போபால் விஷவாயுக் கசிவு சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டுத் தொகையை 5786 கோடி ரூபாயாக, அதாவது 1244 மில்லியன் டாலராக அதிகரிக்க வேண்டும் என்று கோரி, உச்சநீதிமன்றத்தில் இந்திய அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
ஏற்கனவே, கடந்த 1989-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், 470 மில்லியன் டாலர்கள் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
உச்சநீதிமன்றத்தில், ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பில் முழுமையான நீதி கிடைக்கவில்லை என்று கருதும்பட்சத்தில், தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனு தாக்கல் செய்யப்படுகிறது.
கடந்த 1989-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, தவறான தகவல்கள் மற்றும் கணிப்பீடுகளின் அடிப்படையில் வழங்கப்பட்டது என்று மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சகம் சார்பில் அட்டார்னி ஜெனரல் வஹன்வதி தாக்கல் செய்த மறுஆய்வு மனுவில் குறிப்பிட்டிருக்கிறது.
கணிப்பீடுகளின் அடிப்படையிலான தகவல்களின் கீழ் வழங்கப்படும் தீர்ப்புக்கள் தவறாக இருக்கும்பட்சத்தில், உண்மையான நீதி கிடைக்காமல் போய்விடும் என்றும் நீதிமன்றத்தை மீண்டும் அணுகுவதற்கு அதன் மூலம் வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தனது மறுஆய்வு மனுவில் குறிப்பிட்டுள்ளது.
ஏற்கெனவே, கடந்த 1991-ம் ஆண்டு அக்டோபர் மாதம், தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
போபால் விஷவாயு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கு, இந்திய அரசு 1413 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகரில் 26 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட இந்தக் கோர விபத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’