வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 14 நவம்பர், 2010

விரைவில் அரசியல் தீர்வு காணப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

மது மக்களின் இயல்பான வாழ்விற்கு விரைவில் அரசியல் தீர்வு காணப்படும் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற ஏ9 பாதை அகலமாக்கல் மற்றும் புனரமைப்பு அபிவிருத்தி திட்டத்துக்கான தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ஏ9 பாதை திறப்பு என்பது வட மாகாண மக்களுக்கான சொர்க்கவாசல் திறப்பது போன்றதாகும். கடந்த காலங்களில் இப்பாதையை புனரமைப்பதற்கும் அகலப்படுத்துவதற்கும் பல்வேறு தடைகள் இருந்து வந்த போதிலும் தற்போது அந்தத் தடைகள் யாவும் நீக்கப்பட்டு இன்று இவ்வீதிக்கான அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த வீதி புனரமைப்புக்காக ஆயிரத்து தொள்ளாயிரம் கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் இந்நிதியை தந்துதவிய சீன அரசாங்கத்திற்கு எமது மக்களின் சார்பில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளை இவ்வீதி அபிவிருத்தி தொடர்பில் அக்கறை செலுத்தி வரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அத்துடன் வீதி புனரமைப்புப் பணிகளில் துறைசார்ந்த அதிகாரிகள் ஊழியர்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென்றும் விரைவாகவும் தரமாகவும் இவ்வீதிப் பணிகளை செய்து முடிக்க அனைவரும் ஒன்றிணைந்து பணிபுரிய வேண்டுமென்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேட்டுக் கொண்டார்.

புனரமைப்புப் பணிகளின் போது உள்ளுர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமென்பதுடன் அடுத்த நேரம் என்ன நடக்கும் என்ற நிலைமாறி இன்று நம்பிக்கையான வாழ்வைக் கிடைக்கச் செய்த ஜனாதிபதி அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளதாகவும் எமது சமூகம் எதிர்காலத்தில் வளமான தேசத்தில் நம்பிக்கையுடன் வாழக் கூடிய சூழலை ஏற்படுத்தித் தருவது மட்டுமல்லாமல் மக்களின் இயல்பான வாழ்விற்கு விரைவில் அரசியல் தீர்வு காணப்படுமென்றும் அதற்காக தமது கட்சி தொடர்ந்து பாடுபடும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உறுதிபடத் தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் உரையாற்றும் போது ஆரம்பிக்கப்பட்ட இந்த ஏ9 வீதி அபிவிருத்திப் பணிகள் இந்த பிரதேசத்திற்கு மட்டுமல்லாமல் முழு நாட்டுக்குமே பயன்தரக் கூடியது என்றும் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் எல்லா மக்களும் இந்த மண்ணில் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்பதே எல்லோருடைய அபிலாசையாகவும் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கியமானவையாக அங்குள்ள வீதிகளே காணப்படுவதாகவும் இதனைக் கருத்தில் கொண்டே வட மாகாணத்திற்கான இந்த வீதியும் புனரமைக்கப்படவுள்ளதாகவும் இதன் மூலம் இங்குள்ள மக்கள் வியாபாரம் கல்வி உள்ளிட்ட எல்லா வகையான வசதிகளையும் இலகுவாகப் பெற்றுக் கொண்டு அபிவிருத்திப் பாதையில் பயணிக்க வேண்டும்.

இந்த நாட்டின் ஆயிரக்கணக்கான கிலோமீற்றர் நீளமான நெடுஞ்சாலைகளை புனரமைப்பது இன்றைய அரசாங்கமே என்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது பதவியேற்புக்கு இன்னும் 5 நாட்கள் இருக்கும் நிலையில் இந்த நிகழ்வில் கலந்து கொள்வது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்த அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அபிவிருத்திப் பணிகளுக்கான நிதியுதவி புரிந்த சீன அரசாங்கத்திற்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

தொடர்ந்து சீன நாட்டின் பிரதிநிதி எட்வின் ஜோன் கருத்துத் தெரிவிக்கும் போது ஏ-9 பாதை புனரமைக்கப்படுவதன் மூலம் இங்குள்ள மக்கள் பல்வேறுபட்ட பயன்களை பெற வேண்டும் என்பதுடன் இந்தப் பணிக்காக ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் தனது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.

முன்னதாக வெளிவிகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தேசியக் கொடியினையும் வடமாகாணக் கொடியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் சீன நாட்டின் தேசியக்கொடியினை சீனப் பிரதிநிதி எட்வினும் ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து வீதி அபிவிருத்தித் திட்டத்திற்கான அடிக்கல்லை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ திரைநீக்கம் செய்து வைத்தார்.

வடக்கின் வசந்தம் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள வீதி புனரமைப்புப் பணிகளின் தொடக்கமாக நாமல் ராஜபக்ஷ அவர்கள் கனரக வாகனத்தை இயக்கி வைத்ததைத் தொடர்ந்து மாணவர்களின் பான்ட் அணிவகுப்புடன் பிரதம அதிதிகள் உள்ளிட்ட அதிதிகளும் கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்ட நிகழ்விடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் வரவேற்புரையினை மாவட்ட அரச அதிபர் ரூபினி கேதீஸ்வரன் நிகழ்த்தினார்.

இன்றைய இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரகுமார் சில்வேஸ்த்திரி அலென்டின் உதயன் உதித்த லொக்குபண்டார ஸ்ரீரங்கா உள்ளடங்கலாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள் துறைசார் அதிகாரிகள் படை அதிகாரிகள் பொதுமக்கள் எனப் பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’