மாகாண சபை தொடர்பான விவாதத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் கடந்த 5ம் திகதி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை
கௌரவ பிரதிச் சபாநாயகர் அவர்களே எமது பிரதேசமானது வடக்கு மாகாணமானது யுத்தத்தினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இம் மாகாணத்திலே மீள்குடியேறுவதற்கென வந்துள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத நிலையிலே வடக்கு மாகாண சபை காணப்படுகின்றது. ஒவ்வொரு நிதியாண்டிலும் எமது மாகாண சபைக்கென ஒதுக்கப்படும் நிதியானது முழுமையாக கிடைப்பதில்லை. இந்நிலையானது எமது மாகாண சபைக்கு மட்டுமல்ல ஏனைய மாகாண சபைகளுக்கும் பொருந்தும். எனினும் போரினால் அதிகளவு பாதிக்கப்பட்ட மக்கள் எமது மாகாணத்தில் மீள்குடியேறி வருகின்ற நிலையில் அவர்களுடைய தேவைகள் ஒப்பீட்டளவில் ஏனைய மாகாணங்களில் வாழ்கின்ற மக்களிலும் பார்க்க அதிகளவில் வேறுபட்டதாக இருப்பதனால் வட மாகாண சபைக்கு விசேட நிதி ஒதுக்கீடொன்றினைச் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நிதி ஒதுக்கீட்டின் போது ஒதுக்கப்படும் நிதியில் ஏனைய மாகாண சாபைகளுக்குப் போலவே வடமாகாண சகை;கும் வருட இறுதியில் வழங்கப்படும் நிதி வழங்கப்படுவதில்லை.
இன்று எமது மாகாண மக்கள் பல்வேறு துறைசார்ந்த நிறுவனங்களிடமிருந்து சேவைகளை எதிர்பார்த்து நிற்கின்றனர். குறிப்பாக கூட்டுறவுத் துறையைப் பொறுத்த வரையில் வடமாகாணத்திலுள்ள கூட்டுறவுச் சங்கங்களின் நிலைமை மிகவும் மோசமாக காணப்படுகின்றது. யுத்தத்திற்கு முன்பு கூட்டுறவுத்துறையிலே எமது மாகாணம் கொடி கட்டிப் பறந்தது. ஆனால் கடந்த கால யுத்தம் கூட்டுறவுத் துறையை முற்று முழுதாக அழித்து விட்டது. இதனை மீள் நிலைக்கு கொண்டு வருவதற்கு இலகுகடன் அடிப்படையில் நிதியுதவி வழங்கப்பட வேண்டுமென மத்திய வங்கியிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறு யாழ் மாவட்டத்திற்கு 329 மில்லியன் ரூபாயும் வவுனியா மாவட்டத்திற்கு 292 மில்லியன் ரூபாயும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 52 மில்லியன் ரூபாயும் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 274 மில்லியன் ரூபாயும் மன்னார் மாவட்டத்திற்கு 56 மில்லியன் ரூபாயுமாக மொத்தம் கிட்டத்தட்ட 1004 மில்லியன் ரூபாய் நிதி தேவைப்படுகிறன்து. மேலும் மன்னார் முல்லைத்தீவு கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களின் வாகனங்கள் அனைத்தும் யுத்தத்தினால் அழிக்கப்பட்டுவிட்டன. எனவே அச்சங்கங்களுக்குத் தேவையான வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்காக 96 மில்லியன் ரூபாய் தேவைப்படுகின்றது.
