பள்ளி குழந்தைகளை கடத்துவோர் மீது தயவு தாட்சண்யம் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
கோவையில் நடந்த சம்பவம் தொடர்பாக சட்ட பேரவையில் நேற்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அங்கு பேரிய துணை முதல்வர் ஸ்டாலின் மேலும் தெரிவிக்கையில்,
"சட்டம், ஒழுங்கைப் பராமரிக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்வதால் தமிழகத்தில் பெரிய அளவில் பிரச்சினை இன்றி அமைதி காக்கப்படுகிறது.
ஆங்காங்கே நடந்த கடத்தல் சம்பவங்களில் காவல்துறை வேகமாக செயல்பட்டு குற்றவாளிகளைக் கைது செய்து கடத்தப்பட்டவர்களை மீட்டிருக்கிறார்கள்.
தனிப்பட்ட பிரச்சினையால் வீட்டை விட்டு செல்லும் சம்பவங்கள் குறித்து பத்திரிகையில் வரும்போது, அவற்றையும் கடத்தல் என்றே மக்கள் தவறாக எடுத்துக் கொள்கின்றனர்.
பணயத் தொகை கேட்டு சிறுவர் கடத்தப்பட்ட சம்பவங்கள் மிகமிக குறைவு. சென்னையில் ஜூன் 2009 முதல் இதுவரை 45 கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டன. அவற்றில் 2 மட்டுமே கடத்தல் சம்பவங்கள்.
அனைத்து பள்ளிக்கூடங்களிலும் காவல் துறையினர் கண்காணிப்பு பணிகளை அதிகப்படுத்தியுள்ளனர். பாடசாலை தொடங்கும் மற்றும் முடியும் நேரங்களில் ரோந்து வருகின்றனர்.
பளளி நிர்வாகங்கள், மாணவர்களின் பாதுகாப்பு குறித்து பெற்றோரோடு பேசவேண்டுமென்றும், மாணவர்கள் பள்ளிகளுக்கு வரும் வாகனங்களின் டிரைவர்கள் குறித்த விவரங்கள் சேகரித்து வைக்க வேண்டுமென்றும், மாலையில் வாசலில் ஆசிரியர்களை அமர்த்தி கண்காணிக்க வேண்டுமென்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெரிந்தவர்களே, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதால், சில சமயங்களில் அந்தக் குற்றங்களை முழுவதுமாக தடுக்க இயலாமல் போய்விடுகிறது.
இருப்பினும், தேவையான நடவடிக்கைகளை எவ்வித தயவுதாட்சண்யமின்றி எடுக்க காவல் துறைக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’