இலங்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் கட்சிகளின் அரங்கமும் இன்று சனிக்கிழமை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.
இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தமிழ் மக்களின் அமைப்புக்கள் ஒரே குரலில் ஒலிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த முதல் சந்திப்பில் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக இரு தரப்பையும் உள்ளடக்கிய ஒரு குழுவை அமைப்பது என்றும் இரு தரப்பும் இன்று முடிவெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அதேவேளை தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகள் குறித்தும் இரு தரப்பும் இணைந்து பணியாற்றுவதற்கான நிலைமைகள் குறித்தும் அந்தச் சந்திப்பில் ஆராயப்பட்டதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அனைத்துத் தமிழ் கட்சிகளும் ஒரு பொது நிலைப்பாட்டுக்கு வர வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக அமைச்சரும் தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.
முடிந்த வரை இன்றைய சந்திப்பு சுமூகமாகவே நடந்ததாகவும் அவர் கூறினார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’