வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 16 நவம்பர், 2010

'அரசுக்கு 1.76 லட்சம் கோடி இழப்பு'

தொலைத் தொடர்புத் துறையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் எனப்படும் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில், பிரதமரின் அறிவுரையைப் புறந்தள்ளிவிட்டு, விதிமுறைகளை மீறி அனுமதி வழங்கப்பட்டதால், அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக சிஏஜி எனப்படும் இந்திய கணக்குத் தணிக்கை ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக சிஏஜி ஆய்வறிக்கை, செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
தொலைத் தொடர்புத்துறை தனது துறையின் நெறிமுறைகளைக் கூட பின்பற்றாமல், முறையற்ற ஒதுக்கீடுகளை மேற்கொண்டதால், அனில் அம்பானியின் நிறுவனம் உள்பட பல நிறுவனங்களுக்கு தேவைக்கு அதிகமான பலன்கள் கிடைத்திருப்பதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அது தொடர்பாக விரிவாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் துணை கணக்குத் தணிக்கை அதிகாரி ரேகா குப்தா.
அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பிரதமரின் அறிவுரை புறந்தள்ளப்பட்டதாக அவர் கூறும்போது, அலைக்கற்றைக்கான கட்டணத்தை நிர்ணயிப்பதில் நியாயமான நேர்மையான முறை கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும், நுழைவுக் கட்டணத்தை மாற்றியமைப்பதன் அவசியம் குறித்தும் பிரதமர் தெரிவித்த யோசனைகள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சகத்தால் பின்பற்றப்படவில்லை என்றும், 2001-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை 2008-ம் ஆண்டு அமல்படுத்துவது ஏன் என்று நிதியமைச்சகம் எழுப்பிய கேள்வியையும் தொலைத்தொடர்பு அமைச்சகம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் தெரிவி்த்தார்.
அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக, அதிகாரமளிப்பு சிறப்பு அமைச்சர்கள் குழுவை அமைக்க வேண்டும் என்ற சட்ட அமைச்சகத்தின் யோசனையையும், நிராகரித்த தொலைத் தொடர்பு அமைச்சகம், தனது துறையின் விதிமுறைகளைக் கூட முறையாகப் பின்பற்றவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளது.
விதிகளை மீறி, உரிமம் வழங்கப்பட்டாலும், அந்த உரிமங்களைப் பெற்ற 122 நிறுவனங்களில் 85 நிறுவனங்களுக்கு தகுதியே இல்லை என்றும் சிஏஜி குற்றம் சாட்டியுள்ளது. அந்த நிறுவனங்களில் பல, தொலைத் தொடர்புத்துறைக்கே தொடர்பில்லாதவை என்றும், ரியல் எஸ்டேட் மற்றும் மென்பொருள் துறையோடு தொடர்புடையவை என்றும் சிஏஜி அறிக்கை கூறுகிறது.
மிகக்குறைந்த கட்டணத்தில் உரிமங்களைப் பெற்ற பல நிறுவனங்கள், சில மாதங்களுக்கு முன்புதான் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், தான் பெற்ற அந்த உரிமங்களை, விதிகளுக்கு மாறாக, மிகக்குறுகிய காலத்தில் பெருமளவு லாபத்துக்கு இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்றுவிட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதிமுறை மீறல்களுக்கும், அரசுக்கு பெருமளழு இழப்பீடு ஏற்படுவதற்கும் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசாதான் பொறுப்பு என்று குற்றம் சாட்டப்பட்டு்ள்ள நிலையில், அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாகவே அவர் பதவி விலகியிருக்கிறார். சிஏஜி அறிக்கை குறித்து இன்று செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த ஆ. ராசா, 1999-ம் ஆண்டின் தேசிய தொலைத் தொடர்புக் கொள்கை அடிப்படையில்தான் நான் எல்லா முடிவுகளையும் எடுத்ததாகவும், ஏதாவது நடைமுறைத் தவறுகள் இருந்தால் விசாரணை நடக்கட்டும் என்றும் தெரிவித்தார்.
இதனிடையே, ஆ. ராசா மீது வழக்குத் தொடர அனுமதி கேட்டு கடந்த 2008-ம் ஆண்டு ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி அனுப்பிய கோரிக்கை மனு தொடர்பாக பதிலளிக்க பிரதமர் 16 மாதங்கள் எடுத்துக் கொண்டது ஏன் என்று இந்திய உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’