வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 22 நவம்பர், 2010

பயங்கரவாத நடவடிக்கைகளை ஜனநாயக நாடுகள் சகித்துக் கொள்ளமாட்டாது - ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்

யங்கரவாத நடவடிக்கைகளை ஜனநாயக நாடுகள் சகித்துக் கொள்ளமாட்டாது என ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இந்தியாவின் சதீஸ்கார் மாநிலத்தில் கொமன்வெல்த் அமைப்பின் ஆசிய பிராந்தியப் பிரிவும் இந்திய மாநிலங்களின் பிரிவும் நடாத்திய பிராந்திய சபாநாயகர்கள் மாநாட்டில் இலங்கையின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு சந்திரகுமார் அவர்கள் ஆற்றிய உரையின் முழுவடிவம்

பயங்கரவாதமும் நக்ஷலிசமும் என்கின்ற விடயம் குறித்து உங்கள் மத்தியில் பேசுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். நக்ஷலைட் அமைப்புக்கள் மாஓவின் கொள்கைகளைப் பின்பற்றும் ஒரு விவசாய சேனை என்பதையும் இந்தியாவில் இருபதுக்கும் மேற்பட்ட மாநிலங்கள் இந்த நக்~லைட்டுக்களால் பாதிக்கப்பட்டுள்ளன என்பதனையும் நாம் அறிவோம்.

இந்தியாவின் பல மாகாணங்களிலிருந்தும் இங்கு வருகை தந்துள்ள கௌரவ பிரதிநிதிகள் இந்த விடயம் பற்றிப் பேசுவார்கள் என நான் நம்புகிறேன்.

நான் ஒரு வெளிநாட்டுப் பிரதிநிதி என்ற வகையில் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் பற்றிப் பேசுவது பொருத்தமானதாக இருக்காது என்பது ஒரு நிலைப்பாடாகும்.

ஆயினும் உலகளாவிய பிரச்சினையாக வளர்ந்துள்ள பயங்கரவாதத்தைப் பற்றிய பொதுவான சில கருத்துக்களை இங்கே கூறலாம் என எண்ணுகிறேன்.

அபிவிருத்தி அடைந்த பல நாடுகளும் அபிவிருத்தி அடையாத நாடுகளும்கூட பயங்கரவாதத்தை எதிர்கொள்ள வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. பயங்கரவாதக் குழுக்கள் பலவகையான கோட்பாடுகளைப் பின்பற்றுவதாகச் சொல்லப்படுகின்றது. சில குழுக்கள் மதங்களையும் மேலும் சில இனத் தீவிரவாதத்தையும் அடிப்படையாகக் கொண்டே செயற்படுகின்றன.

யுக்திபூர்வமாக செயலாற்ற விரும்பாத சலன போக்குடையவர்கள் அவர்களது இலக்குகளை எட்டுவதற்காக பயங்கர வாதத்தையே ஆயுதமாக எடுத்துக்கொள்கிறார்கள். தங்களை நியாயப்படுத்த பல காரணங்களையும் விளக்கங்களையும் முன்வைக்கிறார்கள்.

சமமற்ற நடத்துமுறை அல்லது அடக்குமுறை செயற்பாடுகளைக் காரணங்களாகக் காட்டுகிறார்கள். சில இனக் குழுக்கள் அல்லது பயங்கரவாத சமயக் குழுக்கள் தாங்கள் வேற்றுமையாக நடாத்தப்படுவதாக குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் ஒன்றுமாத்திரம் தெளிவாகிறது. பிரதிநிதித்துவ ஜனநாயக முறைக்கு பயங்கரவாதம் எதிரானது என்பதால் எந்த சூழ்நிலைகளிலும் பயங்கரவாத நடவடிக்கைகளை ஜனநாயக நாடுகள் சகித்துக் கொள்ளமாட்டாது.

அவர்களது காரணங்கள் எதுவாக இருந்தாலும் ஜனநாயக வழியில் தெரிவு செய்யப்பட்ட அல்லது சட்டபூர்வமாக அமைக்கப் பட்ட அரசாங்கங்களே பயங்கரவாதிகள் முன்வைக்கும் காரணங்களுக்கு தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டியவர்களாவர்.

பாராளுமன்ற ஜனநாயகமானது மக்களின் பிரதிநிதித்துவம் என்கின்ற எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்டது. சுதந்திரமான நேர்மையான தேர்தல்கள் மூலம் அமைக்கப்படுகின்ற அரசுகள் நீதியான ஆட்சியை நடாத்துவதற்கு மக்களது ஆணையைப் பெறுகின்றன. ஆனால் பயங்கரவாத நடவடிக்கைகளின் தாக்கத்தால் மக்கள் தங்களது ஜனநாயக உரிமைகளைப் பாவிக்க முடியாதவர்களாகப் பல நாடுகளில் உள்ளனர்.

பயங்கரவாதிகள் ஒரு பய மனோநிலையை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதால் மக்களது சுதந்திரம் பெருமளவு முடக்கப்படு கின்றது. சுதந்திரமான ஒரு சூழல் நாட்டில் நிலவுவது ஜனநாயகம் செழிப்பதற்கான பிரதான காரணியாகும்.

