தொழில் உறவுகள் மற்றும் உற்பத்தி மேம்பாட்டுத்துறை அமைச்சினூடாக யாழ். மாவட்டத்தில் பலதரப்பட்ட செயற்றிட்டங்கள் இன்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
தொழில் உறவுகள் மற்றும் உற்பத்தி மேம்பாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே பிரதி அமைச்சர் கலாநிதி ஜெகத் பாலசூரிய ஆகியோர் தொழில் அமைச்சின் செயற்பாடுகளுக்காக யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் இணைந்து பலதரப்பட்ட செயற்றிட்டங்களை இன்று ஆரம்பித்து வைத்தனர்.
இன்றுகாலை அமைச்சர்களும் அமைச்சு அதிகாரிகளும் பிரமுகர்களும் யாழ். முற்றவெளிப் பகுதியிலிருந்து நிகழ்வு இடம்பெற்ற வீரசிங்கம் மண்டபத்திற்கு பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர். அதிதிகளினால் மங்கல விளக்கு ஏற்றப்பட்ட நிலையில் சிறுமிகளின் வரவேற்பு நடனத்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. வரவேற்புரை நிகழ்த்திய தொழில் உறவுகள் மற்றும் உற்பத்தி மேம்பாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் மஹிந்த மடிகஹேவா வடபகுதியில் தாம் மேற்கொண்டுவரும் செயற்பாடுகள் மற்றும் ஆரம்பிக்கவிருக்கும் வேலைத்திட்டங்கள் குறித்த விரிவான உரையினை ஆற்றினார். தொழில் அமைச்சினூடாக வேலையற்ற இளைஞர் யுவதிகள் சுயதொழிலில் ஈடுபட்டு முன்னேறும் வகையில் அதனை ஊக்குவிப்பதே தமது பிரதான இலக்குகளில் ஒன்று என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதி தொழில் அமைச்சர் கலாநிதி ஜெகத் பாலசூரிய அவர்கள் சுமார் நாற்பது வருடங்களின் பின்னர் தாம் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளமை குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். தொழிலாளர்களுக்கு இன மத குல பேதம் இல்லை என்பதை ஆணித்தரமாக தெளிவுபடுத்திய பிரதி அமைச்சர் தொழிலாளர் குலம் என்பது ஒன்றே எனக்குறிப்பிட்டார்.
இன்றைய நிகழ்வில் சிறப்புரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எமது பிரதேசத்தில் தொழிலாளர் நலனுக்காகவும் தொழில்துறை மேம்பாட்டைக் கருதியும் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வந்திருக்கும் அமைச்சர் காமினி லொக்குகே பிரதி அமைச்சர் கலாநிதி ஜெகத் பாலசூரிய அமைச்சு அதிகாரிகள் அமைச்சின் ஏனைய துறைசார் அதிகாரிகள் ஆகியோருக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் மஹிந்த சிந்தனையானது அமைச்சர் காமினி லொக்குகே அவர்களினால் தொழில் உறவுகள் மற்றும் உற்பத்தி மேம்பாட்டுத்துறை ஊடாக வடபகுதியிலும் சிறப்பாக செயற்படுத்தப்பட்டு வருகின்றமை குறித்து தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டார்.
அமைச்சர் காமினி லொக்குகே அவர்கள் இன்றைய நிகழ்வில் சிறப்புரையாற்றியபோது வடபகுதி மக்களுக்காக நீண்ட காலம் சேவையாற்றிவரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சரவையிலும் சிறப்பாக பங்காற்றிவரும் ஒருவர். யாழ்ப்பாணத்தில் எமது வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே ஓர் உந்துசக்தியாக உள்ளார் எனத்தெரிவித்தார்.
அதிதிகளின் உரைகளைத் தொடர்ந்து தொழில் உறவுகள் மற்றும் உற்பத்தி மேம்பாட்டுத்துறை அமைச்சினூடான செயற்றிட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. முதலில் மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்தில் வன்செயல் காரணமாக வேலை இழந்தோருக்கு பணிக்கொடை நிவாரணம் வழங்கப்பட்டது. இதற்கென மொத்தம் 25 மில்லியன் ரூபா தொழில் அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் இன்றையதினம் முதற்கட்டமாக 25 ஊழியர்கள் தமது கொடுப்பனவிற்கான காசோலைகளைப் பெற்றுக் கொண்டனர். இதனைத்தொடர்ந்து சுயதொழிலில் ஈடுபடும் முகமாக ஐம்பது மகளிருக்கு ஆயிரத்து ஐநூறு ரூபா பெறுமதியான சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஊழியர் சேமலாப நிதியம் போன்ற கொடுப்பனவுகளுக்கான காசோலைகளும் உரியவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன. மேலும் தொழில் அமைச்சினால் மனிதவள தொழில் உறவுகள் குறித்து யாழ்;. பல்கலைக் கழகத்தில் நடாத்தப்பட்ட பயிற்சியில் பங்குகொண்டோருக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
மேற்படி காசோலைகள் சுயதொழில் உபகரணங்கள் சான்றிதழ்கள் என்பவற்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சர் காமினி லொக்குகே பிரதி அமைச்சர் கலாநிதி ஜெகத் பாலசூரிய யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் அமைச்சின் செயலாளர் மஹிந்த மடிகஹேவா மேலதிகச் செயலாளர்கள் குமாரதாச மற்றும் பத்மினி ரட்ணாயக்க மேலதிக தொழில் ஆணையாளர் வீரசிங்க வடபிராந்திய உதவித் தொழில் ஆணையாளர் குணபாலன் ஆகியோர் வழங்கி வைத்தனர்.
யாழ். மாவட்டத்தில் தொழில் அமைச்சின் செயற்பாடுகளுக்காக வருகை தந்திருக்கும் அமைச்சர் பிரதி அமைச்சர் மற்றும் அமைச்சு அதிகாரிகள் மத்திய வங்கி பிரதிநிதிகள் ஆகியோர் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி தொடர்பான யாழ். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் முகமாக நடமாடும் சேவையினையும் நடாத்தி தீர்வினை பெற்றுக் கொடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’