இலங்கையின் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் அடிப்படையிலான ஓர் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுத் திட்டம் ஒரு நிரந்தர அரசியல் தீர்வுக்கான சூழ்நிலையை ஏற்படுத்துமென எதிர்பார்ப்பதாகவும், இத்தகைய பேச்சுவார்த்தையொன்று எல்லா சமூகங்களினதும் பங்களிப்புடன் விரைவில் ஆரம்பமாகும் என நம்புவதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், பொருளாதார அபிவிருத்திக்கான அமைச்சர் பசில் ராஜபக்ச, இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் ஆகியோர் சகிதம் யாழ்ப்பாணத்திற்கு சென்றடைந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, யாழ்ப்பாணத்தில் பலாலி வீதி கந்தர் மடத்தில் இந்திய துணைத் தூதரக அலுவலத்தை திறந்து வைத்திருக்கின்றார்.
இந்த வைபவத்தில் உரையாற்றிய அவர், இலங்கையின் ஆயுதப் போராட்டத்தின் முடிவு, பிரச்சினைகளைப் புரிந்துணர்வுடன் அணுகி, உண்மையான தேசிய நல்லிணக்கத்தை நோக்கிய நகர்வுக்கான அரிய சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நடந்து முடிந்துள்ள இறுதி யுத்தத்தையடுத்து இடம்பெயர்ந்த மக்களுக்கு இந்தியா வழங்கிய அவசர உதவிகள், மற்றும் இடம்பெயர்ந்த மக்களுக்கான மீள்குடியேற்றத்தின்போது தேவைப்பட்ட அவசர உதவிகள் என்பவை பற்றி குறிப்பிட்ட அவர், வடபகுதியின் அபிவிருத்திக்கான பல்வேறு வேலைத்திட்டங்களுக்கு இந்தியா தொடர்ந்து உதவிகளை வழங்கும் எனவும் தெரிவித்திருக்கின்றார்.
கொழும்பு – தூத்துக்குடி மற்றும் தலைமன்னார் - இராமேஸ்வரம் கப்பல் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
யாழ் மாவட்ட விவசாயிகளுக்கான உழவு இயந்திரங்கள், விதை தானியங்கள் என்பவற்றையும் அவர் வழங்கினார். அத்துடன் யாழ்ப்பாணம் அரியாலை நாவலடியில் இந்திய உதவியோடு மீள்குடியேறிய மக்களுக்கான வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல்லையும் அவர் நாட்டி வைத்தார்.
அதன் பின்னர் மதவாச்சியில் இருந்து தலைமன்னாருக்குச் செல்லும் ரயில் பாதையை அமைப்பதற்கான வேலைத்திட்டத்தையும் எஸ்.எம்.கிருஷ்ணா ஆரம்பித்து வைத்திருக்கின்றார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வைபவங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ் மாவட்டத்தின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’