உலகின் பல பாகங்களிலும் பலவிதமான வடிவில் பயங்கரவாதங்கள் உள்ளன. எது எப்படியாயினும் ஒன்று மட்டும் அனைத்துப் பயங்கரவாதிகளுக்கும் பொதுவானதாக உள்ளது. அரசியல் கொலைகள் ஆட்கடத்தல் போன்ற வெறுக்கத்தக்க செயல்தான் அதுவாகும். பயங்கரவாத அமைப்புகள் பொறுப்பற்ற முறையில் சிறுவர்களை நிர்ப்பந்தப்படுத்தி தமது இயக்கங்களில் சேர்த்தல் பொதுப் போக்குவரத்துக்கு குண்டு வைத்துத் தகர்த்தல் கொலைகளைச் செய்வதற்கு தற்கொலைக் குண்டுதாரிகளை ஏவுதல் ஆகியனவே உலகம் பூராகவுமுள்ள பயங்கரவாதிகள் கையாளும் பொதுவான தந்திரோபாயங்களாகும்.

ஜனநாயகத்தை எள்ளளவேனும் பயங்கரவாதிகள் கருத்திற்கொள்வதில்லை என்பது சொல்லித் தெரியவேண்டிய விடயமல்ல.

பயங்கரவாதத்திற்கு சர்வதேச அல்லது பிராந்திய ரீதியிலான தொடர்புகள் உள்ளதால் சில நாடுகளினுள் பயங்கரவாதத்தை சமாளிக்கமுடியாத நிலை ஏற்படுகின்றது. எல்லை தாண்டிய பயங்கரவாதமும் இன்றைய சமகால உலக நிகழ்வாகும். அவர்களுடைய தங்குமிடங்கள் பாதுகாப்பான பதுங்கு குழிகள் அவர்களுக்கான பயிற்சி வசதிகள் என்பன அயல்நாடுகளில் மாத்திர மன்றி அவர்களை வளர்த்துவிடும் தூர நாடுகளிலும் உள்ளன. வெளிநாடுகளில் வௌவேறு பெயர்களில் உள்ள அமைப்புகளின் மூலம் அவர்கள் செயற்படுகிறார்கள்.

பணம் சேகரித்தல் ஆயுதக் கொள்வனவு ஆட்கடத்தல் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் என்பன சர்வதேச மட்டத்தில் நடைபெறுகின்றன. சில பயங்கரவாதிகள் சர்வதேச சட்டவிரோத கும்பலின் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.

அவர்களது நன்கறிந்த மற்றுமொரு தந்திரம் வெளிநாடுகளில் அரசியல்வாதிகள் அதிகாரிகள் மற்றும் காவற்துறையினரை பணம் கொடுத்து வாங்குவதாகும். இதுபோன்ற செயற்பாடுகளுக்காக பயங்கரவாதிகள் பெருமளவு பணத்தைச் செலவிடவும் தயங்குவதில்லை. இவர்களினால் பணத்திற்கு வாங்கப்படுபவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவப் பயன்படுத்தப்படுகிறார்கள்.

மற்றொரு வகையில் சொல்வதானால் பயங்கரவாதிகள் தமக்கான பெரும் நன்மைகளை எதிர்பார்த்து அவர்களது சர்வதேச வலைப் பின்னலை விரிவாக்குவதற்கு முக்கியத்துவம் தருகிறார்கள். அரச பயங்கரவாதமும் ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல என்பதையும் நான் இங்கு கூறிக்கொள்ள விழைகின்றேன். பயங்கரவாத்தை அழிக்கும் நடவடிக்கைகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனிதாபிமான சட்டங்களுக்கு அமைவாக அரசாங்கங்கள் நடந்துகொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்களைப் பாதுகாப்பதற்கு வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கங்கள் மேற்கொள்ள வேண்டும். அதேவேளை அரச படைகளின் அத்துமீறல்களைத் தடுப்பதும் அரசுகளின் கடமையாகும். அனைத்து நாடுகளும் இது தொடர்பாக எவ்வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை சுருக்கமாகச் சொல்லி எனது உரையை முடித்துக்கொள்ள விரும்புகிறேன்.

உலகளாவிய ரீதியில் பயங்கரவாதத்தை அழிப்பதில் நாம் கரிசனை உள்ளவர்களாக இருந்தால் பெருமளவிலான சர்வதேச பங்களிப்பு அவசியமாகிறது. சிறிய பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிராகவும், கடும் சட்டங்களை உபயோகிப்பதும் முதல் தேவையாகும்.

நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பயங்கரவாதிகளுக்கு உதவி செய்வதை நாடுகள் கைவிடவேண்டும். தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுதல் பணம் சேகரிக்கும் நடவடிக்கைகளை தடைசெய்தல் மற்றும் ஆயுதக் கொள்வனவைத் தடுத்தல் போன்ற செயற்பாடுகளின் மூலம் பயங்கரவாதத்தைத் தடுக்க முடியும் என நான் நம்புகிறேன்.

இந்த மாநாட்டில் இந்திய மக்களவை சபாநாயகர் மீராகுமார் மாநிலங்கள் அவை சபாநாயகர் இரு சபைகளினதும் பிரதி சபாநாயகர்கள் இந்தியாவின் அனைத்து மாநில சபாநாயகர்கள் பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகர் பாகிஸ்தானின் நான்கு பிராந்திய சபைகளினதும் சபாநாயகர்கள் சதீஸ்கார் மாநில முதலமைச்சர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’