பொதுமக்களுக்குத் தகவல்கள் வழங்கும் ஊடகவியலாளர்கள் தமது உயிரைப் பணயம் வைத்தே இன்று தொழில்புரிய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என சுதந்திர ஊடக அமைப்பின் ஏற்பாட்டாளர் சுனில் ஜயசேகர தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது காவற்துறையினர் தாக்குதல் நடத்தியமைக்கு ஐந்து ஊடக அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
அச்சம்பவத்தோடு தொடர்புபட்ட காவற்துறையினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவில் ஊடக அமைப்புக்கள் நேற்று கூட்டாக நடத்திய செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
"மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவற்துறையினர் இன்று அரசியல்வாதிகளின் அடிவருடிகளாகவும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றுகின்றவர்களுமாகவே செயற்படுகின்றார்கள்.
வியாழனன்று பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியமை, அங்கு செய்தி சேகரிக்கக் சென்ற ஊடகவியலாளர்களைத் தாக்கியமை தொடர்பாக புகைப்படங்கள், வீடியோப் படங்களுடனான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன. அவற்றை நாம் காவற்துறை மா அதிபருக்கும் ஊடகத்துறை அமைச்சருக்கும் சமர்ப்பிக்க உள்ளோம்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக உரிய முறையில் விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும்" என்றார்.
ஞானசிறி கொட்டிகொட
இலங்கை உழைக்கும் பத்திகையாளர் சங்கத்தின் தலைவர் ஞானசிறி கொட்டிகொட கருத்து தெரிவிக்கையில்,
"ஊடகவியலாளர்களையும் பல்கலைக்கழக மாணவர்களையும் தாக்கியமை தொடர்பில் பலம் வாய்ந்த அரசியல் பின்னணி உள்ளது. இல்லாவிட்டால் பகிரங்கமாக பொலிஸாரால் எப்படி இவ்வாறு தாக்குதல் நடத்த முடியும்?
மேற்படி சம்பவ இடத்தில் ஊடகவியலாளர்கள் அரசாங்க தகவல் திணைக்களத்தால் வழங்கப்பட்ட ஊடக அடையாள அட்டையைக் காண்பித்த போதும், அதனை அலட்சியம் செய்து, காவற்துறையினர் அவர்களைத் தாக்கியுள்ளனர். இவ்வாறு தாக்குதல் நடத்து வதானால், அதற்கான அதிகாரத்தை வழங்கியது யார்?" என்று கேட்டார்.
ஊடகவியலாளர் ஒருவர்
தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர்களில் ஒருவர் விபரிக்கையில்,
"நாங்கள் செய்தி சேகரிக்கச் சென்ற இடத்தில் காவற்துறையினர் பல பல்கலைக்கழக மாணவர்களைத் தாக்கினார்கள். அதனை பார்த்துக் கொண்டிருந்த எங்களை பொலிஸார் தகாத வார்த்தைகளில் திட்டியதுடன் அவ்விடத்திலிருந்து போகுமாறும் கூறினார்கள். நாம் அந்த இடத்திலிருந்து போகாததால் காவற்துறையினர் எங்களை கடுமையாகத் தாக்கினார்கள்" என்றார்.
அதேவேளை, ஊடக நிறுவனங்களுக்கெதிராகவும் ஊடகவியலாளர்களுக்கு எதிராகவும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும் அதனை மேற்கொள்வோருக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
இத்தகைய நிலைமையினை முடிவுக்குக் கொண்டு வருமாறு கோரி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.30 மணிக்கு லிப்டன் சுற்று வட்டத்தில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவு ள்ளதாகவும் அந்த அமைப்புக்கள் அறிவித்துள்ளன.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’