அ அனைவருக்கும் வணக்கம்!....
எமது தேசமெங்கும் இரத்த ஆறு கொட்டிப்பாய்ந்த கொடிய வரலாறு ஒழிந்து முடிந்து சமாதான நதி பெருக்கெடுத்து பாயும் காலம் இது!.
.நாம் விரும்பும் சமாதானம் என்பது சகல மக்களும் அனுபவித்தே தீர வேண்டிய அரசியலுரிமை சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டது.
அந்த வகையில் அரசியலுரிமை சுதந்திரத்தை எமது மக்கள் அனுபவிக்க முடிந்த நடவடிக்கைகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் முன்னெடுத்து வருகின்ற இவ்வேளையில்....
இதே சம காலத்தில் எமது மக்களின் வரலாற்று வாழ்விடங்களை அபிவிருத்தியால் தூக்கி நிறுத்துவோம் என்ற உண்மையை மக்களாகிய உங்களுக்கு உறுதியாக மெய்ப்பிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாகவே இன்றைய நாளை நாம் கருத வேண்டும்.
இது சாதாரண நாள் அல்ல. நாம் அழிந்த வரலாறு போதும். இனி அழிவுகளில் இருந்து எழுந்து நிமிர்வோம் என்பதற்கு கட்டியம் கூறும் அர்த்தமுள்ள நாள் இன்றைய நாள்.
ஆகவேதான் இன்றைய இந்த நிகழ்வில் எமது அயலுலக நட்பு நாடாகிய இந்தியாவின் பிரதமர் கௌரவ திரு மன்மோகன் சிங் அவர்களின் நல்லெண்ண தூதுவனாக எஸ். எம் கிருஸ்ணா அவர்கள் வருகை தந்திருக்கின்றார்.
இலங்கை இந்திய ஒப்பந்த காலத்தின் ஆரம்பங்களில் இந்தியாவில் இருந்து சமாதான தூதுவனாக வந்திருந்தவர் திரு பார்த்தசாரதி அவர்கள்.
அப்போது எமது மக்கள் கீதை சொன்ன கண்ணன் வண்ண தேரில் வருகிறான் போன்ற பக்தி பாடல்களை எங்கள் தேசமெங்கும் இசைக்க விட்டு மகிழ்ச்சி ஆரவாரத்தோடு அதை வரவேற்றிருந்தனர்.
அது போலவே இன்றும் இந்தியாவில் இருந்து இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் தூதுவனாக எம்மை நாடி வந்திருக்கிறார் எஸ்.எம்கிருஸ்ணா அவர்கள்.
உலகத்தின் ஒளியாகவும் சமாதான தூதுவனாகவும் யேசு பிரான் அவதரித்த நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் நீதிக்காகவும் தர்மத்திற்காகவும் உபதேசம் செய்த கிருஸ்ண பரமாத்மாவின் வடிவமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம்.கிருஸ்ணா அவர்கள் இங்கு வருகை தந்திருக்கின்றார்.
அவரை ஈழத்தமிழர்கள் சார்பாகவும் எமது அரசாங்கத்தின் சார்பாகவும் நான் மகிழ்ச்சியோடு வரவேற்கின்றேன்.
அது மட்டுமன்றி. எமது மக்களுக்காக இனி வரப்போகின்ற அரசியலுரிமை சுதந்திரத்திற்காகவும் அழிந்து போன எமது தேசத்தை மறுபடியும் கட்டி எழுப்பும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் இன்னொரு வடிவமாகவும், அவரது பிரதிநிதியாகவும் எமது நண்பர் பசில் ராஜபக்ச அவர்கள் இங்கு வந்திருக்கின்றார்.
எப்போதுமே எம்மோடு ஒத்துழைத்து வட பகுதி மக்களின் துயரங்களோடும் துன்பங்களோடும் பங்கெடுப்பதோடு மட்டுமன்றி எமது மக்களுக்காக முன்னெடுத்து வருகின்ற அனைத்து செயற்பாடுகளுக்கும் உறுதுணையாக இருப்பவரும் வட பகுதி மக்களுக்கு கிடைத்த மாபெரும் வரப்பிரசாதமாக திகழ்பவருமான வட மாகாண ஆளுநர் சந்திரசிறி அவர்கள் இங்கு வந்திருக்கின்றார்.
துணிச்சலான பெண்மணிகளாக எம்மோடு சேர்ந்து யாழ் மாவட்ட அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டு வரும் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் அவர்கள் மற்றும் எமது யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா அவர்கள் எமது சக பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று மக்களாகிய உங்களுக்கு நம்பிக்கை தரும் சகலரும் இங்கு வந்திருக்கின்றோம்.
எமது மக்களில் பலர் இறந்து போன தங்களது உறவுகளை நினைத்து துயரப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அது எனக்கு புரிகின்றது.
இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது எமது மக்களுக்கு கிடைத்திருந்த ஒரு பொன்னான வாய்ப்பு. அதை ஏற்று சரி வர பயன்படுத்தியும் இருந்தால் நாம் கடந்த காலங்களில் அழிவுகளை சந்தித்திருக்க வேண்டிய துயரங்கள் இங்கு நிகழ்ந்திருக்காது.
மக்களாகிய நீங்கள் உங்களது பிள்ளைகளை அல்லது உறவுகளை அழிவு யுத்தத்திற்கு பலி கொடுத்திருக்க வேண்டிய அவலங்கள் இங்கு நடந்திருக்காது.
தவறான வழி முறையில் வழிநடத்தப்பட்டிருந்தாலும் இழந்து போன உயிர்கள் யாவும் எமது மக்களாகிய உங்களது பிள்ளைகள் என்ற வகையில் எங்களது உறவுகள் என்ற வகையில் நாமும் உங்களது துயரங்களில் பங்கெடுக்கின்றோம்.
நடந்தவைகள் நடந்தவைகளாகவே இருக்கட்டும். இனி நடப்பவைகள் நல்லதாக நடக்க வேண்டும் என்பதற்காக தமிழ் மக்கள் அனைவரும் சிந்தித்து செயலாற்ற முன்வர வேண்டும்.
கடந்த காலங்களில் உங்களுக்கு அழிவுகளை பெற்று தந்த தவறான வழிமுறைகளை நீங்கள் உணர்ந்து தமிழ் மக்களை நடுத்தெருவிற்கு கொண்டு வந்து நிறுத்தியிருந்த அனைத்து வழிமுறைகளையும் நீங்கள் இன்னமும் முழுமையாக புரிந்து கொண்டு செயற்பட முன்வருவீர்களேயானால் நாம் கடந்த இருபது வருடங்களில் சந்தித்திருந்த அழிவுகளை மிகவும் குறுகிய காலத்தில் நாம் கட்டி எழுப்பி விடலாம்.
இது போன்ற நிகழ்வுகளும் திட்டங்களும் இங்கு நடந்து கொண்டிருப்பதும் நீங்கள் பயனாளிகளாக வந்து உங்களுக்கான உதவிகளை பெற்று கொண்டிருப்பதும் மிகவும் மகிழ்ச்சிகரமானதும் நம்பிக்கை தரக்கூடியதுமான விடயங்களாகும். நாம் கடைப்பிடித்து வருகின்ற இணக்க அரசியல் செயற்பாட்டின் மூலம் இது போன்ற பல தேவைகளை நிறைவேற்றி முடிக்க முடியும் என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.
நம்பிக்கைதான் வாழ்க்கை. ஒருவன் நடுக்கடலில் வீழ்ந்து விட்டான் என்பதற்காக அவன் கடலை திட்டிக்கொண்டிருக்க முடியாது. நம்பிக்கையோடு கரையேற முயற்சிக்க வேண்டும். கையில் கிடைக்கின்ற ஏதாவது ஒன்றை முதலில் கெட்டியாக பிடித்துக்கொண்டு கரையேற முயற்சிக்க வேண்டும். அது போலவே எமது பிரச்சினைகளையும் நாம் அணுக வேண்டும்.
யாருடன் பேசி நாம் எமது மக்களின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியுமோ அவர்களுடன் இணைந்துதான் எதையும் சாதிக்க முடியும்.
நாம் கட்டம் கட்டமாக எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்போம் என்று உங்களுக்கு வாக்குறுதி அளித்திருக்கின்றோம். அது நிச்சயம் நடக்கும். நாங்கள் அதை நடாத்திக் காட்டுவோம்.
எமது மக்களுடைய மீள் குடியேற்றம் அவர்களுக்கான வாழ்வாதார வசதிகள் உயர்பாதுகாப்பு வலயங்களாக இருந்த பிரதேசங்களை மீண்டும் மக்கள் குடியிருப்பாக மாற்றியமைத்தல் போன்ற எல்லா பிரச்சினைகளும் கட்டம் கட்டமாக நிறைவேறி வருவதை நீங்கள் கண்டு வருகின்றீர்கள்.
இவைகள் எல்லாம் நாங்கள் அரசாங்கத்தில் பங்கெடுத்திருப்பதாலும் அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து கொண்டதாலும் நடந்து கொண்டிருக்கும் காரியங்களே என்பதை நீங்கள் உணர்ந்திருக்கின்றீர்கள்.
இது போலவே எமது அரசியலுரிமை பிரச்சினைக்கும் நாம் தீர்வு காண்போம் என்பதை உறுதியாக தெரிவிக்க விரும்புகின்றேன். எமக்கு இன்னமும் அதிகமான அரசியல் பலம் கிடைத்திருந்தால் நாம் இன்னமும் விரைவாக அவைகளை நிறைவேற்றியிருப்போம்.
நேற்றைய தினம் எமக்குள் பொது உடன்பாடு கண்டு செயற்பட்டு வரும் பல்வேறு கட்சிகளும் இணைந்த தமிழ் கட்சிகளின் அரங்கம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தது. இந்த சந்திப்பானது மிகவும் திருப்திகரமானதாகவும், நம்பிக்கை தருவதாகவும், முன்னேற்ற கரமானதாகவும் அமைந்திருந்தது.
