இலங்கையில் அடுத்த வருடம் மே மாதத்திற்குள் 2600 சிறுவர்களை பெளத்த பிக்குகளாக்கும் பிரதமர் டி.எம். ஜயரத்னவின் திட்டத்தை சிறுவர் உரிமை ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர்.
புத்த சாசனத்தை ஊக்குவிக்கவும் சிறார்களை வறுமையிலிருந்து காக்கவும் இந்தத்திட்டம் உதவும் வழிவகுக்கும் என பிரதமர் கருதுகின்றார்.
புத்த பகவான் ஞான நிலையை அடைந்த 2600வது வருடபூர்த்தி அடுத்த மே மாதம் அனுஷ்டிக்கப்படுகிறமையை முன்னிட்டு இந்த திட்டத்தை பிரதமர் முன்வைத்துள்ளார்.
இளம் பௌத்த துறவிகள் பல்கலைக்கழகம் வரை சென்று கற்பதற்கு நிதி உதவிகள் வழங்கவும், அவர்களின் குடும்பங்களை பொருளாதார ரீதியில் ஊக்குவிக்கவும் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் டீ.இம்.ஜயரட்ண பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால், சிறார்களை 10 வயது போன்ற மிகக்குறைந்த வயதி்ல் துறவறம் பூணச் செய்யும் திட்டத்திற்கு சமூக மற்றும் சிறுவர் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
18 வயதை அடையும் வரை சிறார்கள் அவர்களின் குழந்தைப் பருவத்தையும் இளமையின் குடும்பச் சூழலையும் அனுபவிக்கும் உரிமையை எவருக்கும் பறிக்க முடியாது என்பது சிறார் நல ஆர்வலர்களின் வாதம்.
மூத்த பெளத்தத் துறவிகள் இந்தத்திட்டத்திற்கு தமது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுமென ஜநாவின் சிறுவர் உரிமைகள் குழுவிற்கு இலங்கை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட டொக்டர் ஹிரந்தி விஜேமான்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
பணக்கார குடும்பத்துச் சிறார்கள் மிக அரிதாகவே இளவயதில் துறவறம் பூணுவதாக தெரிவிக்கின்ற டாக்டர் ஹிரந்தி, சிறார்களை துறவறம் பூணச்செய்வது அவர்களின் உரிமைகளை மீறுவதற்குச் சமம் என வாதிடுகின்றார்.
சிறார்கள் பாலியல் ரீதியில் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் நிலைக்கு இவ்வாறான சிறார் துறவறங்கள் வழிவகுக்கின்றது என்பது சமூக ஆர்வலர்களின் பரவலான வாதம்.
தமது பராமரிப்பில் உள்ள சிறார்களை பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் பௌத்த துறவிகள் பலர் கடந்த காலங்களில் இலங்கையின் தேசிய சிறார் பாதுகாப்பு அதிகாரசபையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கத்தோலிக்க மதத்தலைவர் பாப்பரசரை பகிரங்கமாக மன்னிப்பு கோரும் நிலைக்குத் தள்ளிய கத்தோலிக்க பாதிரிமாரின் சிறுவர் துஷ்பிரயோக சர்ச்சைகளைப் போன்ற நிலையை பொத்த விகாரைகளிலும் இடம்பெற அனுமதிக்கக்கூடாது என சிறார் பாதுகாப்பு அதிகாரசபையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ஹரேந்திர டீ சில்வா சுட்டிக்காட்டுகின்றார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’