தமிழ்நாடு மொட்டமலை எனும் இடத்திலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் தங்கியுள்ள முகாமொன்றில் ஏற்பட்ட தீயினால் 120 இற்கும் அதிகமான வீடுகள் தீக்கிரையானதாக தமிழக பொலிஸார் இன்று சனிக்கிழமை தெரிவித்துள்ளனர்.
இன்று மாலை ஏற்பட்ட தீயினால் முகாமிலுள்ள அனைத்து வீடுகளும் முற்றாக அழிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இதனால் உயிரிழப்புகளோ காயங்களோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. எனினும், சுமார் 2 லட்சம் இந்திய ரூபா பெறுமதியான உடமைகள் அழிந்துள்ளன.
மின்னொழுக்கு காரணமாகவே இத்தீ பரவத் தொடங்கியிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். முகாமுக்கு அருகிலுள்ள ராஜபாளையம் மற்றும் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆகிய இடங்களிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் அழைக்கப்பட்டு சுமார் இரு மணித்தியாலங்களின் பின்னர் தீ அணைக்கப்பட்டது.
தமிழக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் முகாமுக்கு இன்று விஜயம் செய்து உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள், சேலைகள் என்பனவற்றை வழங்கினார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 2000 ரூபா பணமும் 5 கிலோ அரிசி மற்றும் 2 லீற்றர் மண்ணெண்ணெய் என்பனவற்றை வழங்குமாறு தமிழக முதல்வர் மு.கருணாநிதி உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’