ஆனையிறவு தட்டுவன்கொட்டி பிரதேச மக்களை ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின்; பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் சந்தித்துக் கலந்துரையாடினார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
நேற்றைய தினம் (22) கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் கரைச்சி பிரதேச சபை செயலாளர் ஆகியோருடன் தட்டுவன்கொட்டி கிராமத்திற்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் அங்கு மீள்குடியேறியுள்ள மக்களின் பிரச்சினைகள் தேவைகள் குறித்து கேட்டறிந்து கொண்டு அவற்றினைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார்.
அந்த வகையில் அம் மக்கள் குடிநீர் போக்குவரத்து மருத்துவம் பாடசாலை வீட்டுவசதி வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் தாங்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் தொடர்பில் சந்திரகுமார் அவர்களிடம் எடுத்துக்கூறினர்.
மக்களின் தேவைகளையும் பிரச்சினைகளையும் கேட்டு அறிந்து கொண்ட சந்திரகுமார் அவர்கள் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் மக்களின் அடிப்படை பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதோடு முதற்கட்டமாக போக்குவரத்துக்கு மிகவும் அவசியமான பாதையினை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தகரங்கள் கிடைக்கப்பெறாத குடும்பங்களுக்கு ஒருசில நாட்களுக்குள் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் வீட்டுத்திட்டங்களை பொறுத்தவரை இந்தியன் வீட்டுத்திட்டத்தின் கீழ் உதவிகளைப் பெறுவதற்கு அரச அதிபருடன் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவித்தார்.
பாடசாலையினை ஆரம்பிப்பதற்கு வலயக் கல்விப் பணிப்பாளருடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பாடசாலை ஆரம்பிக்கும்போது பிள்ளைகளை தயார் நிலையில் வைத்திருக்கும்படியும் கூறினார். மேலும் அப்பிரதேசத்திலுள்ள பறவைக்குளத்தை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் வேலையில்லாப் பிரச்சினைக்கு ஆனையிறவு உப்பளம் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட இருப்பதால் அதன் மூலம் தீர்வுகள் கிடைக்கும் என்பதனையும் நம்பிக்கையோடும் முயற்சியோடும் இருங்கள். உங்களின் பிரதிநிதி என்ற வகையில் உங்களின் வாழ்வினை ஒளிமயமாக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வேன் என்றும் சந்திரகுமார் அவர்கள் தெரிவித்தார்.
அத்தோடு கரைச்சி வடக்கு கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாச பொதுமுகாமையாளர் கணேசபிள்ளை அவர்கள் தட்டுவன்கொட்டி மக்களின் மீள்குடியேற்றம் தொடக்கம் அவர்களுக்கான தொழில்புரிவதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தது வரை தன்னாலான உதவிகளை மேற்கொண்டு வரும் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்களுக்கு கிராம மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.
இச்சந்திப்பு நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் கரைச்சிப் பிரதேச சபைச் செயலாளர் திருமதி அருட்சோதி கரைச்சிவடக்கு கடற்றொழிலாளர் சங்க சமாச பொதுமுகாமையாளர் கணேசபிள்ளை தட்டுவன்கொட்டி பிரதேச இராணுவ அதிகாரி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் மாதர் கிராம அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’