கடந்த 23.10.2010 சனியன்று யாழ் நூலகத்தில் என்ன நடந்தது என்ற உண்மை விபரங்கள் வழமை போல் திட்டமிட்டு இருட்டில் மறைக்கப்பட்ட ஒரு சூழலில்
அரசியல் சுயலாபங்களுக்காக மட்டும் கருத்து வெளியிட்டு தமிழ் மக்களிடையே தவறான தகவல்களை திணித்து அவர்களை தொடர்ந்தும் பதட்டமும் குழப்பமுமான ஒரு சூழலுக்குள் தள்ளி விடும் சூழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில்.. ஒரு பொறுப்புள்ள அரசியல் தலைமை என்ற வகையில் யாழ் நூலகத்தில் என்ன நடந்தது என்ற உண்மை விளக்கத்தை நாம் சகலருக்கும் தெரியப்படுத்த விரும்புகின்றோம்..
தென்னிலங்கையில் இருந்து சுற்றுலாப்பயணிகளாக யாழ் நோக்கி வருகின்ற மக்கள் தெற்காசியாவின் சிறந்த நூலகமாக கருதப்படும் யாழ் நூலகத்தை தினமும் பார்வையிட்டு வருவது வழமை. நூலகத்தை பார்வையிடுவதற்கான நேரமும் மாலை 5 மணி தொடக்கம் 6 மணி வரை என நூலக நிர்வாகத்தினால் வரையறுக்கப்பட்டிருப்பதையும் சகலரும் அறிவர். அந்த வகையில் கடந்த 21.10.2010 அன்றும் வழமைபோல் நூலகத்தை பார்வையிட தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.
ஆனாலும் குறித்த தினத்தில் யாழ் நூலக மண்டபத்தில் அகில இலங்கை மருத்துவர் மாநாடு நடந்து கொண்டிருப்பதாகவும் 23 ஆம் திகதியே நூலகத்தை பார்வையிடுவது சாத்தியம் என்றும் நூலக நிர்வாகத்தால் கருத்து தெரிவிக்கபட்டதை அடுத்து அவர்கள் திரும்பிச் சென்றிருந்தனர்.
இதேபோல் மறுதினமாகிய 22.10.2010 அன்றும் தென்னிலங்கை மக்களில் இன்னொரு பகுதியினர் நூலகத்தைப் பார்க்க வந்திருந்தனர். அவர்களுக்கும் முதல் நாளன்று சொல்லப்பட்டது போல் 23 ஆம் திகதி மாலையில் வருமாறு திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.
நூலக நிர்வாகத்தினர் சொன்னது போல் ஏற்கனவே இரு தினங்களிலும் வந்திருந்த தென்னிலங்கை சுற்றுலாப்பயணிகள் 23 ஆம் திகதி மாலை யாழ் நூலகத்தை பார்வையிடும் ஆர்வத்தோடு மறுபடியும் நூலகம் நோக்கி வந்திருந்தனர். அவர்களோடு அன்றைய தினம் புதிதாகவும் இன்னொரு பகுதி மக்களும் அங்கு வந்திருந்தனர்.
ஆனாலும் அன்றைய தினம் மாலை 4.30 க்கு முடிவடைவதாக இருந்த அகில இலங்கை மருத்துவர் மாநாடு குறித்த நேரத்தில் முடிவடையாத காரணத்தினால் அந்த மாநாட்டின் நலன் கருதி அன்றைய தினமும் குறித்த நேரத்தில் நூலகத்தை பார்வையிட அனுமதிக்க முடியாத ஒரு சூழலில் யாழ் நூலக நிர்வாகத்தினர் சுற்றுலாப்பயணிகளோடு பேசி தமது தவிர்க்க முடியாத சூழலை எடுத்து விளக்கியிருந்தனர்.
ஏற்கனவே நூலகத்தைப் பார்வையிட வந்து முடியாமல் போன தென்னிலங்கை மக்கள் மறுபடியும் குறித்த தினத்திலும் தம்மால் நூலகத்தை பார்வையிட முடியாத ஒரு சூழலில் தாம் ஏமாற்றப்படுவதாகவும் திட்டமிட்ட முறையிலேயே தமக்கு நூலகத்தை பார்வையிடுவதற்கான அனுமதி மறுக்கப்படுவதாகவும் தவறாக எண்ணி நூலக நிர்வாகத்தினர் மீது சந்தேகம் கொண்டவர்களாக தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
அகில இலங்கை மருத்துவர் மாநாட்டு நிகழ்வுகள் சரிவர நிறைவேற வேண்டும் என்ற யாழ் நூலக நிர்வாகத்தின் கடமை உணர்வு ஒரு புறமும் மூன்று தசாப்தங்களுக்கு பின்னர் சுற்றுலாப்பயணிகளாக யாழ் வந்திருந்த தாம் யாழ் நூலகத்தை பார்வையிடாமல் ஏமாற்றத்துடன் திரும்பி விடுவோமோ என்ற தென்னிலங்கை மக்களின் ஏக்கம் இன்னொரு புறமுமாக இரு தரப்பினரும் தங்களது நியாயங்களை நூலக வாசலில் நின்று பரிமாறிக்கொண்டனர்.
இது குறித்த வாதப்பிரதிவாதங்கள் தென்னிலங்கை சுற்றுலாப்பயணிகளுக்கும் யாழ் நூலக நிர்வாகத்தினருக்கும் இடையில் நூலக வாசலில் நடந்து கொண்டிருக்க.. அன்றைய பொழுதும் மெல்லென நகர்ந்து நேரம் கடந்து கொண்டிருக்க உள்ளே நடந்து கொண்டிருந்த அகில இலங்கை மருத்துவர் மாநாடும் முடிவடைந்து விட்டது.
