இவ்வாறானவர்களில் ஒருவரான சிவனேஸ்வரன் செல்வமதி யுத்த மோதல்களில் சிக்கி இரண்டு தடவைகள் காயமடைந்துள்ளார். கிளிநொச்சி சண்டைகளின் போது வீதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, எறிகணை வீச்சில் காயமடைந்த அவருக்குத் தலையில் பாய்ந்துள்ள எறிகணையிலிருந்து வெடித்துச் சிதறிய இரும்புத் துண்டினை வெளியில் எடுக்க முடியாத நிலை உள்ளது.
இறுதிச் சண்டைகளின் போது, முள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்து கொண்டிருந்த எறிணைச் சண்டைகளில் சிக்கிய அவர், இரண்டாம் முறையாகக் காயமடைந்துள்ளார். கைகள், கால்கள், வயிற்றுப்பகுதியில் அவருக்குக் காயம் ஏற்பட்டதுடன் பல குண்டுச் சிதறல்களும் உடலில் பாய்ந்துள்ளன. கிளிநொச்சியில் ஏற்பட்ட காயம் காரணமாக இவரது மூளையில் ஏற்பட்டுள்ள கட்டியை அகற்றுவதற்கான சிகிச்சைகளைச் செய்வதற்கு இந்தத் துண்டுகள் தடையாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்தச் சம்பவத்தின் போது, காணாமல் போன இவரது கணவனுக்கு ஒன்றரை வருடங்கள் கழிந்த நிலையிலும் என்ன நடந்தது, எங்கு இருக்கின்றார் என்பது தெரியாத நிலையில் செல்வமதி தவிப்புக்கு உள்ளாகியிருக்கின்றார்.
இராசலிங்கம் பஜிதா. |
இதேபோன்று ஒன்பது பேர் அடங்கிய குடும்பத்தைச் சேர்ந்த 23 வயதான இராசலிங்கம் பஜிதாக்கு எறிகணை வீச்சில் ஏற்பட்ட காயத்தினால் வலது கை எலும்பு முறிந்துள்ளது. ஒன்றரை வருடங்களாக சிகிச்சை பெற்று வரும் இவருக்கு வெளியில் தெரியும் வகையில் அன்ரெனா எனப்படும் ஒருவகை கம்பி பொருத்தப்பட்டுள்ளது. மாதந்தோறும் கொழும்பிற்கு கிளினிக் சிகிச்சைக்குச் சென்று வருவதற்கான வசதியின்றி அவர் வாடுகின்றார். இவர்களைப் போன்று பலர் பாதிப்புகள் காரணமாக பெரும் கஸ்டமடைந்துள்ளார்கள்.
இறுதிச் சண்டைகளின்போது பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் காயமடைந்து முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து கடல் வழியாக அனைத்துலகச் செஞ்சிலுவைக் குழுவினரால் அழைத்து வரப்பட்டு இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த வைத்தியசாலைகள் பலவற்றில் சேர்க்கப்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் பெரும் பாதிப்புக்குள்ளானவர்கள் எத்தனைபேர் என்பது குறித்து இன்னும் துல்லியமான தகவல்கள் வெளியாகவில்லை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’