பெரும்பான்மை சமூகத்தை புண்படுத்தாத வகையில் அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என விடுதலை புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாண இராணுவ தளபதியும் மீள்குடியேற்ற பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வில் சாட்சியமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சிலவற்றை அடைவதற்காக யுத்த நிறுத்த ஒப்பந்த காலப்பகுதியில் விடுதலை புலிகளுக்கு நோர்வே பணம் மற்றும் ஆயுதங்கள் வழங்கியதாக ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது கூறினார்.
அங்கு தொடர்ந்து சாட்சியமளித்த அவர்,
"பலவீனமான நிலையிலிருந்த விடுதலை புலிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ பணம் மற்றும் ஆயுதங்களை கொடுத்தார். இதனால் விடுதலை புலிகள் இயக்கம் பலம்பெற்றது. இது முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ செய்த பெரிய தவறாகும்.
மாணவனாக இருந்த நான் 1983 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜுலை கலவரத்தினால் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டதனாலேயே நான் விடுதலை புலிகள் இயக்கத்தில் இணைந்தேன்.
இந்தியா விடுதலை புலிகள் இயக்கத்திற்குள் பல தாக்கங்கள் செலுத்தியது. அதன் ஒரு அங்கமாக இந்திரா காந்தி பிரதமாராக இருந்த காலத்தில் நான் இந்தியாவில் பயிற்சி பெற்றேன். அங்கிருந்து 1985 ஆம் ஆண்டு படகு மூலம் இலங்கையை வந்தடைந்தேன்.
மக்கள் விடுதலை முன்னணி மற்றும் விடுதலை புலிகளை அடக்குவதற்காக இந்திய படைகள் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டன.
இந்திய படைகள் இலங்கை வந்தமைக்கு எதிராக திலீபன் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தார்.
இச்சந்தர்ப்பத்தில் இந்திய பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியை விடுதலை புலிகள் கொன்றனர். இது அவர்கள் செய்யாத பாரிய தவறாகும். ராஜீவ் காந்தியை கொலை செய்யும் தீர்மானத்தை பிரபாகரனும் பொட்டு அம்மானுமே இணைந்து எடுத்தார்கள்.
ராஜீவ் காந்தியின் கொலையையடுத்து இந்தியாவில் விடுதலை புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டது. இதனையடுத்து 26 நாடுகள் விடுதலை புலிகள் இயக்கத்தை தடைசெய்தது.
ஜனநாயக வழியில் சமாதானத்தை ஏற்படுத்த நான் பலமுறை முயற்சித்தேன். இதனை விடுதலை புலிகளின் ஆலோசகராக அன்டன் பாலசிங்கமும் ஏற்றுக்கொண்டார். எனினும் பிரபாகரன் ஒரு போதும் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
ஜனநாயக வழியில் சமாதானத்தை ஏற்படுத்தவே விடுதலை புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நான் இணைந்தேன்.
விடுதலை புலிகள் இயக்கத்திலிருந்து நான் பிரிந்ததால் 6000 விடுதலை புலி போரளிகளை வீட்டுக்கு அனுப்பினோம்.
முன்னர் இருந்த அனைத்து அரசாங்கங்களும் விடுதலை புலிகள் இயக்கத்தை சமாளிக்கவே தீர்மானித்தன. எனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாத்திரமே ஒழிக்க வேண்டும் என நினைத்தார்.
இன்று உலக நாடுகள் போர் குற்றங்கள் தொடர்பில் பேசுகின்றது. எனினும் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது விடுதலை புலிகள் 3 இலட்சம் பொதுமக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தினர்.
இன்று புலம்பெயர்ந்த தமிழர்கள் ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதை நிறுத்தி விட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவ முன்வர வேண்;டும்.
வெளிநாடுகளை விடுதலை புலிகளுடன் அரசாங்கள் பேசவைத்தது தவறு. இதனால் அவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் அமைப்பாளர்களை நியமித்தார்கள். விடுதலை புலிகளை தடைசெய்ய முடிந்த நாடுகளால் அவர்களின் செயற்பாடுகளை நிறுத்தமுடியவில்லை.
வெளிநாட்டு பணத்தைக்கொண்டு விடுதலை புலிகள் ஆயுதங்களையே கொள்வனவு செய்தனர்.
நாட்டின் எந்த பகுதியிலும் யாராலும் கோயில்கள் விகாரைகள் வீடுகள் என கட்டமுடியும்.
பாணந்துறையில் பிரபாகரனின் தந்தையால் கட்டப்பட இந்து கோயிலொன்று உள்ளதாக அங்குள்ள மக்கள் மூலம் நான் அறிந்துகொண்டேன். பிரபாகரனின் தந்தையால் கட்டப்பட கோயிலை சிங்களவர்கள் உடைக்கவில்லை" என்றார்.