இந்த இடைவெளிக்குள் தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளும் யாழ் நூலக நிர்வாகத்தினரும் வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியிலும் சுமுகமானதொரு தீர்மானத்திற்கும் வந்திருந்தனர். குறித்த நேரம் கடந்த போதிலும் தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் நேரம் தாமதித்தாவது நூலகத்தினுள் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். உள்ளே சென்ற சுற்றுலாப் பயணிகள் யாழ் நூலகத்தை பார்வையிட்ட மகிழ்ச்சியோடு வெளியேறிச் சென்றிருந்தனர்.
இதுவே உண்மையில் நடந்த சம்பவமாகும். ஆனாலும் நடந்ததை நடக்கவில்லை என்றும் நடந்திருக்காததை நடந்தது என்றும் வழமை போல் திட்டமிடப்பட்டு கட்டி விடப்பட்ட கட்டுக்கதைகள் காட்டுத்தீ போல் பரப்பட்டிருந்தன.
துப்பாக்கி சத்தங்களும் அதன் துயரங்களும் மனிதப்படுகொலைகளும் அதிலிருந்து கிளம்பும் மனித அவலங்களின் ஓலங்களும் எமது வாழ்விடங்களில் ஓய்ந்து விட்ட ஒரு சூழலில் சுயலாப அரசியல் நடத்துவதற்கு இனி சந்தர்ப்பம் கிடையாதா? என தேடிக்கொண்டிருந்தவர்கள் நடந்த சம்பவத்தை திரிபுபடுத்தி ஊதிப்பெருப்பித்திருந்ததோடு மக்களின் மனங்களில் வழமைபோல் குழப்பங்களை
உருவாக்கவும் முயற்சித்திருந்தனர்.
இந்நிலையில் சில சுயலாப சக்திகள் இருட்டில் ஒளிக்க முயற்சித்திருந்த உண்மைச் சம்பவத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் நோக்கில்.. திட்டமிட்டு பரப்பி விடப்பட்ட செய்திகளால் தமிழ் மக்களை மறு படியும் பதட்டமானதும் குழப்பமானதுமான ஒரு சூழலுக்குள் தள்ளி விடும் முயற்சிகளை முளையிலேயே கிள்ளிவிடும் பொது நோக்கில்.. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ் நூலகத்தில் சகல தரப்பினருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்றை ஒழுங்கு செய்திருந்தார்.
இதில் யாழ். மாநகர முதல்வர் திருமதி பற்குணராஜா யோகேஸ்வரி அவர்கள் உட்பட ஆளும் மற்றும் எதிர்க்கட்சி சார்ந்த மாநகர சபை உறுப்பினர்கள் யாழ் நூலக நிர்வாகத்தினர். பாதுகாப்பு தரப்பினர் பொலிஸார் பொது அமைப்பு பிரதிநிதிகள் நலன் விரும்பிகள் மற்றும் சமூக அக்கறையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
பதட்டமான சூழலை உருவாக்க முனையும் கபடத்தனங்களுக்கு எந்த தரப்பினரும் பலியாகி விடக்கூடாது என்றும் இதில் எவருடைய மனங்களாவது தவறான சந்தேகங்களால் காயப்பட்டிருப்பின் அது தென்னிலங்கை சுற்றுலாப்பயணிகளின் மனங்களாக இருந்தாலென்ன அல்லது யாழ் நூலகம் சார்ந்தவர்களின் மனங்களாக இருந்தாலென்ன இரு தரப்பு மன உணர்வுகளையும் புரிந்து கொண்டு ஒரு சம்பவத்தை ஊதிப்பெருப்பிக்கும் சூழ்ச்சியை உடைத்தெறியும் நல்லெண்ணங்களோடு சகலரிடமும் ஒரு அமைச்சர் என்ற வகையில் தான் மன்னிப்பு கோருவதாகவும் பெருந்தன்மையோடு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பகிரங்கமாக கருத்து தெரிவித்திருந்தார்.
செயலாளர் நாயகமும் அமைச்சருமான தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எடுத்திருந்த அனுபவம் மிக்க அணுகுமுறையை அந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்த சகல தரப்பினரும் ஏற்றுக்கொண்டிருந்ததோடு பாராட்டியும் சென்றிருந்தனர்.
இதே வேளை யாழ் மாநகரசபையின் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் தமக்கிடையிலான அரசியல் முரண்பாடுகள் இருந்த போதிலும் இச்சந்திப்பின் போது மிகவும் ஆரோக்கியமான கருத்துப்பரிமாற்றங்களை நடத்தியிருந்ததையும் நாம் இங்கு குறித்துக் காட்ட விரும்புகின்றோம்.
தமிழ் மக்களை மறுபடியும் பதட்டமானதும் குழப்பமானதுமான சூழலுக்குள் தள்ளிவிடவும் எமது மக்கள் மீது மறுபடியும் அவலங்களைச் சுமத்தி விடவும் வழி வகுக்கும் தவறான வழிமுறையில் செயற்படுவதை இனியாவது நிறுத்தி எமது மக்கள் நலன் சார்ந்து சிந்திக்கவும் கருத்து வெளியிடவும் முன்வருமாறு சம்பந்தப்பட்ட சகல தரப்பினரை நோக்கியும் நாம் எமது மக்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கின்றோம்.
அ. இராசமாணிக்கம்
நிர்வாகச் செயலாளர்
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஈ.பி.டி.பி
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’