அவ்வாறே நாங்கள் அங்குள்ள சுகாதாரத் துறையினைத் எடுத்து நோக்குவோமாயின் மாகாண சுகாதாரத் திணைக்களமானது கடந்த யுத்த சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்து வாழ்கின்ற வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கான சம்பளக் கொடுப்பனவுகளை ஒருவருட காலமாகியும் அவர்களுக்குக் கொடுக்க முடியாத நிலையில் இருக்கின்றது. அதாவது, வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கான சம்பள நிலுவை கிட்டத்தட்ட 110 மில்லியன் ரூபாவும் தற்காலிக அடிப்படையில் கடமையாற்றும் பணியாளர்களுக்கான சம்பள நிலுவை கிட்டத்தட்ட 110 மில்லியன் ரூபாயும் தற்காலிக அடிப்படையில் கடமையாற்றும் பணியாளர்களுக்கான சம்பள நிலுவை கிட்டத்தட்ட 32 மில்லியன் ரூபாயும் வழங்கப்படவில்லை. மேலும் புதிதாக நியமனம் செய்யப்பட்ட தாதியர்களுக்கான கொடுப்பனவு கிட்டத்தட்ட 5.6 மில்லியன் ரூபாயும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கான சம்பள நிலுவை கிட்டத்தட்ட 3.1 மில்லியன் ரூபாயுமாக மொத்தம் கிட்டத்தட்ட 12 மில்லியன் ரூபாய் வழங்கப்பட வேண்டியுள்ளது. மேலும் அம்மாகாண கல்வித் திணைக்களத்தைப் பொறுத்தவரையில் இடம்பெயர்ந்த ஆசிரியர்களுக்கான சம்பள நிலுவை கிட்டத்தட்ட 110 மில்லியன் ரூபாயும் பதவி உயர்வினால் ஏற்பட்ட சம்பள நிலுவை கிட்டத்தட்ட 21 மில்லியன் ரூபாயும், பொறியியலாளர்களுக்கான சம்பள நிலுவை கிட்டத்தட்ட 3.7 மில்லியன் ரூபாயும் இன்னும் வழங்கப்படாமல் உள்ளன. இவை எல்லாமாக மொத்தமாக 289 மில்லியன் ரூபாய் வடமாகாண சபையின் சம்பள நிலுவையாக உள்ளது. ஏற்கனவே இவ்வருட நிதியொதுக்கீட்டில் 524 மில்லியன் ரூபாய் திறைசேரியினால் குறைப்புச் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்நிதியினை மீள வழங்குவதன் மூலம் நான் இங்கு குறிப்பிட்ட சுகாதார மற்றும் கல்வித் திணைக்கள ஊழியர்களுக்கான நிலுவைக் கொடுப்பனவை எம்மால் வழங்க முடியும்.
இன்று மீளக்குடியேறிய பகுதிகளில் எமது மக்கள் விவசாயத்தைப் பெரிதும் நம்பிக்கையுடன் மேற்கொள்கின்றார்கள் ஆனால் அவர்களது நெல்லைக் கொள்வனவு செய்து வைத்திருக்கக் கூடிய நெற்களஞ்சியங்களை மீளத் திருத்தியமைப்பதற்கு எமக்கு 81 மில்லியன் ரூபாய் தேவைப்படுகின்றது.
அடுத்து இங்கு நான் இன்னொரு விடயத்தை குறிப்பிட்டாக வேண்டும். அதாவது வட மாகாண சபையின் ஆளணிப் பிரச்சினை கிட்டத்தட்ட 34 உள்ளூராட்சிச் சபைகளைக் கொண்டது வட மாகாணம். இங்கு ஏராளமான அங்கீகரிக்கப்பட்ட வெற்றிடங்கள் நீண்டகாலமாகவே நிரப்பப்படாமல் இருக்கின்றன. யாழ்.மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளில் 1485 வெற்றிடங்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 166 வெற்றிடங்களும் மன்னார் மாவட்டத்தில் 336 வெற்றிடங்களுமாக மொத்தம் 2514 வெற்றிடங்கள் உடனடியாகவே நிரப்ப வேண்டிய கட்டாயத்தில் இந்த மாகாண சபை இருக்கின்றது. உள்ளூராட்சிச் சபைகள் மக்களுக்குச் சிறந்த சேவைகளைச் செய்ய வேண்டுமாயின் இந்த வெற்றிடங்களை நிரப்பியேயாக வேண்;டும். குறிப்பாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது பிரதேசத்தில் உள்ள ஆளணி வெற்றிடங்கள் நிரப்படாது போனால் அவற்றினால் மக்களுக்குச் சிறந்த சேவையினைச் செய்ய முடியாது.
