சர்வதேச ஆசிரியர் தினம் இன்று (05) கொண்டாடப்படும் நிலையில் எமது பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டடத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் திறந்து வைத்திருப்பது எமக்கு பெருமைதரும் விடயமாகும். இவ்வாறு வடமராட்சி கிழக்கு குடத்தனை அ.த.க.பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் அதிபர் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
சர்வதேச ஆசிரியர் தினமும் குடத்தனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை புதிய கட்டட திறப்புவிழாவும் இன்றையதினம் பாடசாலையில் சிறப்பாக இடம்பெற்றன. இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம அதிதியாக பங்குகொண்டு புதிய கட்டடத்தை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து புதிதாக திறக்கப்பட்ட கட்டட மண்டபத்தில் பாடசாலை அதிபர் எஸ்.செல்வநந்தன் தலைமையில் பொதுக்கூட்டம் இடம்பெற்றது.
ஆசிரியர் தியாக சோமஸ்கந்தராஜா குருக்களின் ஆசியுரையுடன் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அதிபர் எஸ்.செல்வநந்தன் சர்வதேச ஆசிரியர் தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. இந்நிலையில் எமது பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டடத்தை அதுவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முயற்சியினால் நிர்மாணிக்கப்பட்ட இக்கட்டடத்தை அமைச்சரவர்களே திறந்து வைத்திருப்பது எமக்கு பெருமைதரும் விடயமாகும். அமைச்சர் எமது பாடசாலைக்கு பலமுறை விஜயம் செய்து பல்வேறு உதவிகளைப் புரிந்துள்ளார். குறிப்பாக மக்கள் இடம்பெயர்ந்தபோதும் மீளக்குடியேற்ற நடவடிக்கைகள் இடம்பெற்றபோதும் அவர் அடிக்கடி இங்கு வந்துசென்றுள்ளார். அதனைத் தொடர்ந்தே பாடசாலையின் தேவைகருதி இப்புதிய கட்டடம் அவரின் முயற்சியால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பாடசாலை சமூகத்தினரும் இப்பிரதேச மக்களும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம் எனத் தெரிவித்தார்.
இவ்விழாவில் பிரதம உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பின்தங்கியுள்ள வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தியின் ஆரம்பகட்ட நடவடிக்கைகளில் ஒன்றே இப்புதிய கட்டடம் எனத்தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தைச் சேர்ந்த பத்து பாடசாலைகளுக்கு சீடிஎம்ஏ தொலைபேசிகள் வழங்கப்படவுள்ளதுடன் பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பான ஏனைய திட்டங்கள் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் இப்பாடசாலை மாணவர்களின் மதிய உணவில் முட்டை வழங்குவதற்கும் தாம் ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வடமராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர் செல்வராஜா உதவிக்கல்விப் பணிப்பாளர்கள் உதயகுமார் மற்றும் தில்லைநாதன் வடமராட்சி பொலிஸ் அத்தியட்சகர் சமரநாயக்க பருத்தித்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி லலித் பிரதேச கட்டளை அதிகாரி கப்டன் குமார வடமராட்சி ஈ.பி.டி.பி அமைப்பாளர் ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் வடமராட்சி கடற்றொழிலாளர் சம்மேளனத் தலைவர் எமிலியாம்பிள்ளை அயல்பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் ஆகியோருடன் பிரதேச மக்களும் நலன்விரும்பிகளும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’