வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 29 அக்டோபர், 2010

நல்லாட்சிக்கான பயணத்தில் இணைந்துகொள்ளுமாறு ஜனநாயக விரும்பிகளுக்கு ஐ.தே.க. அழைப்பு

னநாயகம் சட்டம் ஒழுங்கு நீதி நியாயம் என அனைத்தும் இன்றைய அரசாங்கத்தினால் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. இவற்றை உறுதிப்படுத்தி அச்சமில்லா சூழலையும் மக்களை வாழ வைக்கின்ற நல்லாட்சியையும் ஏற்படுத்துவதற்கென ஆரம்பித்துள்ள எமது பயணத்தில் ஜனநாயக விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் என சகலரும் இன மத கட்சி பேதமின்றி இணைந்து கொள்ள வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

நாட்டைப் பாதுகாப்பதற்கும் அதேநேரம் கட்சியை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்வதற்குமான ஐக்கிய தேசியக் கட்சியின் கிராமத்துக்கான பயணம் நாளை சனிக்கிழமை ஹொரணையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவிருப்பதாகவும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது. எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அக்கட்சியின் பிரதித் தலைவரும் எம்.பியுமான கரு ஜயசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்,

ஐக்கிய தேசியக் கட்சிக்கான பலமும் தைரியமும் கிராமங்களிலேயே தங்கியுள்ளது. எனவே எமது முன்னாள் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ஜே. ஆர். ஜயவர்த்தனவின் போதனைக்கமைய கட்சியை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்ல வேண்டுமானால் ஐக்கிய தேசியக் கட்சி கிராமத்துக்கே செல்ல வேண்டும். அதனையே நாம் இன்று ஆரம்பித்திருக்கின்றோம்.
இன்றைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு மத்தியில் எமது இந்த செயற்றிட்டம் மிகவும் சவால் மிக்கதாகவே இருக்கின்றது. எமக்கு இடையூறுகளை ஏற்படுத்துவதற்கு அதிகமான ஏதுக்கள் இருக்கின்றன. இருந்த போதிலும் அதுபற்றி நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அரசாங்கத்திடமிருந்து எத்தகைய அச்சுறுத்தல்கள், இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டாலும் நாம் பின்னிற்கப் போவதில்லை.

சரத் பொன்சேகா

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இன்று அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்டிருந்தாலும் அவர் இந்நாட்டை பயங்கரவாதத்திடமிருந்து மீட்டவர். எனவே இந்நாட்டை மீட்ட இராணுவ வீரர் என்ற வகையில் ஐக்கிய தேசியக் கட்சி அவருக்கு உரிய கௌரவத்தையும் மரியாதையையும் செலுத்தி வருகின்றது. இன்று அவரது நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது. அவரை சிறையில் இருந்து விடுவித்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். எனவே சரத் பொன்சேகா விடயத்தில் நீதியையும் நியாயத்தையும் எதிர்பார்க்கின்ற சகல தரப்பினரும் எமது பயணத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறேன்.
இன்று பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் திராணியற்ற அரசாங்கம் குண்டர்களைக் கொண்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

நாட்டில் வேலையில்லாப் பிரச்சினை தலைதூக்கியுள்ளது. விலைவாசி அதிகரிப்பு, வருமானமின்மை மற்றும் வாழ்க்கைச் சுமை ஆகியவற்றில் ஒடுக்கப்பட்டுள்ள மக்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் முடியாத சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல் அதிகரித்து வருகின்றது. மொத்தத்தில் இந்நாட்டில் சட்டம் ஒழுங்கு இல்லை. ஜனநாயகம் இல்லாதொழிக்கப்பட்டு விட்டது.
இந்த நிலையில் நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி அச்சமில்லாத சூழலில் நல்லாட்சியொன்றை ஏற்படுத்தி மக்களை நிம்மதியாக வாழ வைக்க வேண்டிய பொறுப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருக்கின்றது.
அந்த வகையிலேயே ஐக்கிய தேசியக் கட்சி கிராமத்துக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளது. இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு நீதி நியாயம் மற்றும் நல்லாட்சி மலர வேண்டுமானால் ஜனநாயக விரும்பிகள் சகலரும் எமது பயணத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறேன் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’