ஆணைக்குழுவின் உறுப்பினர்களால் கேட்கப்பட்ட கேள்விகளும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் பதில்களும் பின்வருமாறு:
ஆணைக்குழு: விடுதலை புலிகள் இயக்கத்தில் உங்களை இணையுமாறு பிரபாகன் நேரடியாக அழைப்புவிடுத்தாரா?
பிரதியமைச்சர்: இல்லை. அப்போது விடுதலை புலிகள் துண்டுப்பிரசுங்கள் மூலமாகவும் சுவரொட்டிகள் முலமாகவும் அழைப்புவிடுத்தார்கள். ஒவ்வொரு பிரதேசங்களிலும் அவர்களின் முகவர்கள் செயற்பட்டார்கள்.
ஆணைக்குழு: 1990 ஆம் ஆண்டு விடுதலை புலிகளால் 600 பொலிஸார் கொல்லப்பட்டமை தொடர்பில் உங்களின் கருத்து?
பிரதியமைச்சர்: அப்போது நான் யாழ்ப்பாணத்திலிருந்தேன். பொட்டு அம்மானின் உத்தரவிற்கிணங்க 600 பொலிஸார் விடுதலை புலிகளால் கைது செய்யப்பட்டதாக கேள்விப்பட்டேன். பின்னர் நடந்தவை எனக்கு தெரியாது.
ஆணைக்குழு: இலங்கையில் மீண்டுமொரு யுத்தம் ஏற்படும் என நீங்கள் நினைக்கின்றீர்களா?
பிரதியமைச்சர்: நிச்சயமாக இல்லை. இந்த யுத்தத்தினால் தமிழ் மக்கள் துக்ககரமான மற்றும் தேவையற்ற அனுபவங்களை எதிர்நோக்கியுள்ளனர். இதனால் நிச்சயமாக மற்றொரு யுத்தத்திற்கு தயாராகமாட்டார்கள். அதிலும் குறிப்பாக வன்னி மக்கள்.
ஆணைக்குழு: தமிழ் மக்களுக்கு எவ்வாறான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என நீங்கள் முன்மொழிகின்றீர்கள்?
பிரதியமைச்சர்: பெரும்பான்மை சமூகத்தை புண்படுத்தாத வகையில் அரசிய தீர்வு வழங்கப்பட வேண்டும். அப்படியிருந்தால் தான் நல்லிணக்கம் ஏற்படும்.
மாகாண சபைகளுக்கு தேவையான அதிகாரங்களை வழங்கி அங்குள்ள மக்கள் ஆளக்குடிய வகையில் மாகாண சபைகளை ஏற்படுத்த வேண்டும். மாகாண சபைகளின் அதிகாரங்களில் வேறு யாரும் தலையிடக்கூடாது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி ஆகிய பொலிஸ் அதிகாரங்கள் போன்ற தேவையற்ற அதிகாரங்களை கேட்கின்றன.
சிறிய நாட்டுக்குள் இவ்வாறான அதிகாரங்கள் கேட்பது நல்லதல்ல. இதன் மூலம் பெரும்பான்மையினத்தவர் மத்தியில் சந்தேகம் ஏற்படும்.
முறையான கல்வி சிறந்த பொருளாதாரம் சம நிலையான பதவி வழங்கல் மூலமும் மக்களை திருப்திப்படுத்தலாம்.
ஆணைக்குழு: வடக்கு கிழக்கு பகுதிகளில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படுவதன் மூலம் குடியேற்றங்கள் இடம்பெறுமா?
பிரதியமைச்சர்: இல்லை. யுத்த காலத்திலும் இவ்வாறான முகாம்கள் இருந்தன. கிழக்கு பகுதியில் ஒரு போதும் இராணுவம் சிவில் நடவடிக்கையில் ஈடுபடவில்லை.
தற்போது வடக்கில் சிவில் நடவடிக்கைகளை இராணுவத்தினர் பொலிஸாரிடம் ஒப்படைக்கின்றனர்.
தற்போது இராணுவத்தினர் வடக்கு கிழக்கு பகுதிகளில் அறக்கட்டளை பணிகளில் ஈடுபட்;டு வருகின்றனர்.
வடக்கு கிழக்கு பகுதிகளில் சிங்கள் குடியேற்றங்கள் மற்றும் பௌத்த விகாரைகள் தொடர்பில் பிரச்சினைகள் இருப்பின் ஜனாதிபதியுடன் இது தொடர்பில் கலந்துரையாடலாம்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’