில் மாத்திரமே தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளாரே?

பதில்: அது சரி. அவரால் சிங்களத்தில் மட்டுமே இசைக்க முடியும். அதனால் அவர் அவ்வாறு கூறியிருக்கலாம். நானும் சிங்களத்தில் மாத்திரமே தேசிய கீதத்தை இசைப்பேன்.

கேள்வி: அமைச்சர் விமலின் கருத்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் அல்லவா?

பதில்: அது அவருடைய தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம்.

கேள்வி: அவ்வாறாயின் அவருடைய கருத்து பிழையானது என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

பதில்: அரசியலமைப்பின் உள்ளதே உண்மை.

கேள்வி: தேசிய கீதம் இனிவரும் காலங்களில் எவ்வாறு இசைக்கப்பட வேண்டும்?

பதில்: தேசிய கீதம் எவ்வாறு இசைக்கப்படல் வேண்டும் என்று அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் அதன் ராகம், தாளம் என்பன மாற்றம் செய்யப்படாது உரிய மரியாதையுடன் இசைக்கப்பட வேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’