வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 5 நவம்பர், 2010

ஒபாமாவிடம் செல்லும் விசா விவகாரம்

மெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அவர்கள், நாளை மறுநாள் சனிக்கிழமை இந்தியா வரவிருக்கும் நிலையில், அவுட்சோர்ஸிங் எனப்படும் அயல் பணி ஒப்பந்தங்கள் மற்றும் இந்திய தகவல் தொழில்நுட்பத் திறனாளர்களுக்கான விசா கட்டண உயர்வு உள்பட பல முக்கியப் பிரச்சினைகள் குறித்து ஒபாமாவுடன் இந்தியா விவாதிக்கும் என்று இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் நிருபமா ராவ் தெரிவித்தார்.

மூன்று நாள் பயணமாக இந்தியா வரும் அமெரிக்க ஜனாதிபதி, நேரடியாக மும்பை செல்கிறார். அங்கு இந்தியத் தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்துவதுடன், பல்வேறு சமூக நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார். அதன்பிறகு அடுத்த நாள் டெல்லி வருகிறார். திங்கட்கிழமையன்று அதிகாரபூர்வ நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.
பிரதமர் மன்மோகன் சிங்குடன் ஆலோசனை நடத்தும் அவர், அன்று மாலை இந்திய நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
அவரது பயணத் திட்டம் மற்றும் இரு நாடுகளுக்கிடையில் விவாதிக்கப்பட உள்ள முக்கியப் பிரச்சினைகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசினார் நிருபமா ராவ்.
ஐ.நா. மன்ற பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைப்பது தொடர்பான பிரச்சினை மிகவும் சிக்கலானது என்று ஜனாதிபதி ஒபாமா அவர்கள் நேற்று பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டி குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, அதுதொடர்பாக அவசரமான முடிவுக்கு வர இந்தியா விரும்பவில்லை என்று நிருபமா ராவ் தெரிவித்தார்.
அவுட்சோர்ஸிங் எனப்படும் அயல்பணி ஒப்பந்தங்களைப் பொறுத்தவரை, பராக் ஒபாமாவின் நிலைப்பாடு ஆரம்பத்தில் இருந்தே கடுமையாக இருந்து வருகிறது. ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்போது, அமெரிக்க நிறுவனங்கள் இந்தியா போன்ற நாடுகளுக்கு பணிகளை அனுப்புவதற்கு எதிராகப் பேசிவந்தார். ஆனால், அமெரிக்க நிறுவனங்களோ, குறைந்த செலவில் தங்கள் பணிகளை முடிக்க, இந்தியா போன்ற நாடுகளைத்தான் நாடுகின்றன.
சமீபத்தில், அமெரிக்க மாநிலம் ஒன்று, அயல்பணி ஒப்பந்தத்து்ககு எதிராக சமீபத்தில் தடை விதித்தது. இன்னொரு புறம், இந்திய தகவல் தொழில்நுட்பத் திறனாளர்களுக்கான விசா கட்டணத்தை அமெரிக்கா பலமடங்கு உயர்த்தியுள்ளது. இது இந்திய தொழில்துறையினரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, பராக் ஒபாமாவிடம் பேசப்படும் என நிருபமா ராவ் தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதியின் பயணத்தின்போது, விண்வெளி்த்துறை, வேளாண்மை, சுகாதாரம், தூய்மையான எரிசக்தி உள்பட பொதுமக்களின் அடிப்படை வாழ்வோடு தொடர்புடைய பல முக்கியத் துறைகளில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் நிருபமா ராவ் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’