தமிழ் மக்கள் எதிர்பார்த்திருக்கின்ற நியாயமான அரசியல் தீர்வு தொடர்பில் இன்றைய அரசாங்கத்திடமிருந்து இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை. இது தமிழ் மக்கள் மீதான அரசாங்கத்தின் அக்கறையீனத்தைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
மீள்குடியேற்றம் உட்பட தமிழர் தரப்பின் எந்தவொரு விடயத்திலும் அரசாங்கத்திடம் ஆக்கபூர்வமான திட்டங்களோ நடவடிக்கைகளோ கிடையாது. ஆனாலும் தமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளும் வகையில் வெளியாருக்கு அரசாங்கம் பாசாங்கு காட்டி வருகின்றது என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சு நடத்துவதற்கு தயாராகி வருவதாக வெளிவந்துள்ள செய்திகள் குறித்து கேட்டபோதே கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட எம்.பியுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
கடந்த ஜூன் மாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியது. அதன் பின்னர் எமது அமைப்பின் தலைவருடனும் அரசு பேச்சுக்களை நடத்தியது.
இந்த பேச்சுக்களின் போது எமது மக்களின் இடம்பெயர்வு, மீள்குடியேற்றம் மற்றும் அவர்களுக்கான சகவாழ்வு ஆகியவற்றில் அரசாங்கத்தின் நேர்மைத்தன்மையை வெளிக்காட்டுமாறு வற்புறுத்தி வந்துள்ளோம்.
இன்றும்கூட இடம்பெயர்ந்த மக்கள் மற்றும் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றவர்கள் துன்பம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். மீள்குடியேற்ற நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரதிநிதிகளை அறிவிக்குமாறு அரசாங்கம் எம்மிடம் கேட்டிருந்தது. அதனை நாம் ஏற்றுக் கொண்டதுடன் பிரதிநிதிகளின் பெயர்களையும் அறிவித்திருந்தோம்.
ஆனாலும் இந்த திட்டம் தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து எந்த முன்னேற்றத்தையும் காண முடியாதிருக்கின்றது. மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பிலோ அல்லது அங்குள்ள மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளைத் தீர்த்து அவர்களது நிம்மதியான வாழ்க்கையை உறுதிப்படுத்துவதற்கோ அரசாங்கத்திடம் ஆக்கபூர்வமான திட்ங்கள் எதுவும் இல்லை. அக்கறையும் இல்லை.
பேச்சுக்களை மட்டுமே நடத்தி வருகின்ற அரசாங்கம் கூட்டமைப்பின் கோரிக்கையின்ஒஅடி, தமிழ் மக்களின் அபிலாஷைகளின் பிரகாரம், தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளக் கூடிய நிரந்தரமானதும் நியாயமானதுமான அரசியல் தீர்வு தொடர்பில் வாய் திறந்திருக்கின்றதா என்பதே எமது கேள்வியாக இருக்கின்றது. அரசாங்கத்தினால் உறுதியளிக்கப்படுகின்ற விடயங்கள் எதுவும் நடந்தபாடில்லை. தனது இருப்பை தக்க வைத்துக் கொள்ள அரசாங்கம் முயற்சிக்கின்றதே தவிர துன்பப்பட்ட தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உண்மையான அக்கறையோ சிந்தனையோ அறவே இல்லை என்பதே உண்மையாகும். ஜனாதிபதி தலைமையில் வட மாகாண அபிவிருத்திக் கூட்டம் அண்மையில் இடம்பெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. வடக்கு மாகாண அபிவிருத்திக் கூட்டத்தில் அந்த மாகாண மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாம் புறக்கணிக்கப்பட்டுள்ளோம். இது உண்மையில் கசப்பான நடவடிக்கையாகவே அமைந்துள்ளது.
இதுவரையிலும் அரசாங்கம் தனது தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே செயற்பட்டு வந்துள்ளது. எமது மக்களின் குறைகளைக் கண்டறிவதற்குக் கூட திட்டங்களை வகுக்கத் தவறியிருக்கின்றது.
இதற்கு முன்னர் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையொன்றுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தருமாறு பல தடவைகளில் கேட்டிருந்த போதிலும் அதற்கான நேரத்தை ஒதுக்கித் தருவதற்கு அரசு முயற்சிக்கவில்லை. இந்நிலையிலேயே தற்போது எம்முடன் பேசுவதற்கு தயாராகி வருவதாகத் தெரிய வருகின்றது. இது தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளுக்காகவா அல்லது அரசாங்கத்தின் தேவைகளுக்காகவா என்பது தெரியாது. எது எவ்வாறிருப்பினும் தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான திட்டங்கள் அரசிடம் இல்லை. அதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கைகளும் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை" என்றார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’