ஆகவே எமது மக்களின் விடிவிற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் தமது முரண்பாடுகளை மறந்து நடைமுறைச் சாத்தியமான வழிமுறையில் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்றும் நான் இந்த நிகழ்வின் ஊடாக அழைப்பு விடுக்க விரும்புகின்றேன்.
இதே நேரத்தில் இந்த நாட்டில் நிலவியிருந்த சகல வன்முறைகளும் இன்று முடிவிற்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றது. எமது சமூகம் ஒரு ஜனநாயக மயப்படுத்தப்பட்ட சமூகமாக முழுமையாக மாறுவதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க முன்வரவேண்டும்.
நேற்றிரவு 2.00 மணியளவில் நான் கொழும்பில் இருந்து யாழ் நோக்கி கொடிகாமம் பகுதி ஊடாக வந்துகொண்டிருந்த போது யாழ் தினக்குரல் பத்திரிகை அலுவலகத்தில் இருந்து எனக்கு அவசர தொலைபேசி அழைப்பு ஒன்று வந்திருந்தது.
தமது அலுவலகத்தின் அருகில் யாரோ சிலர் இரும்பு தடி பொல்லுகளுடன் வந்து நிற்பதாகவும் தம்மை ஆபத்தில் இருந்து பாதுகாக்குமாறும் எனக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. நான் உடனடியாகவே யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியோடு தொடர்பு கொண்டு சம்பவ இடத்திற்கு செல்லுமாறு தெரிவித்திருந்ததோடு அந்த நள்ளிரவு வேளையில் நானே நேரடியாக தினக்குரல் அலுவலகம் நோக்கி சென்று தினக்குரல் ஊழியர்களுடன் பேசி நிலைமைகளை அவதானித்து உரிய நடவடிக்கையினையும் எடுத்திருந்தேன்.
இது போன்ற அச்சுறுத்தல் சம்பவங்களில் எந்த தரப்பினரும் ஈடுபடுவதை தவிர்த்து இன்று உருவாகியிருக்கும் இந்த ஜனநாயக சூழலை பாதுகாக்க சகலரும் முன்வர வேண்டும் என்பதை நான் வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன்.
வன்முறைகளை முடிவிற்கு கொண்டு வந்திருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் இந்த ஜனநாயக சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற எமது விருப்பங்களை வெளிப்படையாகவே ஏற்று கருத்துச் சொல்லி வருகின்றார். அது மட்டுமன்றி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பார் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. அபிவிருத்தி அன்றாட அவலங்களுக்கான தீர்வு முதற்கொண்டு அரசியல் தீர்வு வரைக்கும் அனைத்தையும் நாம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் அரசாங்கத்தின் ஊடாக நாம் நிறைவேற்றுவோம். அதற்கு ஈ.பி.டி.பி யினராகிய நாம் பொறுப்பு.
நடக்கும் என்று நம்பிக்கையோடு செயற்பட்டால் அது நடக்கும். நடக்காது என்று கூறி நாம் விலகி இருப்போமேயானால் அது ஒரு போதும் நடக்கப்போவதில்லை.
எமக்கு பக்க பலமாக தமிழ் மக்களுக்கு உறுதுணையாக எமது மக்களின் அரசியலுரிமைக்கு தீர்வு காணும் விடயத்தில் எமது அரசாங்கத்திற்கும் எமக்கும் துணையாக எமது நட்பு நாடாகிய இந்தியா இருக்கின்றது.
அதற்கு அடையாளமாகவே பல்வேறு அபிவிருத்தி மற்றும் மனிதாபிமான உதவிகளோடு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம் கிருஸ்ணா அவர்கள் இங்கு வருகை தந்திருக்கின்றார்.
அதே போல் நண்பர் பசில் ராஜபக்ச அவர்கள் இலங்கை இந்திய அரசுகளுக்கிடையிலான ஒரு உறவுப்பாலமாக செயலாற்றுவதோடு இன்று இந்த மண்ணையும் மக்களையும் நோக்கி வர விரும்பியிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் எம். கிருஸ்ணா அவர்களையும் அழைத்து வந்திருக்கிறார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் தலைமையிலான அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் இன்று கைகுலுக்கி நேச சக்திகளாக செயற்பட்டுக் கொண்டிருப்பது இந்த நாட்டில் வாழுகின்ற தமிழ் மக்களுக்கும் பெரிதும் சாதகமான ஒரு விடயமாகும்.
ஆகவே இலங்கை இந்திய நட்புறவு வளர வேண்டும் என்று நான் தமிழ் மக்களின் சார்பாக வாழ்த்துகின்றேன்.
இதே வேளையில் எமது மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை புரிந்து வருகின்ற இந்திய அரசுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கும் தமிழ் மக்களின் சார்பாக நான் நன்றி தெரிவித்து எனது உரையை இத்துடன் முடிக்கின்றேன்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’