அதுபோலவே, யாழ்.மாநகர சபை உட்பட்ட அந்த பிரதேச உள்ளூராட்சி சபைகளுக்கான அடிப்படைத் தேவைகள் நிறைய பூர்த்தி செய்யப்படாதிருக்கின்றன. மக்களின் அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அங்கு உடனடியாக 13 வாட்டர் பௌசர்களும் 13 கல்லி பௌசர்களும் மற்றும் ரெய்லருடன் உடன் கூடிய 13 டெக்டர்ஸ் களும் தேவைப்படுகின்றன.
சுகாதாரத்துறையைப் பொறுத்தவரையில் ஆங்கு ஆளணிப் பற்றாக்குறை மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கின்றது. வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பிரிக்க முன்னர் 2006 ஆம் ஆண்டு முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் அங்கு அனுமதிக்கப்பட்ட மொத்த ஆளணித் தொகை 11,293 ஆகும். டிசம்பர் மாதம் வடக்கு கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்ட போது வடமாகணத்துக்குத் தேவையான ஆளணி எண்ணிக்கை 5717 ஆகக் காணப்பட்டது. ஆனால் அந்த முழு ஆளணியும் நிரப்பப்படவில்லை. கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் நீண்டகாலமாக நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாகவே அங்கு ஆட்சேர்ப்புக்கள் எவையும் இடம்பெறவில்லை. 2008 ஆம் ஆண்டு இந்த ஆட்சேர்ப்பு அனுமதிக்காக கொழும்பிலுள்ள முகாமைத்துவ சேவைத் திணைக்களத்தை அணுகிய போதிலும் அக்காலப் பகுதியில் அங்கு 4187 பேர் கடமையாற்றிக் கொண்டிருந்தமையால் அனுமதிக்கப்பட்ட மொத்த ஆளணி 4187 மட்டுமே என்று அனுமதி வழங்கப்பட்டது தற்போது கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு மக்கள் மீண்டும் இயல்பு வாழ்வுக்குத் திரும்பிய நிலையில் அங்குள்ள வைத்தியசாலைகள் மீள இயங்க ஆரம்பித்திருக்கும் நிலையில் அங்கு நிரப்பப்படாது விடுபட்ட 1530 ஆளணியினரையும் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். இது போலவே அங்கு ஆசிரியர்களின் சம்பள நிலுவை வழங்கப்படாமையும் மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கின்றது. இது பற்றிய விபரமான அட்டவணையொன்றை ஹன்சாட் பதிவுக்காக இங்கு சமர்ப்பிக்கின்றேன்.
இதை விட எமது மாவட்டத்தில் நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் நியமனங்கள் வழங்கப்படாது புறக்கணிக்கப்பட்டமையும் நிர்வாகத்துறையில் பெரிய பிரச்சினையாக இருக்கின்றது.
அங்கு மாகாண சபைக்கென அங்கீகரிக்கப்பட்ட எஸ்.எல்.எ.எஸ் உத்தியோகத்தர்களுக்கான ஆளணி 66 ஆகும். இருந்த போதிலும் எமது மாகாணத்தில் எஸ்.எல்.எ.எஸ் உத்தியோகத்தர்கள் தற்பொழுது 16 பேர் மட்டுமே சேவையில் இருக்கின்றார்கள். எனவே மேலும் 52 எஸ்.எல்.எ.எஸ் அதிகாரிகளை அங்கு நியமிக்க வேண்டியிருக்கின்றது. அது போலவே இங்கு எஸ்.எல்.இ.எ.எஸ் உத்தியோகத்தர்களுக்கான பற்றாக்குறையும் நிறையவே இருக்கின்றது. 1992 ஆம் ஆண்டு தமிழ் பேசும் நிர்வாக உத்தியோகத்தர்களை உள்வாங்குவதற்கான ஒரு விசேட பரீட்சை நடத்தப்பட்டு அவ்வுத்தியோகத்தர்கள் உள்வாங்கப்பட்டார்கள். அதேபோல் வடக்கில் மீண்டும் நிர்வாக சேவை உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கான விசேட பரீட்சைகள் நடத்தப்பட்டு அந்த நிலைமை சீர்செய்யப்பட வேண்டும் என்பதையும் நான் இங்கு வலியுறுத்திக் கூறி விடைபெறுகின்றேன்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’