வடபகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள பாரிய நீர்வழங்கல் திட்டமானது இன்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கமைவாக வடபகுதிக்கான புதிய நீர்வழங்கல் திட்டப்பணிமனையும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
.அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா டியு குணசேகர மற்றும் டினேஷ் குணவர்த்தன ஆகியோர் தலைமையில் இன்று காலை யாழ். செயலக வளாகப்பகுதியில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன. புதிதாக அமைக்கப்பட்டுள்ள நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நீர்வழங்கல் திட்டப்பணிப்பாளர் பணிமனைக்கு வருகைதந்த அமைச்சர்களும் ஏனைய பிரமுகர்களும் மங்கல வாத்திய இசையுடன் மலர்மாலை அணிவித்து அழைத்துச் செல்லப்பட்டதுடன் சிறுமிகளின் வரவேற்பு நடனமும் இடம்பெற்றது. மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து நீர்வழங்கல் திட்டப்பணிப்பாளர் பணிமனையினை அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா மற்றும் டினேஷ் குணவர்த்தன ஆகியோர் நாடாவெட்டி திறந்துவைத்தனர்.
இதனைத் தொடர்ந்து நீர்வழங்கல் திட்டப்பணிப்பாளர் பணிமனையில் வடபகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள பாரிய நீர்வழங்கல் திட்டம் தொடர்பான விளக்கவுரை மற்றும் பொதுக்கூட்டம் என்பன இடம்பெற்றன. இதில் பிரதான விளக்கவுரை நிகழ்த்திய திட்டப்பணிப்பாளரும் வடபிராந்திய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் உதவிப் பிராந்திய முகாமையாளருமான பாரதிதாசன் வடபகுதிக்கான பிரதான நீர்வழங்கல் திட்டமான இரணைமடு திட்டம் குறித்து ஒளியூட்டல் படமூலமாக விளக்கமளித்தார். குறிப்பாக இரணைமடுவிலிருந்து தீவகம் உள்ளிட்ட முழு யாழ் குடாநாடு மற்றும் பூநகரிக்கான நீர்வழங்கல் திட்டம் எவ்வாறு மேற்கொள்ளப்படும் என தெளிவாக விளக்கமளித்தார். அதிலும் குடாநாட்டிலுள்ள 643459 பொதுமக்கள் பயனடைப்போவது குறித்தும் புள்ளிவிபரங்களுடன் தெரியப்படுத்தினார்.
திட்டப்பணிப்பாளரின் விளக்கவுரையினைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய அமைச்சர் டினேஷ் குணவர்த்தனா மேற்படி நீர்வழங்கல் அபிவிருத்தி திட்டம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கொண்டுள்ள அக்கறையினை பெரிதும் பாராட்டினார். முக்கியமாக இரணைமடு நீர்வழங்கல் திட்டத்தினால் கிளிநொச்சி விவசாயிகள் எவ்வகையிலும் பாதிக்கப்படமாட்டார்கள் என்பதை திட்டவட்டமாக தெரியப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வடபகுதி மக்களின் நீர்தேவை குறித்து அமைச்சர் டினேஷ் குணவர்த்தன கொண்டுள்ள கரிசனை குறித்து எடுத்துக் கூறியதுடன் இத்திட்டம் தொடர்பாக அமைச்சர் அடிக்கடி தன்னுடன் உரையாடி வருவது குறித்தும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இந்நிகழ்வில் யாழ். மாவட்ட ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்டின் உதயன் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் அமைச்சின் செயலாளர் அபே குணவர்த்தன நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் ஹெட்டியாராய்ச்சி பொது முகாமையாளர் டுலிப் குணவர்த்தன பிரதிப் பொது முகாமையாளர் யாப்பா ஆகியோருடன் அமைச்சு அதிகாரிகள் அரச அதிகாரிகள் சபை ஊழியர்கள் மற்றும் கல்விமான்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’